கட்டற்ற மென்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் மென்பொருட்களை உடைத்து (crack) செய்து பயன்படுத்துவதால் வரும் கேடுகளைப் பற்றித் தெளிவு பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கட்டற்ற மென்பொருட்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பட்டியலில் நாம் ஏற்கனவே அறிந்த விஎல்சி, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற மென்பொருட்கள் சேர்க்கப்படவில்லை.
1 . பப்பி லினக்ஸ் (Puppy Linux)
இது மிகவும் பழைய கணினிகளில் உள்ள தகவல்களை காப்புப்படி (backup) செய்ய உதவும் நிகழ் இயங்குதளம் (live OS). இதனை இயக்க வெறும் 128 MB நேரடி அணுகல் நினைவகக் (RAM) கொள்ளளவு இருந்தாலே போதும். அவசரமாக இணையத்தை அணுக வேண்டும் என்றால் பப்பி லினக்சைப் பயன்படுத்தி வெறும் ஐந்தே நிமிடங்களில் அணுகலாம். அதே போன்று விண்டோஸ் இயங்குதளச் (Windows OS) செயல்பாட்டை இழந்து விட்டால் பப்பி லினக்சை நிறுவித் தகவல்களை எளிதாகத் திரும்பப் பெற்று விடலாம்.
விண்டோஸ் இயங்குதளத்திற்குக் கடவுச்சொல் கொடுத்திருந்தாலும் அதில் உள்ள தகவல்களை இது எளிதாக அணுகி மாற்றம் செய்து விடும்.
பதிவிறக்க இங்கே செல்லவும் – puppylinux.org/main/Download%20Latest%20Release.htm
2 . டாரிக்‘ஸ் பூட் அண்ட் நியூக் (Darik’s Boot and Nuke)
இந்த மென்பொருள் ஒரு கணினி வன்வட்டை (Hard disc) முழுவதுமாக அழித்து விடும். இந்த மென்பொருளை நாம் தொடக்குவட்டாகப் (BOOT CD ) பயன்படுத்த வேண்டும்.
வன்வட்டை உடனடியாக அழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த DBAN பெரும் உதவியாக இருக்கும். தகவல்களை அழித்தோம் என்றால் அதனை சில மீட்டமை மென்பொருட்களை (recovery software) பயன்படுத்தித் திரும்பப் பெற்று விடலாம். ஆனால், DBAN தேவையற்ற தொடர்பில்லாத புது தகவல்களை வன்வட்டில் பதிந்து விடும். இதன் மூலம் பழைய தகவல்கள் முற்றிலுமாக அழிந்து விடுகின்றன.
கீழே இருக்கும் இணைப்பில் உள்ள கோப்பினைப் பதிவிறக்கம் செய்து, ஒரு குறுந்தகடில் பதிந்து கொண்டு, தொடக்கு வட்டாக (BOOT CD ) இயக்கவும்.
பதிவிறக்க இங்கே செல்லவும் –
sourceforge.net/projects/dban/files/dban/dban-2.2.6/dban-2.2.6_i586.iso/download
3 . ட்ரூக்ரிப்ட் (TrueCrypt)
ஒரு கோப்பினை மறைக்குறியீடாக்கம் (encrypt) செய்ய உதவும் மென்பொருள். ஒரு தனி கோப்பாக இருந்தாலும் முழு உறையாக (folder) இருந்தாலும் இம்மென்பொருள் சிறப்பாக செயல்படும். ஒரு கோப்பினை மறைக்குறியீடாக்கம் செய்தபின் அதனை மறுபடியும் பார்க்க இதே மென்பொருளை பயன்படுத்தலாம். அதே கோப்பை மறைவிலக்கம் (decrypt) செய்ய ஒரு கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும்.
இந்த மென்பொருளை பேனா இயக்கியிலோ புற வன்வட்டிலோ (pen-drive or external hard disc) உள்ள கோப்புகளை மறைக்குறியீடாக்கம் செய்யவும் பயன்படுத்தலாம்.
பதிவிறக்க இங்கே செல்லவும் – www.truecrypt.org/downloads
4 . குனோம் – டு (Gnome – Do)
உபுண்டு பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய ஒரு மென்பொருள். பலர் விண்டோசைப் போன்று உபுண்டு அழகானது இல்லை என்று வதந்தியைப் பரப்பிக் கொண்டு இருகின்றனர். ஆனால், மெய்யாகவே மேக்கிற்கு (Mac) அடுத்து அழகான இயங்குதளம் உபுண்டு தான்.
Gnome -Do வைப் போன்ற சரியான மென்பொருட்களை பயன்படுத்தினால் உபுண்டுவின் அழகு மட்டுமன்றிப் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்து விடும். Gnome -Do வில் ஏகப்பட்ட தேர்வுகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த யூடியூப் காணொளியைப் பார்க்கவும் – www.youtube.com/watch?v=fI4d35MbpA0
பதிவிறக்க இங்கே செல்லவும் – do.davebsd.com/
5 . பிளீச்பிட் (Bleachbit)
விண்டோசில் எவ்வாறு தற்காலிகக் கோப்புகள் (temporary files) சேர்ந்து கொண்டு கணினியின் வேகத்தைக் குறைகின்றனவோ அதே போன்ற நிகழ்வு உபுண்டு இன்ன பிற லினக்ஸ் வழங்கல்களிலும் நடக்கும்.
விண்டோசில் இந்த தொல்லையை தீர்க்க CCleaner போன்ற மென்பொருட்கள் உள்ளன. அதற்கான கட்டற்ற வகை பதிலீடு தான் இந்த Bleachbit . உலவிகள், மென்பொருட்கள், நிறுவிகள் (installers) போன்றவை சேமிக்கும் அனைத்துத் தற்காலிகக் கோப்புகளையும் இம்மென்பொருள் உருத்தெரியாமல் அழித்துவிடும்.
பதிவிறக்க இங்கே செல்லவும் – bleachbit.sourceforge.net/
ஸ்ரீராம் இளங்கோ
காரைக்குடியில் பிறந்து, தமிழுடன் வளர்ந்து, சிதம்பரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 19 வயது பொறியியல் மாணவன். எனக்கு மொழிகள் மேல் அலாதி பிரியம் உண்டு. ஆங்கிலத்தை நான் சுவையான மொழியாக கருதினாலும் எனக்கு பேச சொல்லி கொடுத்த தமிழை ஒரு போதும் மறந்தது இல்லை.
இணையத்தில் என் தாய்மொழி இரண்டவது பிறப்பை சந்தித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி துணிகிறேன்.
எனது வலைத்தளம் – www.sriramilango.co.nr
மின்னஞ்சல் : sriram.04144@gmail.com