மூக்குக் கண்ணாடிகளை அவரவருக்குப் பொருந்துமாறு தனிப்பயனாக்கல் அவசியம்
பேரளவு உற்பத்தி செலவைக் குறைக்கும், ஆனால் தனிப்பயனாக்குவது கடினம் மற்றும் அதிக செலவாகும். மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்கள் தயாரிக்கும் தொழில்துறையில் அனைத்து விதமான மற்றும் அளவிலான முக வடிவங்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆகவே மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் சட்டங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி தனிப்பயனாக்க வேண்டும். 3D அச்சிடலின் வரம்பற்ற திறனின் மூலம் இத்துறை முற்றிலும் பயனடைகிறது.
3D அச்சிடலின் மூலம் உருவாக்கிய தயாரிப்புகள் இலகுவானவை மற்றும் மிகவும் வசதியான கண்ணாடிகள். மேலும் கச்சாப் பொருள் குறைந்த அளவே வீணாகிறது. இத்துறையில் உள்ள சில நிறுவனங்கள் 3D அச்சு தயாரிப்பின் பண்புகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களையே தங்கள் சொந்தக் கண்ணாடி சட்டங்களை வடிவமைக்க ஊக்குவிக்கின்றன. இது நிறுவனத்தின் வணிகச் சின்னத்தில் விசுவாசத்தை (brand loyalty) உருவாக்குவதற்கும் நுகர்வோருக்குத் தங்களுக்குத் தோதாக வடிவமைக்க உரிமை கொடுக்கவும் சிறந்த வழியாகும்.
மூக்குக் கண்ணாடி வில்லைகளை (lens) 3D அச்சிட உதவும் தொழில்நுட்பம்
நெதர்லாண்டில் உள்ள லக்செக்சல் (Luxexcel) நிறுவனம் மூக்குக் கண்ணாடி வில்லைகளை 3D அச்சிடும் இயந்திரம், கச்சாப் பொருட்கள், மென்பொருள் மற்றும் செயல்முறை ஆகிய தொழில்நுட்பங்களை முழுமையாக மேம்படுத்தியுள்ளது. தனித்துவமான மற்றும் மிகவும் துல்லியமான இத்தொழில்நுட்பம், தயாரித்தபின் மேற்பரப்பு சீர்மை மற்றும் மெருகேற்றல் (polishing) செய்யத் தேவையில்லாமல் மூக்குக் கண்ணாடிகளைத் தயாரிக்க அனுமதிக்கிறது. இக்கருவி மூலம், ஆய்வகங்கள் மற்றும் இறுதியில் கண் பராமரிப்பு நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்குத் தனிப்பயன் கண்ணாடிகள் வடிவமைக்க முடியும்.
இது நாம் காகிதத்தில் அச்சிடப் பயன்படுத்தும் மைவீச்சு (inkjet) அச்சுப்பொறியைப் போன்றது. நெகிழி கச்சாப் பொருளை உருக்கி திரவமாக்கி துளித்துளியாக வீசுகிறது. இத்துளிகள் இறுகுவதற்குமுன் ஒன்றிணைவதால் எந்த பிந்தைய செயல்முறைகளும் இல்லாமல் மிகவும் சீரான, வழுவழுப்பான கண்ணாடி மேற்பரப்புகளைப் பெறுகிறோம். நாம் மிகச் சிறிய துளிகளைப் பயன்படுத்துவதால், மிகத் துல்லியமான வில்லைகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஒரே நேரத்தில் பல துளிகளைப் பீச்சுவதால் விரைவாக அச்சிட முடிகிறது.
மூக்குக் கண்ணாடி சட்டங்களையும் விருப்பமைவு செய்ய இயலும்
கண்ணாடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, பொருளின் தரம், தேய்மான எதிர்ப்பு மற்றும் ஆயுள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கியக் கூறுகள். தரமான உற்பத்தி செய்ய, நைலான் (Nylon) பொதுவாக 3D அச்சு கண்ணாடி சட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. இப்பொருள் தேய்மான எதிர்ப்பு, நீடித்த ஆயுள் மற்றும் கட்டற்ற வடிவமைப்பு ஆகிய எதிர்பார்க்கப்படும் பண்புகளைக் கொண்டிருக்கிறது.
இந்த வேலைக்கு சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) சிறந்த தேர்வாக இருக்கும். பசையைப் பீச்சுதல் (Binder Jetting – BJ) போன்ற தொழில்நுட்பத்தை உங்கள் படைப்புகளின் மேற்புறத்தில் நகாசுவேலை செய்யப் பயன்படுத்தலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: விண்வெளித் துறைப் பயன்பாடுகள்
தற்போது வழக்கத்தில் உள்ள ஏவூர்திகளின் வடிவமைப்பு. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace). சென்னை ஐஐடி (IIT) அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos).