ஸ்வேச்சா – இணையவழி பயிற்சிப் பட்டறை – நாள் 3

ஸ்வேச்சாவின் ஆறு வார இணையவழி பயிற்சிப் பட்டறை நீங்கள் அறிந்ததே!  (தெரியாதவர்கள் swecha.org போய்ப் பார்க்கலாம்!)

இன்று அப்பயிற்சிப் பட்டறையின் மூன்றாவது நாள்.  அதன் குறிப்புகளை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்.

முதல் 45 நிமிடங்கள் நேற்றைய லினக்ஸ் மேலாண்மையை மீண்டும் சுருக்கமாகச் செய்து காட்டுவதாக இருந்தது. பிறகு ஹரிசாய்,பவபுத்தி(Bhavabhuthi) இருவரும் மென்பொருள் வாழ்க்கை வட்டம் (SDLC) பற்றி முக்கால் மணிநேரம் சொல்லிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கால் மணிநேரம் இடைவெளி கொடுத்து ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த முறை மிகச் சிறப்பாக இருந்தது.

மென்பொருளை வடிவமைக்கும் போது எவ்வளவு சின்னச்சின்னதாக உங்கள் திட்டப்பணியை வகுத்து வைத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு எளிதாக வடிவமைக்க முடியும் என்பதை பவபுத்தி வலியுறுத்திச் சொன்னார். கிட்ஹப்(GitHub)பை ஏன் சொல்லாமல் கிட்லேபைச் சொல்கிறீர்கள் எனப் பலரும் கேட்டார்கள். கிட்ஹப் என்பது கட்டற்ற மென்பொருள் இல்லை, அது தனி உரிம மென்பொருள் என்பதை எடுத்துச் சொன்னார்.

மதியத்திற்கு மேல் பிராச்சி(Prachi) தகவெளிமை(Agile) பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். மதியத்திற்கு மேல் தொடர்ச்சியான பாடங்களைக் கவனிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. மதியம் தானே! சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் திறமையாகத் தான் நடத்தினார்கள். ஆனால், இணையத்தில் அவர்களுடைய வழங்கியில் இருந்து காணொளி தொடர்ச்சியாக வருவதில் சிக்கல்கள் இருந்தன. மூன்று நாட்களாக இந்தச் சிக்கல் இருக்கிறது. இன்று என்னுடைய இணையத்தின் வேகத்தையும் குறிப்பிட்டு அவர்களுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறேன். ஏதாவது தீர்வு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

ஒரு நல்ல விடயத்தை இங்கே சொல்லியே ஆக வேண்டும். மூடுள்(Moodle) கற்றல் மேலாண்மை மென்பொருள் கொண்டு ஸ்வேச்சாவிற்குத் (learning.swecha.org/) தனியே வழங்கி(Server) உருவாக்கியிருக்கிறார்கள். அதில் லினக்ஸ் அடிப்படைகளைக் கற்பதற்கு வகுப்பீடு(Assignment) கொடுத்திருக்கிறார்கள். இப்போது தான் முடித்தேன். நல்ல அனுபவமாக இருந்தது. அந்தக் கேள்விகளை விடைகளுடன் பிறகு பதிவிடுகிறேன்.

இன்னொரு நல்ல விடயம் – எல்லோருடைய கருத்துகளையும்(Comments) ஒவ்வோர் அமர்வின் முடிவிலும் படித்தார்கள். படித்து அதில் இருந்த கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொன்னார்கள். ஒருங்கிணைப்பாளராக இராஜசேகர் இதைத் திறம்படச் செய்தார். என் பங்குக்கு நானும் ஒரு கேள்வி – ‘லினக்ஸ் மின்ட் வைத்திருக்கிறேன். நீங்கள் உபுண்டு, டெபியன் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறீர்களே! லினக்ஸ் மின்ட் பரவாயில்லையா?’ என்று கேட்டேன். இராஜசேகர் கொஞ்சம் யோசித்தார். “நாங்கள் ஒரே நிலையாக உபுண்டு, டெபியன் வைக்கச் சொல்கிறோம். கொஞ்சம் மாற்றி விடுங்களேன்” என்றார். இந்தப் பட்டறைக்காக மின்டை விட வேண்டுமே! என்று எனக்குத் தோன்றியது. பிறகு ஓய்வாகச் சீனி இருக்கும் போது அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னென்ன மென்பொருட்களை ஸ்வேச்சா பயன்படுத்துகிறார்கள்?
இயங்குதளம் – GNU/Linux Debian
தொகுப்பி – VSCodium + plugins(Eslint, Python)
உலாவி – Firefox Developer Edition(+webextensions)
பிற செயலிகள் – Moodle(LMS) , Gitlab(Labcot), RocketChat(Chat.swecha)

இன்றைய நிரல்:
10.00-10.45 – லினக்ஸ் மேலாண்மை
11.00 – 12.00 – மென்பொருள் வாழ்க்கை வட்டம்
1.00 – 2.00 – தகவெளிமை வழி மென்பொருள் வாழ்க்கை வட்டம்
2.15 – 3.30 – கிட்லேப்(Gitlab) சிக்கல் தடமியில் தகவெளிமை பயிற்சிகள்
(Agile Exercises in GitLab issue tracker)

%d bloggers like this: