லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்

1. சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் பதிவுகளை(logs) ஆராயுங்கள். லினக்ஸில் எல்லா விதமான நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் பணியை ஏதேனும் ஒரு பிரச்சனை தடை செய்தால் முதலில் நீங்கள் பதிவுகளை ஆராய வேண்டும். பெரும்பாலான அமைப்புகளில், இவை ‘/var/log/’ அடைவுக்குள் காணப்படும். ‘/var/log/syslog’ கோப்பில் பொதுவான பிழை செய்திகள் (error messages) உட்பட எல்லா அமைப்பு(system) செய்திகளும் இருக்கும். பதிவுகளிலிருக்கும் பிழை செய்திகள் மூலம் தடைகளைக் களைய பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.

2. tail’ என்ற கட்டளை ஒரு கோப்பிலுள்ள கடைசி பத்து வரிகளைப் பார்க்க பயன்படுகிறது. இதனுடன் ‘-f’ கொடியைப் பயன்படுத்தும் போது சமீபத்தில் ஒரு கோப்பில் சேர்ந்த/சேரும் வரிகளைக் கண்காணித்துக் கொள்ளலாம். பிழை செய்திகளைக் கண்காணிக்க இந்த கட்டளை பேருதவியாக இருக்கும். இதே போல ‘head’ என்ற கட்டளை குறிப்பிட்ட கோப்பிலுள்ள முதல் பத்து வரிகளைப் பார்க்க பயன்படுகிறது.

3. உங்கள் சேவையக(server) வளங்களை கண்காணியுங்கள். உங்களது வட்டு(disk) மற்றும் பிரிவினைகளின் (partition) அளவுகளுக்கு ஏற்ப, சில நேரங்களில் உங்களுக்கு போதுமான அளவு இடம் வட்டில் இல்லாமல் போகலாம், அல்லது உங்களது பதிவு கோப்புகள் உங்கள் root பிரிவினையின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளலாம். பிரிவினைகளின் பயன்பாட்டு அளவை ‘df’ என்ற கட்டளை மூலம் நீங்கள் கண்காணிக்கலாம். இந்த கட்டளையை உபயோகப்படுத்தும் போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு கொடிகள் ‘-h’ மற்றும் ‘-m’. ‘-h’ கொடி 5G, 24M, 95K என மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக பயன்பாட்டு அளவைத் தெரிவிக்கிறது. ‘-m’ கொடி பயன்பாட்டு அளவை மெகாபைட்டுகளில் மட்டும் தெரிவிக்கிறது.

4. ‘root’ பயனரை பயன்படுத்துவதைத் தவிர்ப்பீர். பெரும்பாலான ஹேக்குகள் துறை வருடிகள்(port scanners) மற்றும் தற்போக்கு கடவுச்சொல்லாக்கிகளைக்(random password generators) கொண்டு உங்கள் அமைப்புக்குள் ‘root’ பயனராக நுழைவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே முதலில் நீங்கள் ‘root’ பயனரை உங்கள் அமைப்பிற்கு முடக்க(disable) வேண்டும். இதை நீங்கள் ‘/etc/ssh’ அடைவுக்குள் சென்று, ‘sshd_config’ கோப்பை திருத்துவதன் மூலம் செய்யலாம். ‘PermitRootLogin yes’ வரியை ‘PermitRoolLogin no’ என மாற்றி விட்டு, ssh சேவையை மறு தொடக்கம் செய்யவும் (/etc/init.d/ssh restart).

5. நீங்கள் ஒரு வலைத்தளம் துவங்கப் போகிறீர்கள் என்றால், ‘chown’ and ‘chmod’ கட்டளைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அணுகு அனுமதி காப்பும்(permissions security), கோப்புரிமையும்(file ownership) மிக முக்கியமானவை. தவறான அணுகு அனுமதியுடைய கோப்புகளால், உங்கள் நிரல் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6.‘FTP’-க்கு பதிலாக ‘SFTP’-ஐ பயன்படுத்துங்கள். SFTP கடவுச்சொற்களை சுரங்க வழியில் மறு குறியீடாக்கம்(encrypt) செய்து அனுப்புகின்றன. மாறாக துறை(port) 21 FTP கடவுச்சொல் தொடர்பான செய்திகளை இயல் உரையில்(plain text) அனுப்புகின்றன. இதனால் துறை 21-ஐ பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் உங்கள் கடவுச்சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

 

7. ‘ls -al’ கட்டளை அடைவுக்குள் இருக்கும் கோப்புகளைப் பட்டியலிட உதவுகிறது. ‘-a’ கொடி, ‘.’ (புள்ளி)-ல் ஆரம்பிக்கும் கோப்புகள் உட்பட எல்லா கோப்புகளையும் பட்டியிலிடுகிறது. ‘-l’  கொடி கோப்புகளைப் பட்டியலிடுவதுடன், அவை மாற்றியமைக்கப்பட்ட நேரத்தையும் காட்டுகிறது. அடைவுக்குள் இருக்கும் கோப்புகளை பார்ப்பதற்கு எப்போதும் இந்த இரண்டு கொடிகளையும்(ls -al) உபயோகிப்பது நல்லது.

8. ‘top’ கட்டளை உங்கள் அமைப்பில் செயலகத்தை அதிகமாக உபயோகப்படுத்தும் செயல்களைக்(process) காட்டுகிறது. இதனால் உங்கள் செயலகம் குறிப்பிட்ட அளவைத் தாண்டி உபயோகப்படுத்தப்படும் போது, எந்த செயல் அதிகமாக செயலகத்தைப் பயன்படுத்துகிறது என்று கண்டறிந்து சிக்கல்களைக் களைய முடியும்.

9. குறிப்பிட்ட வார்த்தை/கோவைகளைக்(expression) கோப்புகளில் தேட ‘grep’ உதவுகிறது. ‘grep’ மிக விரிவானதொரு கருவி. இதனால் தான் கோப்புகளைத் தேட உதவும் சிறந்த கருவிகளில் ஒன்றாக ‘grep’ விளங்ககிறது. எடுத்துக்காட்டாக, ‘grep -r star.m /etc/*’, ‘/etc’ அடைவு மற்றும் அதற்குள் இருக்கும் அடைவுகளில் ‘start.m’ என்ற வார்த்தையை மறுசுழற்சி(recursive) முறையில் தேடுகின்றது

10. இப்போது ‘grep’ மூலம் தேடிக் கிடைத்த முடிவுகளை ஒரு கோப்பிற்குள் அனுப்புவோம். இது மிகவும் எளிது. மேற்கூறிய ‘grep’ கட்டளை மூலம் தேடிக் கிடைத்த முடிவுகளை கூட்டில் (shell) படிப்பதற்குப் பதிலாக, அதை அப்படியே ஒரு கோப்பில் எழுதி விடுவோம்.
i) ‘grep -r star.m /etc/* > test.txt’  – ‘grep’ கட்டளையின் முடிவுகளை ஒரு புதிய கோப்பில்(test.txt) எழுதி விடுகிறது. ஏற்கனவே அந்த கோப்பு இருப்பின், அதில் எழுதப்பட்டிருந்தவை அழிக்கப்பட்டு, ‘grep’ கட்டளையின் முடிவுகள் அதில் எழுதப்படும்.
ii) ‘grep -r star.m /etc/* >> test.txt’ – ‘grep’ கட்டளையின் முடிவுகள், ஏற்கனவே உள்ள கோப்பின் இறுதியில் சேர்க்கப்படும். அந்த கோப்பு இல்லாமல் போனால், புதிதாக ஒரு கோப்பு உருவாக்கப்பட்டு அதில் ‘grep’ கட்டளையின் முடிவுகள் எழுதப்படும்.

ஆங்கில மூலம் :-

tuts.pinehead.tv/2012/02/24/ten-things-i-wish- i-knew-when-becomming-a-linux-admin/

 

 

இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.  மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

[ glug-madurai.org ]

கணியம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

மின்னஞ்சல் : subramani95@gmail.com
வலைப்பதிவு : rsubramani.wordpress.com

%d bloggers like this: