எளிய தமிழில் VR/AR/MR 18. தொழில்துறை மற்றும் உற்பத்தியில் AR

உற்பத்தியில் AR

உற்பத்தியில் AR

தொழிற்சாலை திட்டமிட (factory planning) மிகை மெய்ம்மை (AR) 

தற்போது இருக்கும் தொழிற்சாலையின் காணொளிக் காட்சியை எடுத்து அதன்மேல் நாம் புதிதாக வாங்கி நிறுவவிருக்கும் இயந்திரங்களின் எண்ணிம வடிவத்தை (digital shape) மெய்நிகர் மேலடுக்காக (overlay) வைத்துப் பார்க்கலாம். பிரச்சனைகள் தெரியவந்தால் உடன் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இது நம்முடைய திட்டமிடலின் நம்பகத்தன்மையை அதிகமாக்க வழிவகுக்கிறது. இதன் விளைவாக நேரம் மற்றும் செலவு குறைகிறது.

அங்கீகரித்த மாதிரியுடன் ஒப்பிடுதல்

நீங்கள் தயாரிப்புகள் மற்றும் பாகங்களை உங்கள் வாடிக்கையாளருக்கு வழங்கும்போது அவை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி உள்ளனவா என்று சோதனை செய்தல் வழக்கம். இவற்றில் பாகத்தின் நீளம், அகலம், விட்டம் போன்ற புறநிலையான (objective) அளவீடுகளில் பிரச்சனை வராது. ஆனால் வெளித்தோற்றம் (external appearance), மேற்பரப்புச் சீர்மை (surface finish) போன்ற அகநிலையான (subjective) தேவைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க அங்கீகரித்த மாதிரி ஒன்றை வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பது புழக்கத்தில் உள்ளது. அங்கீகரித்த மாதிரியின் படத்தை அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்க்க AR உதவுகிறது.

தொலை உதவி (remote assistance) மூலம் பிரச்சனையைத் தீர்த்தல் (trouble shooting)

உங்கள் நிறுவனம் விற்ற தயாரிப்பில் பிரச்சனை வந்தால் அதைப் பழுது பார்க்க உங்கள் தொழில்நுட்ப உதவியாளரை வாடிக்கையாளரின் வீட்டுக்கு அனுப்புவீர்கள். அந்த உதவியாளரால் தீர்வுகாண முடியாத பிரச்சனை என்றால் என்ன செய்வது? அடுத்து உங்கள் தொழில்நுட்ப வல்லுநர்தான் பார்க்கவேண்டும். உங்கள் தொழில்நுட்ப வல்லுநர் பல வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் செல்வது செலவும் அதிகம், நேரமும் போதாது. உதவியாளர் தொழில்நுட்ப வல்லுநரைக் காணொளியில் அழைத்து பழுதான தயாரிப்பைக் காணொளியில் காட்டலாம். வல்லுநர் பழுது எங்கேயென்று எப்படி சோதனை செய்வது, பழுதான பாகத்தை எப்படி சரிசெய்வது, தேவைப்பட்டால் எப்படி மாற்றுவது என்று AR உதவியுடன் படம் வரைந்து ஆலோசனை கூறலாம்.

புதிய தயாரிப்பு உருவாக்குதல் (new product development)

புதிய தயாரிப்பு உருவாக்குதல் அல்லது இருக்கும் தயாரிப்பில் பெருமளவு மறு வடிவமைப்பு செய்தல் (major redesign) ஆகிய திட்டங்கள் வழக்கமாக நீண்ட காலம் எடுக்கும். மேலும் நிதி மற்றும் வல்லுநர்களின் நேரம் ஆகிய வளங்களை அதீதமாக முதலீடு செய்யவேண்டும். தொடக்கத்தில் இருந்த கருத்துருபடி (initial concept) செய்த முன்வடிவத்தைப் (prototype) பலமுறை மாற்றியமைக்க நேரிடும். அப்படிச் செய்யும்போது நிறுவனத்தின் பல துறைகளுடன் இடைவிடாமல் தொடர்பிலிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்குவதன் மூலம் இந்த செயல்முறையின் கடினமான தன்மையை AR குறைக்கிறது. எடுத்துக்காட்டாக, நிறுவன இயக்குநர்கள் ஒரு AR சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிப்புகளை நிகழ்நேரத்தில் உருவாக்குவதைக் காணலாம். இது எந்த தாமதத்தையும் ஏற்படுத்தாமல் ஆலோசனைகளையும் உள்நோக்குகளையும் வழங்க அனுமதிக்கிறது. இந்த வழியில் AR பயன்படுத்துவதால் தயாரிப்பு உருவாக்குதலின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கிறது.

நன்றி

  1. How AR Can Improve Manufacturing

இத்தொடரில் அடுத்த கட்டுரை: கல்வி மற்றும் பயிற்சியில் AR

வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR). கோட்பாட்டில் நேரத்தைக் குறைத்துப் பயிற்சியில் அதிக நேரம் செலவிடலாம். புதிய தொழிலாளர்களுக்குப் பயிற்சி. பற்றவைத்தல் (welding) பயிற்சிக்கு AR.

ashokramach@gmail.com

%d bloggers like this: