எளிய தமிழில் Car Electronics 21. ஊர்தி இயங்குதளங்கள்

வன்பொருளையும் மென்பொருளையும் நிர்வகிப்பதற்கான அனைத்து முக்கிய செயல்பாடுகளையும் உள்ளடக்கியன இயங்குதளங்கள் (operating systems). மேலும் செயலிகள் வன்பொருளின் அம்சங்களை நேரடியாக அணுக இயலாது. இயங்குதளம் மூலமாகத்தான் அணுகவேண்டும். ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS), ஊர்தித்தர லினக்ஸ் (Automotive Grade Linux), பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX) ஆகியவை சந்தையில் பயன்பாட்டில் உள்ள சில ஊர்தி இயங்குதளங்கள் ஆகும்.

நிகழ் நேர இயங்கு தளம் (Real-time Operating System – RTOS)

கணினிகள், திறன்பேசிகள் ஆகியவற்றில் இயங்குதள வேலை சிறிதளவு தாமதமானால் பெரும் பிரச்சினை கிடையாது. ஆனால் ஊர்தி இயங்குதளங்களில் சில முக்கிய வேலைகளில் சிறிய தாமதமும் ஆபத்தாகலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு புதிய மாதிரி காருக்கு காற்றுப்பை (airbag) அமைப்பை வடிவமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காற்றுப்பையைக் கொஞ்சம் சீக்கிரம் அல்லது கொஞ்சம் தாமதமாக விடுவித்தால் நேரக் கட்டுப்பாட்டில் ஏற்படும் இச்சிறிய பிழை காரணமாக கடுமையான காயம் அல்லது மரணம் கூட நிகழலாம். ஆகவே வாகனங்களில் நிகழ் நேர இயங்கு தளங்களே (Real-time Operating Systems – RTOS) பயன்படுத்தப்படுகின்றன. நிகழ் நேர இயங்கு தளங்கள் மிகவும் துல்லியமான நேரக் கட்டுப்பாட்டுடனும் அதிக நம்பகத்தன்மையுடனும் செயலிகளை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொத்தைக் கருநிரலும் (monolithic kernel) நுண்கருநிரலும் (microkernel)

இயங்குதளத்தின் கருநிரலை வடிவமைக்க இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மொத்தைக் கருநிரல், மற்றோன்று நுண்கருநிரல். நுண்கருநிரல் OS ஆனது, OS ஐச் செயல்படுத்துவதற்குத் தேவையான மிகக்குறைந்தபட்ச  நிரல்களை மட்டுமே கொண்டுள்ளது.  கூடுதல் OS சேவைகள் தனிக் கூறுகளாக (modules) இருக்கும். அவை தேவைக்கேற்ப நுண்கருநிரல் மூலம் செயல்படுத்தப்படும். மொத்தைக் கருநிரலைவிட நுண்கருநிரல் மிகச்சிறியதாக இருக்கும். ஆகவே இதில் இரு பெரும் நன்மைகள் உள்ளன. முதலாவது, வண்டியைத் துவக்கும் பொத்தானை அழுத்தியதும் வெகு விரைவில் நுண்கட்டுப்படுத்தியில் ஏற்றித் தயாராகிவிடும். இரண்டாவது, மொத்தைக் கருநிரலைவிட இதைப் பாதுகாப்பாக வைப்பதும் எளிது. மொத்தைக் கருநிரலுக்கு ஒரு எடுத்துக்காட்டு வாகனத்தர லினக்ஸ். நுண்கருநிரலுக்கு ஒரு எடுத்துக்காட்டு பிளாக்பெரி கியூனிக்ஸ்.

பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX)

இது வணிக ரீதியான நிகழ்நேர இயங்குதளம். முதன்மையாக உட்பதித்த அமைப்புகள் (embedded systems) சந்தையை இலக்காகக் கொண்டது. இது கார்கள், மருத்துவ சாதனங்கள், நிரல்வழிக் கட்டுப்படுத்தி (PLC – Programmable Logic Controller), எந்திரன்கள் (robots), ரயில்கள் போன்ற பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மென்பொருள் உருவாக்குநர்கள் கண்ணோட்டத்தில், இது லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் போன்றது. இந்த மென்பொருள் முக்கியமாக ISO 26262, ASIL-D ஆகிய சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.

ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS)

இது ஒரு திறந்த மூல இயங்குதளம். தகவல் பரிமாறுதல் (messaging), வழிசெலுத்தல், பதிவு செய்த இசையை ஒலித்தல் போன்ற தகவல் பொழுதுபோக்குப் பணிகளைத் தவிர, காற்றுக் கட்டுப்பாடு போன்ற வாகனம் சார்ந்த செயல்பாடுகளைக் கையாளுவதை இந்த இயங்குதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நில வரைபடம் (Google Maps), உதவியாளர் (Google Assistant) போன்ற கூகுள் தானுந்து சேவைகளை (Google Automotive Services) இத்துடன் எளிதாக ஒன்றிணைக்கலாம்.

நன்றி

  1. Automotive electronics: What are they, and how do they differ from “normal” electronics?

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஊர்தித்தர லினக்ஸ்

ஊர்தியில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் AGL வந்துவிட்டது. மென்பொருள் உருவாக்க நிரலகமும் (SDK) பல ஒருங்கிணைந்த நிரலாக்க சூழல்கள்களும் (IDEs). நிரல் மறுபயன்பாடு. AGL தற்போது உலகளவில் பல ஊர்திகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

ashokramach@gmail.com

%d bloggers like this: