வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR)
தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது என்றும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர் என்றும் முன்னர் பார்த்தோம். VR காட்சிகளில் நாம் மெய்நிகர் உலகத்திலேயேதான் இருக்கமுடியும். ஆனால் AR தொழில்நுட்பம் காட்சிகளை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது. இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன. மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தகவல்களை சிறப்பாக நினைவில் வைக்க AR உதவுகிறது.
கோட்பாட்டில் நேரத்தைக் குறைத்துப் பயிற்சியில் அதிக நேரம் செலவிடலாம்
குறிக்கோள் பயணங்கள் (expeditions) என்ற பெயரில் அட்டைப்பெட்டியில் (cardboard) திறன்பேசி வைத்து செயலியை ஓட்டிப் பார்க்கக்கூடிய பல VR காட்சிகளை கூகிள் முன்னர் வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பின்னர் பல AR காட்சிகளையும் வெளியிட்டது. எடுத்துக்காட்டாக, இயற்கையின் சீற்றங்கள் (Forces of nature) என்ற பயணத்தில் சூறைக்காற்று (tornado), பெரும்புயல் (hurricane), ஆழிப் பேரலை (tsunami), எரிமலை (volcano) மற்றும் நில நடுக்கம் (earthquake) ஆகியவற்றை நம்முடைய வகுப்பறையிலேயே AR காட்சிகளாகத் திறன்பேசியில் பார்க்கலாம். அதேபோல எந்திரங்கள் (engines) என்ற தலைப்பில் நீராவி எந்திரம் (steam engine), உட்கனற்சி எந்திரம் (internal combustion engine), நீரேற்றி (hydraulic pump) போன்ற பல எந்திரங்களைப் பார்க்கலாம்.
கோட்பாடு மட்டுமே கற்பது அயரவைக்கும், மேலும் புரிவதும் கடினம். பயிற்சியாளர்கள் கோட்பாட்டில் அதிக நேரம் செலவிடாமல் கைமுறையாக செய்யக்கூடிய இம்மாதிரி AR காட்சிகளைப் பயிற்சிகளாகச் செய்யலாம்.
புதிய தொழிலாளர்களுக்குப் பயிற்சி
ஒரு சீருந்து தயாரிப்பு நிறுவனம் பணியாளர்களுக்குப் பழுதுபார்க்கும் பயிற்சி கொடுக்கும்போது வண்டியின் முகப்பலகத்தைக் (dashboard) கழட்டி பின்னர் திரும்பவும் மாட்ட பயிற்சி கொடுத்து வந்தனர். இதற்குப் பதிலாக முகப்பலகத்தின் உள்ளேயுள்ள யாவற்றையும் ஊடுகதிர் (xray) மூலம் பார்ப்பதுபோல கைக்கணினியில் AR செயலி உருவாக்கினர். ஒவ்வொரு முறையும் முகப்பலகத்தைக் கழட்டி பின்னர் திரும்பவும் மாட்டத் தேவையில்லை. மேலும் உள்ளேயுள்ள விவரங்கள் மேலும் தெளிவாகத் தெரியும்.
பற்றவைத்தல் (welding) பயிற்சிக்கு AR
மற்றொரு நிறுவனம் பற்றவைப்புப் பயிற்சிக்கு AR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். பயில்வோர் பற்றவைப்பு பாவனையாக்கியில் (simulated welding) வேலைசெய்யும்போதே பயிற்றுநர்கள் அதைக் கணினித்திரையில் சரிபார்க்க முடியும். தவறுகளை உடனுக்குடன் திருத்தமுடியும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)
VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? முப்பரிமாண அல்லது இடஞ்சார்ந்த ஒலி அமைவு. தலை திருப்புவதைப் பின்தொடர்தல் (head tracking).