Translatewiki.net என்பது மொழிபெயர்ப்புச் சமூகங்கள், மொழிச் சமூகங்கள், கட்டற்ற திறமூலத் திட்டங்கள் ஆகிவற்றை ஒருங்கிணைக்கும் நடுவம் ஆகும். மொழிபெயர்ப்புச் சமூகங்கள் (translation communities) என்பவை ஒரு குறிப்பிட்ட மொழியில் மென்பொருள்களை மொழிபெயர்க்கும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மென்பொருள்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கென்று ஒரு சமூகம் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சமூகம் இருக்கும்.
முதன்முதலில் இந்தத் தளம் முதன்முதலில் பீட்டாவிக்கி என்ற பெயரில் விக்கிப்பீடியா போன்ற விக்கித் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் தளங்களை இயக்கும் மீடியாவிக்கி எனும் மென்பொருளை மொழிபெயர்ப்பதற்கென்று 2006ஆம் ஆண்டு ஒரு சோதனை விக்கியாகத் (test wiki) தொடங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 70 மொழிகளுக்கு ஆதரவளித்து வந்த இத்தளம் 2010ஆம் ஆண்டு 329 மொழிகளாக விரிவடைந்தது. நவம்பர் 2007இலிருந்து நெட்கப் நிறுவனம் இத்தளத்தை வழங்கிவருகிறது. இத்தளம் விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் (விக்கிப்பீடியா, விக்சனரி முதலியன) ஒன்றன்று! இது எந்த ஒரு தனி அமைப்புக்காகவோ எந்த ஒரு தனி மென்பொருளுக்காகவோ செயல்படவில்லை. நைக், சைப்ராண்ட் என்ற இருவராலேயே இத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுவருகிறது. இவர்கள் இருவருமே இத்திட்டத்தை முதன்மையாக மேம்படுத்தியவர்களாவர்.
மொழிபெயர்ப்புச் செயலாக்கங்கள் மீடியாவிக்கி நீட்சியான டிரான்ஸ்லேட் (translate) என்பதன் மூலம் வழங்கப்படுகிறது. 2010இல் இதன்மூலம் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளத்தக்க வசதிகளைக் கொண்ட மென்பொருள்களின் எண்ணிக்கை 16ஐ எட்டியது. இதில் ஃப்ரீகால் (நகரமாக்கல் விளையாட்டு), ஓபன் ஸ்ட்ரீட் மேப் தளம் (OSM), ஸ்டேட்டஸ்நெட் (டுவிட்டர் போன்ற வசதி கொண்ட ஒரு திறமூல இடைமுகம்), விக்கியா போன்ற பல பெரிய திட்டங்கள் இதில் இணைந்து தங்களது மென்பொருள்களையும் இணையதளங்களையும் (softwares & websites) உலகமயமாக்கிவருகின்றன. (internationalization)
இது போன்ற ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தின் மூலம் மொழிபெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்புகளை எளிதாக பல வகைகளில் வேண்டிய திட்டங்களில் நிகழ்நிலையிலேயே (online) பயன்படுத்த வகைசெய்கிறது. மேலும், மொழிபெயர்ப்புகளை கவனிக்கவும் (track) இவை பெரிதும் உதவுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சரங்களை (strings) எளிதாக மொழிபெயர்க்கும் வண்ணம் ஓர் இடைமுகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இயந்திர மொழிபெயர்ப்பு (machine translation) வசதியும் இணைக்கப்பட்டுள்ளதால் ஒரு சில பெயர்ச்சொற்களுக்கு மிகச்சரியான முடிவுகளையும் சிலவேளைகளில் பெறமுடியும். மேலும், பொருளுணர் வலை (semantic web) வசதியும் தற்போது இத்த்திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, இதுபோன்ற பல தொழில்நுட்பங்கள் நிறைந்த ஓரிடத்தில் மொழிபெயர்ப்பு செய்வதென்பது குறிப்பிட்ட திட்டங்கள் என்றன்றி பல திறமூல மென்பொருள்களுக்கும் விரிவடையும். எனவே, திறமூலத் திட்டங்களில் நிரல்கள் மூலம் பங்களிக்க இயலாதோர் கூட இதுபோன்ற ஒரு வசதி மூலம் தங்கள் பங்களிப்பை கட்டற்ற திறமூலத் திட்டங்களுக்கு (FOSS) வழங்கலாம்.
மேலும் இத்தளத்தில் அவ்வப்போது மொழிபெயர்ப்பு பந்தயங்கள் (translation rally) வைக்கப்பட்டு சிறப்பாக மொழிபெயர்க்கும் பங்களிப்பாளர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், வெகு எளிதாக புகுபதிகை செய்து பங்களிக்கத் தொடரலாம். புதியதாக கணக்கு தொடங்கி குறைந்தது 3 நாட்கள் (சில வேளைகளில் ஒரு வாரம்) கழித்து நீங்கள் மொழிபெயர்க்க அனுமதிக்கப்படுவீர்கள். உங்கள் மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்புச் சமூகத்தில் உள்ள பிற உறுப்பினர்களால் உறுதிசெய்யப்படலாம். நீங்களும் பிறரது மொழிபெயர்ப்புகளைச் சரிபார்த்து அவற்றைச் சரியென்று குறிக்கவோ தவறென்றால் திருத்தவோ முடியும். இத்தளத்திற்கான உரலி : translatewiki.net
என்னைப் பற்றி
பெயர் : ச.அ.சூர்ய பிரகாஷ். ( $ U ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு, விக்சனரி பார்!, தொடுப்பிணைப்பி ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.[1][2][3] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[4]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 4 பட்டறைகளில் பேசியுள்ளேன்.[5][6][7][8] மேல்-விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் Translatewiki.net –இல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.[9]
மின்னஞ்சல் : suryasalem2010gmail.com