எளிய தமிழில் Car Electronics 22. ஊர்தித்தர லினக்ஸ்

லினக்ஸ் (Linux) முதன்முதலில் தனிநபர் கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் வழங்கிகள் (servers) முதல் மீத்திறன் கணினிகள் (super computers) வரை, திறன்பேசிகள் (smartphones) முதல்  பொருட்களின் இணையம் (Internet of Things – IoT) வரை லினக்ஸ் இயங்குதளமே ஆதிக்கம் செலுத்துகிறது. 

ஊர்தித் தர லினக்ஸ் (Automotive Grade Linux – AGL) என்பது லினக்ஸ் கருநிரலின் (kernel) அடிப்படையிலான திறந்த மூலத் திட்டமாகும். இதை உருவாக்கி மேம்படுத்தப் பல வாகன உற்பத்தியாளர்கள், முதல் அடுக்கு வழங்குநர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இது திறந்த மூலம் மட்டுமல்லாமல் எந்த ஒரு தனிப்பட்ட தயாரிப்பாளரையும் சார்ந்து இல்லை.

ஊர்தியில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் AGL வந்துவிட்டது

இது தொடக்கத்தில் ஊர்திகளில் தகவல் பொழுதுபோக்கு அமைப்புகளுக்கு பயன்பட்டது. பின்னர் மானித்தொகுப்பு (Instrument Cluster), முகப்புக் கண்ணாடிக் காட்சித்திரை (heads up display), தொலைக்கண்காணிப்பு (telematics) போன்ற பல வேலைகளுக்கும் வந்துவிட்டது.

Automotive-grade-linux

அனைத்து அம்சங்களுக்கும் ஊர்தித்தர லினக்ஸ்

மென்பொருள் உருவாக்க நிரலகமும் (SDK) பல ஒருங்கிணைந்த நிரலாக்க சூழல்கள்களும் (IDEs)

நிரல் உருவாக்குதல், மேம்படுத்தல் வேலைகளைத் துரிதப்படுத்த நிரலகங்கள் தேவை. நிரலகங்கள் மட்டுமல்லாமல் இசை ஒலிப்பி, காணொளி காட்டி, வானொலி, வழிச்செலுத்தல், இணைய உலாவி, புளூடூத், வைஃபை, காற்றுக் கட்டுப்பாடு, ஒலிக் கலப்பி (audio mixer) மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் போன்ற மாதிரி செயலிகளையும் இந்த SDK வழங்குகிறது.

நிரல் எழுத உதவும் நெட்பீன்ஸ் (NetBeans), VS கோட் (Visual Studio Code), Qt கிரியேட்டர் (Qt Creator), எக்லிப்ஸ் (Eclipse) போன்ற பல ஒருங்கிணைந்த நிரலாக்க சூழல்களையும் பயன்படுத்தலாம்.

ஊர்திகளில் பலவிதமான வன்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இந்த இயங்கு தளம் பரந்த வன்பொருள் ஆதரவும் கொண்டுள்ளது.

நிரல் மறுபயன்பாடு 

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக நிரல் எழுதுவதே தனியுரிமை இயங்குதளங்களில் வழக்கமாக இருந்தது. ஆனால் இது திறந்த மூலம் என்பதால் வழங்குநர்கள் ஒருமுறை நிரல் எழுதிப் பல ஊர்தித் தயாரிப்பாளர்களுக்குத் தகவமைக்க (configure) முடியும். இம்மாதிரி நிரல் மறுபயன்பாடு செய்வதன் மூலம் மென்பொருள் உருவாக்கும் செயல்பாட்டின் திறனை உயர்த்த முடியும்.

இது இயங்குதளம் மட்டுமல்லாமல் வன்பொருளுக்கும், செயலிகளுக்கும் இடையிலான மென்பொருள் (middleware), செயலி உருவாக்குவதற்கு அடிப்படை சட்டக நிரலகம் (application framework) ஆகியவற்றை  உள்ளடக்கியது, மேலும் உற்பத்தித் திட்டத்திற்குத் தேவையான நிரலில்  70-80% வழங்குகிறது. ஊர்தி உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்கள் மற்ற 20-30% தளத்தை அம்சங்கள், சேவைகள் மற்றும் வணிக அடையாளம் (branding) மூலம் தங்கள் தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தனிப்பயனாக்குகின்றனர்.

AGL தற்போது உலகளவில் பல ஊர்திகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது 

இந்த இயங்குதளம் இன்று உலகளவில் டொயோட்டா (Toyota), லெக்ஸஸ் (Lexus), சுபாரு அவுட்பேக் (Subaru Outback) மற்றும் லெகசி (Legacy) ஊர்திகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு சந்தையில் உள்ளது.

நன்றி

  1. Linux, Android And Autonomous Vehicles – Forbes

இத்தொடரில் அடுத்த கட்டுரை: உட்பதித்த நிரலாக்கம்

உட்பதித்த C நிரல் மொழி (Embedded C). பொதுவாகக் கணினிகளில் 64-பிட் (bit), ஆனால் ஊர்திகளில் 8, 16, 32-பிட். பாவனையாக்கியில் (Simulator) சோதனை.

ashokramach@gmail.com

%d bloggers like this: