எளிய தமிழில் Robotics 19. ஸ்பார்க்கி (Sparki) அர்டுயினோ (Arduino) எந்திரன்

ஆர்க்பாட்டிக்ஸ் (ArcBotics) ஸ்பார்க்கி ஒரு சாதாரண பொம்மையல்ல. எந்திரனியல் பற்றியும் அதன் அடிப்படைகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள உதவும் ஒரு கல்விக்கான அடிப்படைத் தளமாகும்.

ஆர்க்பாட்டிக்ஸ் ஸ்பார்க்கி எந்திரன்

ஆர்க்பாட்டிக்ஸ் ஸ்பார்க்கி எந்திரன்

ஸ்பார்க்கி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டது. ஸ்பார்க்கிக்கு 4 AA மின்கலங்கள் தேவை. நீங்கள் வழக்கமான கார (alkaline) மின்கலங்கள் அல்லது மீண்டும் மின்னேற்றவல்ல (rechargeable) மின்கலங்களைப் பயன்படுத்தலாம்.

குறைந்த விலை எந்திரன்களில் வரும் மலிவான மின்விசைகள் போலல்லாமல் இதில் துல்லியமாகக் கட்டுப்படுத்தக்கூடிய படிநிலை மின்விசைகள் (stepper motors) உள்ளன. ஒரு பச்சை-நீலம்-சிவப்பு (பநீசி) எல்இடி (RGB LED) மற்றும் ஒரு தொனி ஒலியெழுப்பி உண்டு. எந்த சிறுவர்களின் எந்திரன்களிலும் இல்லாத ஒரு எல்சிடி (LCD) காட்சித்திரை கூட உண்டு. இந்த அம்சங்கள் நம்மால் செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் கணிசமாக நீட்டிக்கின்றன.

இது அர்டுயினோ நுண்கட்டுப்படுத்தியை (Arduino microcontroller) அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் விரும்பியவாறு இந்த எந்திரனை மேலும் விரிவாக்க முடியும்.

இதன் தூரம் உணரிக் கண்கள் ஒரு திரும்பக்கூடிய பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே இதனால் ‘தலையைத்’ திருப்பிப் பார்க்க முடியும். இதற்கு ஒளி உணரிகள், முடுக்க மானி (accelerometer), காந்தமானி (magnetometer), அகச்சிவப்பு உணரி போன்ற பல உணரிகள் உள்ளன.  மற்றும் ஒரு அகச்சிவப்பு தொலைவியக்கியும் உண்டு.

தொலைவியக்கியால் இயக்கும் நிரலை ஸ்பார்க்கியில் நிறுவியே அனுப்புகிறார்கள். நீங்களாக நிரல் எழுதி இயக்கக் கற்றுக்கொள்ளும்வரை இதை வைத்துத் தொடங்கலாம். ஸ்பார்க்கியை ஓட்டவும் மற்றும் அதன் சில அம்சங்களை முயற்சி செய்து பார்க்கவும் இந்தத் தொலைவியக்கியைப் பயன்படுத்தப்படலாம்.

இந்த எந்திரனை வைத்து நீங்கள் கீழ்க்கண்டவை போன்ற பல திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்:

 • ஓரத்தைத் தவிர்த்தல் (Edge avoidance)
 • கோட்டைத் தொடர்தல் (Line following)
 • புதிர் பாதைக்குத் தீர்வு காணுதல் (Maze solving)
 • சுவரைத் தவிர்த்தல் (Wall avoidance)
 • அறைக்குள் வலம்வரல் (Room navigation)
 • பொருளை மீட்டெடுத்தல் (Object retrieval)
 • ஒளியைத் தொடர்தல்/தவிர்த்தல் (Follow/hide from light sources)
 • உருவத்தை வரைதல் (Shape drawing)
 • கணினி உள்ளிடுதல் (Computer input)
 • மற்ற ஸ்பார்க்கிகளுடன் விளையாடுதல்

ஸ்பார்க்கிடுயினோ ‌(SparkiDuino) என்பது ஸ்பார்க்கி எந்திரனுக்கு நிரல் எழுத உதவும் ஒரு திறந்த மூல ஒருங்கிணைந்த நிரலாக்க சூழல் (IDE).

இழுத்து விடுதல் (drag-and-drop) முறையில் நிரல் எழுதுதல்

மினிப்ளாக் (Minibloq) என்பது அர்டுயினோவுக்கு ஒரு வரைகலை நிரல் இயற்றியாகும். இதில் ஸ்க்ராட்ச் (Scratch) நிரலாக்கம் போன்று எளிதான இழுத்து விடுதல் (drag-and-dtop) முறையில் நிரல் எழுதலாம். இதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்கள்களுக்கு நிரலாக்கம் கற்பிப்பதில் உதவுவதாகும். இது சிறப்பாக தொடக்க, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மினிப்ளாக் வரைகலை நிரல் இயற்றி

மினிப்ளாக் வரைகலை நிரல் இயற்றி

நன்றி தெரிவிப்புகள்

 1. Adafruit Industries – Sparki
 2. Example Minibloq program showing serial communications and a counter by Gijs.noorlander – Wikimedia Commons

இத்தொடரில் அடுத்த கட்டுரை:  மற்றும் சில எந்திரன் தொகுப்புகள்    தைமியோ 2 (Thymio II), லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ் (Lego Mindstorms), பிராக்கியோ (Braccio) எந்திரன் கை, ஹெக்சி (Hexy) நடக்கும் எந்திரன், டர்டில்பாட் (Turtlebot)  

%d bloggers like this: