லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்

லினக்ஸ். இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம்.

வழக்கத்தில் உள்ள பிற இயங்குதளங்களான விண்டோஸ், யுனிக்ஸ், மெக்கின்டோஷ் போல அல்ல இது. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இன்றி, உலகெங்கும் உள்ள கணிப்பொறி அறிஞர்களால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

லினக்ஸ், அதன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளுக்காக, உலகெங்கும் உள்ள மக்களால், பயன்படுத்தப்படுகிறது.

  •  எளிமையான இடைமுகப்பு
  •  நிலையான இயக்கம்
  •  வைரஸில் இருந்து விடுதலை
  •  அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் உரிமை
  •  பல்லாயிரம் மென்பொருட்கள்
  •  தொடர்ந்த மேம்பாடுகள்

இவை போன்ற சிறப்புகள் வேறு எந்த இயங்குதளத்திற்கும் இல்லை. இதனால் லினக்ஸை பலரும் விரும்பி பயன்படுத்துகின்றனர்.

விலைமதிப்பற்ற பல மென்பொருட்களின் தொகுப்பான லினக்ஸ் என்ன விலைக்கு விற்க்கப் படுகிறது? யார் விற்கிறார்கள்? நான் எங்கே போய் வாங்குவது? என் ஊரில் கிடைக்குமா?

லினக்ஸ் பற்றி கேள்விப்படும் எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள் இவை. ஏன் என்றால், எல்லா வணிக மென்பொருட்களும் தமது விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுகின்றன. விற்பனை மையங்களை நாடெங்கும் அமைக்கின்றன. விற்பனை பிரதிநிதிகள் எல்லா அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அணுகி தமது மென்பொருட்களை விற்கின்றனர்.

லினக்ஸ் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு? வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, செய்திதாளிலோ எந்த விளம்பரமும் வருவதில்லையே!

ஆம். லினக்ஸ், எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல. உலகெங்கும் உள்ள பொது மக்களின் ஒட்டு மொத்த தயாரிப்பு. வணிக நோக்கம் ஏதும் இன்றி, மக்களின் பயன் மட்டுமே கருதி உருவாக்கப் படுவதால், இதற்கு வணிக விளம்பரங்கள் ஏதும் வருவதில்லை.

பிறகு எப்படி லினக்ஸ் மக்களை சென்று அடைகிறது? வாய் மொழியாகத்தான். லினக்ஸை பயன்படுத்திய மக்கள், அதன் சிறப்புகளை விரைவிலேயே அறிந்து கொள்கின்றனர்.

இது போல லினக்ஸை பெற்று, நிறுவி, பயன்படுத்தும் மக்கள் தனித்து செயல்படாமல் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். இதற்கு ‘லினக்ஸ் பயனர் குழு’ Linux User Group – LUG என்று பெயர்.

உலகெங்கும் இது போன்ற லினக்ஸ் பயனர் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு பெரிய நாடு, நகரம், ஊரிலும் இதனை காணலாம். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா என பெரிய நாடுகளிலும், நமது பெரு மற்றும் சிறு நகரங்களான டெல்லி, மும்பாய், பெங்களூர், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என எல்லா இடங்களிலும் இந்த லினக்ஸ் பயனர் குழுக்கள் இயங்கி வருகின்றன.

என்ன செய்கிறார்கள் இவர்கள்? இவர்களின் பணி,

  •  லினக்ஸ் பற்றி மக்களிடம் விளக்குதல்
  •  லினக்ஸ் சிடி,டிவிடிக்களை வழங்குதல்
  •  லினக்ஸ் தொடர்பான வினாக்களுக்கு விடையளித்தல்
  •  பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவருக்கும் ஆசிரியருக்கும் லினக்ஸ் பற்றி கூறுதல்

இவர்களை எப்படி தொடர்பு கொள்வது? இது போல யாரையும் பார்த்தது இல்லையே. என் ஊரில், இவர்களது அலுவலகம் எங்கு உள்ளது?அலுவலகமா? அப்படி ஏதும் இல்லை. ‘லினக்ஸ் பயனர் குழு’ என்பது லாப நோக்கற்ற தன்னார்வ தொண்டர் குழு. இவர்களை இணைப்பது ‘இணையம் (Internet)மட்டுமே.

இவர்களின் முதன்மை செயல், ஒரு மின்னஞ்சல் குழு நடத்துவது. yahoo, google அல்லது freelist போன்ற ஒன்றில் ஒரு குழு உருவாக்கி அதில் தமது அருகில் உள்ள லினக்ஸ் பயனர்களை இணைத்துக் கொள்வர். இந்த மின்னஞ்சல் குழுவிற்கு ஒரு அஞ்சல் அனுப்பினால், அதன் உறுப்பினர்கள் அனைவரையும் சென்றடையும். யார் வேண்டுமானாலும் பதில் தரலாம்.

இந்த குழுக்களில் சுவையான விவாதங்கள் பல நடக்கும். யாராவது கேள்வி கேட்டால் பலரும் பதில் தருவர். எல்லா கேள்வி பதில்களும் லினக்ஸ் மற்றும் பிற திறந்த மென்பொருட்கள் பற்றியே இருக்கும்.

உங்கள் பகுதியில் உள்ள ‘லினக்ஸ் பயனர் குழு’ பற்றி அறிய இணையத்தை நாடுங்கள். கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள். கேட்டதும் கொடுக்கப்படும்.

உங்கள் ஊர் லினக்ஸ் பயனர் குழுவின் அஞ்சல் குழுவில் சேர்ந்து லினக்ஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

வேறு என்ன செய்கிறார்கள்?

ñ மாத சந்திப்பு மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பொது இடத்தில் சந்திக்கின்றனர். யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் லினக்ஸ் பற்றிய பொதுவான விவாதங்கள் நடைபெறும். மேலும் இங்கு இலவச வகுப்புகள் நடைபெறும். லினக்ஸ், அதன் பயன்கள், நிறுவுதல், பழுது பார்த்தல் என யாராவது ஒருவர் வகுப்புகள் நடத்துவர். தமக்கு தெரிந்ததை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் நல்ல நோக்கம் கொண்ட எவரும் இங்கு பங்கு பெற்று வகுப்புகள் நடத்தலாம்.

ñ சிடி/டிவிடி பகிர்தல் லினக்ஸ் சிடி/டிவிடிகளை எல்லோருமே பகிர்ந்து கொள்ளலாம். தடை ஏதும் இல்லை. இந்த லினக்ஸ் பயனர் குழு உறுப்பினர்கள் தம்மிடம் உள்ள சிடிக்களை பிறருக்கு தருவதில் பெரு மகிழ்ச்சி கொள்வர். மின்னஞ்சல் குழுவிற்கு ஒரு அஞ்சல் அனுப்பி நமக்கு தேவையான சிடி பற்றி கேட்டால், அதை வைத்திருப்பவர் தமது முகவரி தந்து வரச் சொல்வார். போய் பெற்றுக் கொள்ளலாம்.

ñ லினக்ஸ் அறிமுக வகுப்புகள் தமது பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு/தனியார் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லினக்ஸ் பற்றிய அறிமுக வகுப்புகள் நடத்துவர். இந்த வகுப்புகளில் லினக்ஸ் நிறுவுதல், பயன் படுத்துதல், பொதுவான பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செயல் விளக்கத்துடன் தரப்படும்.

சென்னை லினக்ஸ் பயனர் குழு

சென்னையில், லினக்ஸ் பயனர் குழு, கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவின் வலைதளம் ilugc.in

மின்னஞ்சல் குழுவில் சேர- www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

இதில் வல்லுனர்கள், புதியவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாலை 3 முதல் 6 வரை சந்தித்து பேசுகின்றனர்.

மாத சந்திப்பு நடைபெறும் இடம்.
Classroom No 3,
Areo Space Engineering,
Near Gajendra Circle,
IIT Madras.

Chennai.

Link for the Map:bit.ly/iit-aero

இன்றே ‘சென்னை லினக்ஸ் பயனர் குழு’ வில் சேர்ந்து பயன் பெறுவீர்

ஸ்ரீனி, CollabNet எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்திய லினக்ஸ் பயனர் குழுவின் தற்போதைய        தலைவர்.

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com
வலை : goinggnu.wordpress.com

 

%d bloggers like this: