எளிய தமிழில் Car Electronics 4. ஊர்தி இயக்கிகள் தொழில்நுட்பம்

ஊர்தி இயக்கிகள் (actuators) எரிபொருளைக் கட்டுப்படுத்துவது முதல் காற்றுக் குளிர்விப்பு அமைப்பில் காற்றோட்டத்தை இயக்குவது மற்றும் திறன் இருக்கைகளை இயக்குவது வரை பல்வேறு செயல்திறன்களையும் பயணிகளின் வசதிக்கான வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் நீங்கள் இயக்கிகளைக் கைமுறையாக இயக்கலாம். ஆனால் பெரும்பாலும் கணினிகள் தேவைக்கேற்ப முடிவெடுத்து இவற்றை இயக்குகின்றன.

எடுத்துக்காட்டாக, பழைய எரி கலப்பி (carburetor) கார்களில் நீங்கள் முடுக்கியை (accelerator) மிதிக்கும் போது, அது நேரடியாக ஊசிவாய் வாயிலைத் (throttle valve) திறக்கும். இதனால் அதிகக் காற்றையும் எரிபொருளையும் உள்ளே அனுப்பும். புதிய கார்களில் இதற்குப் பதிலாக, முடுக்கியின் மிதியை எவ்வளவு தூரம் கீழே அழுத்தினீர்கள் என்று ஒரு உணரி மின்னணுக் கட்டுப்பாட்டகத்திடம் (ECU) தெரிவிக்கும். உடன் ஒரு இயக்கி அதற்கேற்ப ஊசிவாய் வாயிலைத் திறக்கும். 

உங்கள் கார் ஒரு சந்தியில் சமிக்ஞை விளக்குக்காக நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் பொறி செயலற்ற வேகத்தில் (idle speed) மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும். வெப்ப நிலைநிறுத்தியானது (thermostat) காற்றுக் குளிர்விப்பியை (air conditioning) ஓட்டத் துவக்கினால் இந்தக் கூடுதல் சுமைக்கு ஈடுகொடுக்கும்படி பொறிக்குள் செல்லும் காற்று எரிபொருள் கலவையின் அளவை ஒரு இயக்கி அதிகரிக்கும்.

இயக்க வகை (Type of Motion)

இயக்க வகைப்படி இயக்கிகள் இரண்டு வகைகளில் வருகின்றன – நேரியல் இயக்கிகளும் (Linear Actuators) சுழல் இயக்கிகளும் (Rotary Actuators).

நேரியல் இயக்கிகள்

இவை முன்னும் பின்னும் நேரியலாக இயங்குபவை. துல்லியமான இயக்கம் அல்லது சீரான இயக்கக் கட்டுப்பாடு தேவைப்பட்டால் நேரியல் இயக்கிகளே சிறந்த தீர்வாகும். நழுவும் கதவு, சுமையகம் மற்றும் கூரைக் கதவுகளைத் திறக்கக் கார்களில் நேரியல் இயக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. 

சுழல் இயக்கிகள்

இவை சுழலும் இயக்கம் அல்லது முறுக்குவிசையை உருவாக்கும் இயக்கிகள் ஆகும். முன் கண்ணாடித் துடைப்பான் இந்த வகை இயக்கிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சக்தியின் மூலம் (Source of Power)

இயக்கிகளின் மூல சக்தியை வைத்து இவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

மின் இயக்கிகள் (Electric Actuators)

மின் இயக்கிகள் மின்பொறியின் சுழற்சி இயக்கத்தை நேரியல் இயக்கமாக மாற்றுவதன் மூலம் செயல்படுகின்றன. பல்லிணைகள் வழியாக மின்பொறி இயக்கியின் திருகுமரையைச் (actuator nut) சுழற்றும். இதன் விளைவாகத் திருகாணித் தண்டு நேரியலாக நகரும்.

electric-linear-actuator

மின் நேரியல் இயக்கி வெட்டுத் தோற்றம்

படிநிலை மின்பொறியால் (stepper motor) அதிக வேகத்தில் இயங்க முடியாது, ஆனால் அதிக முறுக்குவிசை (torque) தரும். வழக்கமான மின்பொறிகளை விட படிநிலை மின்பொறிகள் தேவையான இடத்தில் மிகவும் துல்லியமாக நிறுத்தக் கூடியவை. 

நீரழுத்த இயக்கிகள் (Hydraulic Actuators)

நீரழுத்த இயக்கிகள் திரவம் நிரப்பப்பட்ட உருளைக்குள் ஆடுதண்டு (piston) பயன்படுத்தி இயங்குகின்றன. முன்னும் பின்னும் நகர இரண்டு பக்கங்களிலும் அழுத்தத்திலுள்ள திரவத்தை அனுப்பலாம். அல்லது திரும்பும் இயக்கத்திற்காக ஒரு முனையில் ஒரு சுருள்வில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

காற்றழுத்த இயக்கிகள் (Pneumatic Actuators)

இந்த வகை இயக்கிகள் நேரியல் இயக்கத்தை உருவாக்க அழுத்தத்திலுள்ள வாயு அல்லது காற்றைப் பயன்படுத்துகின்றன.

பொதுவாக நீரழுத்த இயக்கிகள் அவற்றின் சக்திக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன, காற்றழுத்த இயக்கிகள் அவற்றின் வேகத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

நன்றி

  1. Types of Linear Actuators – IQSdirectory.com

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பொறிக் கட்டுப்பாட்டகம்

பழைய கார்களில் எரிகலப்பி (carburetor) மற்றும் நெரிப்பான் (choke). மின்னணு பொறிக் கட்டுப்பாட்டகம் (Engine Control Unit – ECU). ECU மூலம் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகள். நெம்புருள் தண்டு இடம் உணரி (Camshaft Position Sensor). சுழற்றித் தண்டு  இடம் உணரி (Crankshaft Position Sensor). பொறி தட்டல் உணரிகள் (Engine Knock Sensors). காற்றுப்பாய்வு உணரிகள் (Air-Flow Sensors). வெப்பநிலை உணரிகள் (Temperature Sensors).

ashokramach@gmail.com

%d bloggers like this: