எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing)

வானூர்தியில் பயணிகள் இருக்கை VR மாதிரி (model)

வானூர்தியில் பயணிகள் இருக்கை VR மாதிரி (model)

வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப் பிடிக்க முடியுமா? உயிர்க்காப்பு மிதவை (lifebelt) கைக்கெட்டிய தூரத்தில் உள்ளதா? பிரச்சனைகளைத் தீர்வு செய்து முழுத் திருப்தி அடைந்த பின்னர் இருக்கைகளை அவ்வாறே அமைக்கலாம்.

இம்மாதிரி பல விலையுயர்ந்த உற்பத்தி நடவடிக்கைகளில் வேலையைத் தொடங்குவதற்கு முன் வடிவமைப்பு பிழைகள் அல்லது மாற்றியமைக்க வேண்டிய பகுதிகளை VR மூலம் சரிபார்க்க முடியும். இது செலவைக் குறைக்கிறது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் (Tourism and Hospitality)

2015 இல் தொடங்கி கூகிள் குறிக்கோள் பயணங்கள் (Google Expeditions) என்ற பெயரில் சுமார் 1000 VR காட்சிகளை வெளியிட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 

இம்மாதிரி சுற்றுலா இடங்கள், அருங்காட்சியகங்கள், இயற்கைக்காட்சிகள், திருவிழாக்கள், உல்லாச விடுதிகள் ஆகியவற்றின் VR அனுபவத்தை இணையத்தில் வெளியிடலாம். வாடிக்கையாளர்கள் இவை எப்படி சுவாரசியமாக இருக்கும் என்பதை அனுபவித்த பின்னர் முன்பதிவு செய்ய ஊக்குவிக்க முடியும்.

சில்லறை விற்பனை (Retail)

வெப்பநிலை வரைபடமிடல் (heat mapping) என்பது சில்லறை விற்பனையில் மிகவும் பயன் படுத்தப்படும் தொழில்நுட்பம். கடையின் தோற்றத்தை VR காட்சியாகத் தயாரித்துக் கொண்டு, எந்தக் காட்சிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்பதற்கான விரிவான வரைபடத்தை இது வழங்குகிறது. ஆகவே சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் காட்சிப்படுத்தல், விளம்பரம் மற்றும் பெயர்ப்பலகைகள், கடை தளவமைப்புகளை சோதிக்கவும் மெருகேற்றவும் இது உதவுகிறது.

தரவை உருவகித்தல் (Data visualisation)

வட்ட விளக்கப்பட (pie chart) நாட்களிலிருந்து தரவை உருவகித்தல் நெடுந்தூரம் வந்துவிட்டது. பெருந்தரவு (Big Data) போன்ற சிக்கலான விவரங்களை VR இல் விரிவான மற்றும் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்த முடியும். பயனர்கள் தங்கள் தரவுகளை VR இல் பார்க்கலாம், பகுப்பாய்வு செய்யலாம், குழுவுடன் ஒத்துழைக்கலாம்.

நன்றி

  1. Airplane Cabin 3D model – CG Trader

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

போக்கிமான் கோ (Pokemon Go) என்ற திறன்பேசி விளையாட்டு இதைப் பிரபலமாக்கியது. மெய்யுலகத்தின் மேல் மெய்நிகர் மேலடுக்கு (virtual overlay). திறன்பேசி, கைக்கணினி அல்லது மூக்குக்கண்ணாடி தேவை.

ashokramach@gmail.com

%d bloggers like this: