விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?

மூலம் gnutamil.blogspot.in/2011/10/blog-post.html

படம்1

படம்2

படம் 3

என்னுடைய மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தையும், உபுண்டு லினக்ஸ் 10.10 இயங்குதளத்தையும் இரட்டை நிறுவலாக நிறுவி வைத்திருந்தேன். விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி இரண்டு வருடமாகிவிட்டது, விண்டோஸ் இயங்குதளத்தை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை, அவ்வப்போது ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்திற்காக பயன்படுத்துவேன். ஒரு பொறியியல் படிக்கும் மாணவன் என்ற முறையில் உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் எனக்கு போதுமானதாக இருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனமே பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. அப்படி இருக்கையில் நான் விண்டோஸ் இயங்குதளத்தை இரண்டு வருடம் வரை மாற்றாமல் வைத்திருந்ததெல்லாம் , விண்டோஸ் இயங்குதளத்திற்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

என்னதான் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள்களை நாம் நிறுவி வைத்திருந்தாலும், வைரஸ் தொல்லை என்பது விண்டோஸிற்கு உடன்பிறப்பாகவே ஆகிவிட்டது. உருவத்துடன் வரும் நிழல் போல.

அத்துடன் நீலத்திரை மரணம் என்பது விண்டோஸில் இயல்பானது. என்னுடைய மடிக்கணினியில் இருந்த விண்டோஸிற்கு இந்த மரணம் வந்துவிட்டது. ஆகையால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்த முடியவில்லை.

எனவே விண்டோஸ் இயங்குதளத்தை மீண்டும் நிறுவலாம் என முடிவு செய்தேன். ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. விண்டோஸ் இயங்குதளதை நிறுவினால் ஏற்கனவே நிறுவியுள்ள உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் காணாமல் போய்விடும்.

விண்டோஸ் இயங்குதளத்துடன் லினக்ஸை நிறுவும் பொழுது, கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளைத்தை லினக்ஸ் கண்டறிந்து, தன்னுடன் சேர்த்துக்கொண்டு பயனாளருக்கு இரண்டு இயங்குதளத்தையும் காட்டும். அதில் பயனாளருக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இந்த விண்டோஸ் இயங்குதளம் மட்டும் கணினியில் உள்ள எந்த இயங்குதளத்தையும் கண்டுகொள்ளாது அது மட்டும் வன்வட்டில் இருந்து கொள்ளும். (என்ன கொடுமை சார் இது. இப்படியும் ஒரு இயங்குதளமா!!!)

மறுபடியும் உபுண்டு லினக்ஸை நிறுவி , இணையத்தை இணைத்து நம்முடைய பயன்பாட்டிற்குண்டான மென்பொருள்களை நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் நம்முடைய நிறைய நேரம் விரையாமாகியிருக்கும்.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உபுண்டு லினக்ஸை மீண்டும் புதிதாக நிறுவாமல் ஏற்கனவே நிறுவி வைத்திருப்பதையே கொண்டு வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என யோசித்தேன்.

இது தொடர்பாக ஏற்கனவே தோழர் மு.மயூரன் அவர்கள் வின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த பதிவு ஓரளவு அடிப்படையினை புரிந்து கொள்ள உதவியது.

படம்4

தோழர் மயூரன் எழுதியிருக்கும் வழிமுறைகள் உபுண்டு 9.04 வரையிலும் செல்லுபடியாகும். உபுண்டு 9.10 லிருந்து, உபுண்டு வினுடைய GRUB Boot Loader Upgrade செய்யப்பட்டுள்ளது.

நான் நிறுவியுள்ளது உபுண்டு 10.10. ஆகையால் மயூரன் எழுதியிருந்த வழிமுறைகள் வேலை செய்யவில்லை. அப்புறம் என்ன இருக்கவே இருக்கிறார் கூகுளார், அவரிடமே கேட்டேன் கொடுத்தார் வழிமுறைகளை.

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருக்கும் உபுண்டுவினை கொண்டு வருவது மிக மிக எளிமையான ஒன்று. எனவே நாம் உபுண்டு போய்விடுமோ, மறுபடியும் நிறுவ வேண்டி வருமோ என பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இதற்கு தேவையானவை:

விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகுதான், நாம் உபுண்டுவை திரும்பப் பெறும் வேலையை ஆரம்பிக்க போகிறோம்.


உபுண்டு 9.10 அல்லது அதற்கு பிறகு வெளிவந்த உபுண்டு வில் ஏதாவது ஒரு உபுண்டு வட்டு (Ubuntu CD). இது மிகவும் முக்கியம்.

உபுண்டுவினை நிறுவியிருக்கும் Partition னினுடைய Partition Number. இதை நீங்கள் உபுண்டுவில் System => Administration => Disk Utility சென்று தெரிந்து கொள்ளலாம். அல்லது Gpartition Editor மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.

Root Mount Point னுடைய Number னை மட்டும் குறித்துக்கொண்டால் போதுமானது.

Boot Mount Point யினை தனியாக பிரித்து இருந்தால் /boot னுடைய Partition Number ஐயும் குறித்துக்கொள்ளுங்கள் (கண்டிப்பாக).

அவ்வளவுதான் முதற்கட்ட வேலைகள் முடிந்தது.

இப்பொழுது உபுண்டு வட்டினை (9.04 க்கு பிறகு வெளியிடப்பட்ட பதிப்பு) சி.டி டிரைவினுள் நிழைத்து சி.டி யிலிருந்து கணினியினை Boot செய்யுங்கள். நிகழ் வட்டாக பூட் செய்ய வேண்டும். அதாவது Live CD யாக.

சி.டி யிலிருந்து கணினி Live ஆக Boot ஆகிய பிறகு. உபுண்டு வினுடைய Desktop உங்களுக்கு கிடைக்கும், கிடைத்த பிறகு

Applications => Accessories => Terminal சென்று Terminal ஐ திறந்துக்கொள்ளுங்கள். முனையம் திறந்த வுடன் கீழ்கண்ட கட்டளைகளை கொடுங்கள்.

sudo mount /dev/sdaX /mnt

இங்கு /dev/sdaX என்பதில் X என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் root Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் root partition னுடைய எண் /dev/sda9 ஆகையால், நான் /dev/sda9 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaX, /mnt இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

நீங்கள் /boot ற்கென தனியாக ஒரு partition உருவாக்கியிருந்தால் கீழே உள்ள கட்டளையினை கொடுங்கள், இல்லையென்றால் வேண்டாம்.

sudo mount /dev/sdaY /mnt/boot

இங்கு /dev/sdaY என்பதில் Y என்னுமிடத்தில் நீங்கள் ஏற்கனவே உபுண்டு நிறுவியிருக்கும் boot Partition னினுடைய எண்ணினை குறித்து வைத்திருப்பீர்கள் இல்லையா அதை கொடுக்கவும்.

உதாரணமாக என்னுடைய வன்வட்டில் boot partition னுடைய எண் /dev/sda10 ஆகையால், நான் /dev/sda10 என கொடுத்திருக்கிறேன். (sudo, mount, /dev/sdaY, /mnt/boot இவற்றுக்கு இடையில் single space கட்டாயாம் இருக்க வேண்டும்.)

மேலே உள்ள கட்டளைகளைக் கொடுத்த பிறகு இறுதியாக இந்த கட்டளையினைக் கொடுக்கவும்.

sudo grub-install –root-directory=/mnt/ /dev/sda

இந்த கட்டளையினைக் கொடுத்து முடித்தவுடன். Installation Finished. No error reported. என ஒரு வெளியீட்டு செய்தி கிடைக்கும். அவ்வளவுதான் முனையத்தை மூடி விட்டு, கணினியினை Restart செய்யவும்.

Restart செய்து கணினியினை ஆரம்பித்தவுடன் உங்களுக்கு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டுவினுடைய GRUB Boot Loader கிடைக்கும்.

நான் மேலே கொடுத்துள்ள படம் –4 னை பெரிதுப்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். உபுண்டு வேண்டுமென்றால் உபுண்டு , விண்டோஸ் வேண்டுமென்றால் விண்டோஸ்.

குறிப்பு:

இங்கு /dev/sda என குறிப்பிட்டுள்ளது Serial ATA தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டிற்குண்டானது. இன்றைக்கு பெரும்பாலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட வன்வட்டுதான் பயன்பாட்டில் உள்ளது. ஒரு வேளை உங்களுடைய வன்வட்டு IDE தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தால் /dev/hda என வரும்.

 

இரா.கதிர்வேல் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர். லினக்ஸ் ஆர்வலன், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.

மின்னஞ்சல் : linuxkathirvel.info@gmail.com

வலை : gnutamil.blogspot.com


%d bloggers like this: