எளிய தமிழில் 3D Printing 17. கலைப்பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தி

மெழுகு வார்ப்பு (lost wax process)

கைவினை (handcrafting) மற்றும் மெழுகு வார்ப்பு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் வரலாற்று ரீதியாக ஆபரணங்களை உருவாக்குவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ஒரு பூ வடிவில் ஆபரணம் செய்யவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். மெழுகு வார்ப்பு முறையில் முதலில் அதே வடிவில் மெழுகில் பூ தயாரித்துக் கொள்வோம். பிறகு அந்த மெழுகுப் பூவை உள்ளே வைத்து அச்சு தயாரிப்போம். அதன்பின் மெழுகை உருக்கிவிட்டு அந்த அச்சுக்குள் தங்கம் அல்லது வெள்ளியை உருக்கி ஊத்துவோம். அது இருகியபின் வெளியே எடுத்தால் அந்தப் பூ வடிவத்தில் ஆபரணம் தயார்.

இரண்டு நுட்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப நிபுணத்துவமும் கைவினைத்திறனும் (craftsmanship) தேவைப்படுகிறது. ஆகவே இவற்றுக்கு அதிக நேரம் எடுக்கிறது, மேலும் செயல்பாட்டில் தவறுகள் நேர்ந்தால் செலவும் அதிகம்.

தனித்துவமான நகைகள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி செய்ய இயலும்

3D அச்சிட்ட தனித்துவமான வேலைப்பாடுள்ள நகைகள்

3D அச்சு நகைகளைப் பற்றிப் பேசும் பெரும்பாலான நேரங்களில், பாரம்பரிய நகைத் தயாரிப்பைப் போலவே மெழுகு மாதிரியை 3D அச்சிடுதலைப் பற்றிக் குறிப்பிடுகிறோம். விலைமதிப்பற்ற உலோகங்களில் நேரடியாக 3D அச்சிடுவது சாத்தியம் என்றாலும், பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள் 3D அச்சுப்பொறிகளைப் பயன்படுத்தி ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நடைமுறையில் தங்கள் எண்ணிம வடிவமைப்புகளிலிருந்து (digital designs) மெழுகு மாதிரிகளை உருவாக்குகிறார்கள். பல மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் எடுக்கும் கை வேலைப்பாடு மற்றும் தேவையான திறன் ஆகியவற்றைக் குறைத்துத் துரிதமாகவும் குறைந்த செலவிலும் ஆபரணங்கள் உற்பத்தி செய்ய இயலும்.

3D அச்சிடல் தனித்துவமான மற்றும் தரமான நகைகளைத் தயாரிப்பதற்கு எவருக்கும் உதவுகிறது. மேலும் இத்தொழில்முறை நகைக்கடைக்காரர்களுக்கு உற்பத்திக்கான புதிய தீர்வை வழங்குகிறது. இது மலிவானது, எளிதானது மற்றும் விரைவானது. 3D அச்சிடல் நகைச் சந்தையை மாற்றி, அணுகக்கூடிய தனிப்பயன் உற்பத்தியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தில் திறனுள்ள நகை நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கிறது. 

வெள்ளி, தங்கம் அல்லது பிளாட்டினம் போன்ற 3D அச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட, தனித்துவமான நகைகள் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஆபரணங்களை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கவும் 3D அச்சு அனுமதிக்கிறது. 3D அச்சுப்பொறிகள் நகை தயாரிப்பாளர்களை பாரம்பரிய நகை செய்யும் முறைகள் மூலம் சாத்தியமற்ற வடிவமைப்புகளைக்கூட முயன்று பார்க்க வழிசெய்கின்றன.

3D அச்சிட்ட சிற்பங்கள் மற்றும் பூச்சாடிகள்

3D அச்சிடல் தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க உதவுகிறது. உலோக 3D அச்சிடல் மூலம், கலைஞர்கள் இப்போது அழகான சிக்கலான சிற்பங்களை உருவாக்குகிறார்கள். டச்சு கலைஞரான ஆலிவர் வான் ஹெர்ப்ட் (Oliver van Herpt) 3D அச்சு மூலம் பூச்சாடிகளை உருவாக்குகிறார்.

சமீபத்தில், ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரிலுள்ள பிராடோ அருங்காட்சியகம் 3D யில் வரையப்பட்ட பிரபலமான கலைஞர்களின் ஓவியங்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்தது.  முன்பு அணுக முடியாத இப்படைப்புகளை பார்வையற்றவர்கள் உணர அனுமதிப்பதே இதன் நோக்கம்.

நன்றி

  1. 3D Printed Jewelry Challenge

இத்தொடரில் அடுத்த கட்டுரை: வாகனத் தொழில்துறைப் பயன்பாடுகள்

வாகன பாகங்களுக்குப் பல தனிப்பயன் வழியுறுதிகள் (jigs) மற்றும் நிலைப்பொருத்திகள் (fixtures) தேவை. எண்ணிம பணிப்பாய்வுகளின் தரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேரளவில் விருப்பமைவு செய்தல் (Mass customization).

ashokramach@gmail.com

%d bloggers like this: