நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

 

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது.

காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி ஊர் கூடித் தேர் இழுக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். வந்த இளைஞர்களுக்குக் கணியத்தைப் பற்றிய அறிமுகத்தையும் சீனிவாசனைப் பற்றிய அறிமுகத்தையும் பயிலகம் பொறுப்பாளர் திரு. முத்துராமலிங்கம் கொடுத்தார்.

திருவிழா என்று இந்நிகழ்வுக்குப் பெயர் வைத்தது சாலப் பொருத்தம் என்பது போல, 4-5 பேர் என்ற அளவில் இருந்த எண்ணிக்கை, விறுவிறுவென நாற்பதைத் தொட்டது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மடிக்கணினி, இணையவசதியோடு வந்திருந்தது – தமிழுக்குத் தேவையான மென்பொருட்களைப் பட்டியலிட்டு அணி அணியாக வேலை செய்யப் பேருதவியாக இருந்தது.

 

பிறகு, தமிழுக்குத் தேவையான, நிரல் தொடர்பான வேலைகளைப் பட்டியலிட்டார் சீனிவாசன். மூன்று மூன்று பேராகப் பிரிந்து நிரலாக்கத்தில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து கொண்டோம். இளைஞர்களில் சிலர், எங்களுக்கு நிரலாக்கம் புதிது – நாங்கள் வேறு ஏதாவது செய்யலாமா? என்று கேட்ட போது – சரி! வாருங்கள்! கிம்ப்(GIMP)பைப் பயன்படுத்தி, நாம் மின்னூல் அட்டைகளை உருவாக்கலாம் என்று அவர்களையும் அரவணைத்துக் கொண்டார் சீனிவாசன்.

இதன் நடுவே, கணியத்தில் இருந்து கலீல், அன்வர், திவ்யா,நீச்சல்காரன், நரேந்திரன், முத்து என ஒவ்வொருவராக வந்து இளைஞர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பது, ஏற்கெனவே செய்து கொண்டிருந்த திட்டப்பணிகளில் தேவையான மாற்றங்களைச் செய்வது எனத் திருவிழா ஆரவாரத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார்கள்.

திருவிழா என்றால் தின்பண்டம் இல்லாமலா? அதிலும் ஒருபடி மேலே போய், மதிய உணவுக்குக் கணியமே பொறுப்பு என்று அன்போடு அறிவித்த போது, ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்னும் மன நிலைக்கு ஆளானார்கள் வந்திருந்த எல்லோரும்!

பிறகு, மதிய உணவிற்குப் பிறகும் நிரலாக்கம் தொடர்ந்தது. மாலையில் இளைஞர்களின் பின்னூட்டத்துடன் சீனிவாசன், முத்துராமலிங்கம், கலீல் மூவரும் அவர்களுடன் கலந்துரையாடிய பிறகு நிறைவுக்கு வந்தது நிரல் கொண்டாட்டம்!

திருவிழா துளிகள்:
* ஏறத்தாழ கலந்து கொண்ட அனைவருக்குமே இது தான் முதல் நிரல் திருவிழா!
* வந்திருந்த இளைஞர்கள் காலை முதல் மாலை வரை நிரலாக்கத்தில் ஈடுபட்டது இதுவே முதல் முறை! ஆனாலும் அலுப்பில்லாமல் ஆர்வத்துடன் பங்கேற்றனர் அனைவரும்!
* கலந்து கொண்டவர்கள் அனைவருமே கிட், ஓப்பன் தமிழ், கிம்ப் எனப் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிய அறிமுகத்தைத் தெரிந்து கொண்டார்கள்.
* open-tamil பைதான் நிரல் தொகுப்பு செய்யும் பணிகளை ஜாவா மொழியில் செய்வது எப்படி என்று அறிந்து கொண்டனர்
* தமிழுக்காக நிரல் எழுதலாம் என்பதே அனைவருக்கும் புது செய்தியாக இருந்தது.
* அதையும் அவர்களே செய்தது அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளித்தது.

பங்கு பெற்றோர் அனைவரும் தமது நிரல்களை கட்டற்ற மென்பொருட்களாக வெளியிடவும், Github.com ல் நிரல்களைப் பகிரவும் உறுதி கூறினர். அவர்கள் தாமாகவே git கற்று வருகின்றனர்.

 

— முத்து ராமலிங்கம் கிருஷ்ணன் – பயிலகம் – muthu1809@gmail.com

இதுவரை பகிரப்பட்ட நிரல்கள்
github.com/VibishnanSampath/Hackothon

github.com/Pravinms24/PaliyagamHackathon

 

அனைத்து புகைப்படங்கள்
photos.app.goo.gl/Y54rzwTZBkHatXbc9

செலவு
45 பேருக்கு மதிய உணவு – 3000

இடம், ஆதரவு தந்து உதவிய பயிலகம் நிறுவனத்திரக்கு நன்றிகள்.

– கணியம் குழு

%d bloggers like this: