எளிய தமிழில் 3D Printing 24. உற்பத்தியின் தர உறுதிதான் பெரிய சவால்

வாகனத்துறை, கட்டுமானம், மருத்துவம் மற்றும் விண்வெளி போன்ற மிகவும் இக்கட்டு நிறைந்த பயன்பாடுகளுக்கு முப்பரிமாண அச்சிடல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்த்தோம். பாகத்தின் தரம் குறைவாக இருந்தால் எந்தத் துறையிலும் பிரச்சினைதான். ஆனால் இம்மாதிரி மிகவும் இக்கட்டு நிறைந்த துறைகளில் ஒரு பாகம் தரக்குறைவால் பழுதடைந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படக்கூடும். ஏறக்குறைய 50% நிறுவனங்கள் தங்கள் 3D அச்சுப்பொறிகளைப் பயன்படுத்துவதில் தரக் கட்டுப்பாடுதான் அவர்களின் முக்கிய சவால் என்று கூறுகின்றன.

3டி அச்சிடலில் உள்ள தர பிரச்சினைகளின் வகைகள்

எடுத்துக்காட்டாக, நெகிழி பாகங்களில் கீழ்க்கண்ட வகைப் பிரச்சினைகள் எழக்கூடும்:

  • அச்சிடும் தொடக்கத்தில் பிதுக்கப்படுவதில்லை: அச்சின் தொடக்கத்தில் அச்சுப்பொறி நெகிழியை வெளியேற்றுவதில்லை.
  • படுக்கையில் ஒட்டுவதில்லை: முதல் அடுக்கு படுக்கையில் ஒட்டவில்லை ஆகவே அச்சு விரைவாகத் தோல்வியடைகிறது.
  • குறைவான பிதுக்கல்: அச்சு போதுமான அளவு நெகிழியை வெளியேற்றுவதில்லை. ஆகவே சுற்றளவு மற்றும் நிரப்பு (infill) இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன.
  • அதிகப்படியான பிதுக்கல்: அச்சுப்பொறி அதிகப்படியான நெகிழியை வெளியேற்றுகிறது. ஆகவே அச்சிட்ட பாகங்கள் மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றன.
  • மேல் அடுக்குகளில் இடைவெளிகள்: அச்சின் மேல் அடுக்குகளில் துளைகள் அல்லது இடைவெளிகள்.
  • நெகிழி இழைகள் தொங்குதல்: பாகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே நகரும் போது அச்சுத்தலை நிறைய சரங்கள் அல்லது முடிகளைப் பின்னால் விட்டுச் செல்கிறது.
  • அதிக வெப்பம்: ஒல்லியான பகுதிகள் அதிக வெப்பமடைந்து சிதைந்துவிடுகின்றன.
  • அடுக்கு நகர்தல்: அடுக்குகள் ஒன்றுக்கொன்று தவறாக அமைகின்றன.

தர உறுதி வடிவமைப்பிலிருந்தே தொடங்குகிறது

3D அச்சுக்கு வடிவமைக்கும் போது, ஒரு நல்ல பாகத்தின் தரத்தை உறுதிசெய்ய நீங்கள் சிந்திக்க வேண்டிய தொடர் பரிசீலனைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சுவர் தடிமன், அச்சிடும் அறையில் பாகத்தின் நோக்குநிலை (part orientation in the chamber) மற்றும் கூர்மையான விளிம்புகளைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.

உயர் தரத்தை உறுதிப்படுத்துவதில் தர ஆய்வு ஒரு முக்கிய பங்களிக்கிறது

எடுத்துக்காட்டாக பார்வை மூலம் ஆய்வு, பரிமாணங்களின் அளவீடுகள், பாகங்களை எடைபோடுதல் மற்றும் படங்களை எடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கு அச்சிடும் அளவுருக்கள், பயன்படுத்தும் கச்சாப் பொருட்கள், பிந்தைய செயலாக்கம் (post processing) அல்லது பாகத்தின் வடிவவியலை மாற்றலாம்.

திறந்த மூல 3D அச்சு தரக் கட்டுப்பாட்டுக் கணினிப் பார்வை அமைப்பு

திறந்த மூல 3D அச்சு தரக் கட்டுப்பாட்டுக் கணினிப் பார்வை அமைப்பு

மிச்சிகன் தொழில்நுட்பப் பல்கலை (Michigan Technological University) ஆய்வாளர்கள் 3D அச்சு தரக் கட்டுப்பாட்டுக்கான கணினிப் பார்வை அமைப்பை உருவாக்கி திறந்த மூலமாகப் பகிர்ந்துள்ளார்கள். இது கணினிப் பார்வைக்கான ஓபன்சிவி (opencv) மற்றும் பல பைதான் நிரலகங்களைப் பயன்படுத்துகிறது. இது 3D அச்சு வேலை நடக்கும்போதே காணொளி படக்கருவி மூலம் கண்காணித்துத் தரக் கட்டுப்பாட்டு வேலையைச் செய்கிறது.

நன்றி

  1. Open Source 3D Print Quality Control Vision System

இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!

ashokramach@gmail.com

%d bloggers like this: