நாம் முதல் முறையாக ஒரு பாகத்தை 3D அச்சு புனைதல் செய்யும் போது வரும் பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு வடிவமைப்பையோ அல்லது செயல்முறையையோ மாற்றியமைத்துத் திரும்பவும் புனைவோம். ஆனால் திரும்பத்திரும்ப முயற்சி செய்து பார்த்துப் பிழையை சரி செய்வதில் (trial and error) செலவும் அதிகம் மற்றும் நேரமும் வீணாகும். இம்மாதிரி புனைதல் செய்து செய்து பார்த்துக்கொண்டிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேறு எளிய வழி இருக்கிறதா என்றால் அதுதான் பாவனையாக்கல்.
வெப்பவிசையியல் விளைவால் (thermo-mechanical effect) உருக்குலைவு
எடுத்துக்காட்டாக பற்ற வைத்த (welded) உலோக பாகங்கள் சூடு ஆறும்போது வெப்பவிசையியல் விளைவால் வளையக்கூடும் என்பது தெரிந்ததே. 3D அச்சிடல் செயல்முறையில் துகள்களையோ அல்லது இழைகளையோ உருகும் வெப்பநிலைக்கு சூடாக்கி, அச்சிட்டு குளிர்ந்தவுடன் திடப்படுத்தி, பாகத்தை உருவாக்குகிறோம் என்று பார்த்தோம். ஆகவே பாகங்களை அச்சிடும்போதும் இதே மாதிரி உருக்குலைவு (deformation) பிரச்சினை வரக்கூடும்.
வழக்கமாக ஒரு மாதிரி பாகத்தை அச்சிட்டபின்தான் எவ்வளவு உருக்குலைவு எந்த இடத்தில் வருகிறது என்பது தெரியவரும். அதன்பின் வடிவமைப்பில் மாறுதல்கள் செய்து திரும்பவும் மாதிரி பாகத்தை அச்சிட்டுப் பார்க்கவேண்டும். குறைபாடுள்ள அச்சுகளை நிராகரித்து வடிவமைப்பை மாற்றியமைக்கும்போது பொருளும் வீணாகும் மற்றும் உற்பத்தி நேரமும் விரயமாகும்.
செயல்முறையைப் புரிந்துகொள்ளவும் காட்சிப்படுத்தவும் பாவனையாக்கல் மென்பொருள் உதவுகின்றது
இதற்கு மாறாக உற்பத்தியின் போது நிகழும் சிக்கலான வெப்பவிசையியல் நிகழ்வுகளைப் (thermo-mechanical phenomena) புரிந்துகொள்ளவும் காட்சிப்படுத்தவும் 3D அச்சிடல் பாவனையாக்கல் உதவுகின்றது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வடிவமைப்பை மாற்றி மாதிரி பாகங்களை அச்சிடும் வேலைகளைக் குறைத்து உயர்தர துல்லிய பாகங்கள் உற்பத்தி செய்ய இயலும். குறிப்பாக விலையுயர்ந்த பாகங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த மென்பொருளானது ஒரு பாகத்தின் புனைவைக் காட்சிப்படுத்த உதவுகிறது, எஞ்சிய அழுத்தத்தால் (residual stress) பாதிக்கப்படக்கூடிய ஒரு பாகத்தின் சாத்தியமான சிதைவுகள் பற்றிய உள்ளறிவுகளை வழங்குகிறது. தானாகவே உகந்த தாங்கும் பொருள் கட்டமைப்புகளை உருவாக்கவும் மற்றும் உருக்குலைவு (deformation) ஈடு செய்த STL கோப்புகளை உருவாக்கவும் இம்மாதிரி மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.
வெப்பநிலை பரவல் (Temperature distribution)
பொருள்சேர் உற்பத்தி மூலம் ஒரு பாகத்தை உருவாக்கும்போது நிகழும் அனைத்து இயந்திர நிகழ்வுகளுக்கும் வெப்பநிலையின் வாட்டம்தான் (temperature gradient) மூல காரணமாகும். ஆகவே, சில நேரங்களில் இயந்திர சிதைவு (mechanical deformation) அல்லாமல் வெப்பநிலை வாட்டத்தை மட்டும் தனியாகக் கணக்கிடலாம். இது பொதுவாக முழு பாவனையாக்கலை விட விரைவானது. மேலும் வெப்பத் திரட்சி சிக்கல்களுக்குத் தீர்வு கண்டால் அதே நேரத்தில் இயந்திர சிதைவு சிக்கல்களையும் தீர்க்கும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல் (scanning)
மீள்நோக்குப் பொறியியல் (Reverse engineering). முப்பரிமாண வருடி (3D Scanner). கையடக்க முப்பரிமாண வருடிகள் (Hand-held scanners).