எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் – அறிமுகம்

ஒரு நிரலரின் கணினியில் உருவாகிற மென்பொருளைப் பயனருக்குக் கொண்டுபோய் சேர்ப்பதற்கிடையே பல்வேறு படிநிலைகள் உள்ளன. பின்வரும் படங்களின் உதவியுடன் அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒரு பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு  (Version control system) இருக்கவேண்டும். நிரலர்கள், ஒவ்வொரு நாளூம், பலமுறை தமது நிரலை பதிப்புக் கட்டுபாட்டுக்கு அனுப்பியவண்ணம் இருப்பர்.

நிரலர்கள் அனுப்புகிற, இந்த ஒவ்வொரு பதிப்பும், தரமானதாக இருக்கிறதா என்பதை சோதிக்கவேண்டும். இதற்கு இடையறாத ஒருங்கிணைப்பு (Continuous Integration) என்று பெயர். இதற்கென ஜென்கின்ஸ், டிராவிஸ், கோ போன்ற கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு ஒரு புதிய நிரல் பதிப்பு அனுப்பப்பட்டவுடன், இந்த இடையறாத ஒருங்கிணைப்புப் பணி தொடங்கிவிடும். இப்பணியில் மூன்று முக்கிய நிலைகள் உள்ளன.

  1. கட்டுதல் – Build
  2. சோதித்தல் – Test
  3. பொதியமாக்கல் – Package

ஒவ்வொரு நிரல் பதிப்பும், இந்த மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் நிரல் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இதில் எந்தவொரு நிலை தோல்வியடைந்தாலும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படக்கூடாது; அந்நிலை சரிசெய்யப்படும்வரை, பிறர் புதியநிரலைப் பதிப்பிக்கக்கூடாது. இவையெல்லாம் நிரலர்குழுவிற்கான சில நல்லபழக்கங்களாகும்.

அடுத்தகட்டமாக, நிரல்பொதியை (Package) பல சூழல்களில் (Environment) நிறுவி சோதிக்கவேண்டும். நிரலரின் கணினியிலிருந்து, பயன்பாட்டுச் சூழலுக்குச் செல்லும்வழியில், நான்கு முக்கிய சூழல்கள், உள்ளன. இச்சூழல்களின் எண்ணிக்கையும், பெயரும் ஒவ்வொரு திட்டத்துக்கும் மாறுபட்டாலும், பொதுவாக பயன்படுத்தப்படுகிற சூழல்களை இங்கே பட்டியலிடலாம்.

  1. உருவாக்கச்சூழல் – Development environment
  2. சோதனைச்சூழல் – Quality Assurance environment (QA / test)
  3. பயனர் ஏற்புக்கான சோதனைச்சூழல் – User Acceptance Testing environment (UAT)
  4. பயனர் பயன்பாட்டுக்கான சூழல் – Production environment

எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக்

அமேசான் இணையச்சேவைகளில் இதுபோன்ற சூழல்களை உருவாக்கவும், பராமரிக்கவும், பல்வேறு கருவிகள் / சேவைகள் உள்ளன. அவற்றுள் எளிமையான, தொடக்கநிலை நிரலர்களாலும் பயன்படுத்தக்கூடிய சேவையாக எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் உள்ளது.

நீங்கள் ஒரு கணினி வாங்கவேண்டுமென விரும்புகிறீர்கள். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கணினியின் ஒவ்வொரு உதிரிபாகத்தையும் நீங்களே தனித்தனியாகத் தேர்ந்தெடுத்து, ஒன்றோடொன்று இணைத்து ஒரு கணினியை உருவாக்கலாம். அல்லது, ஒரு கடைக்குச்சென்று, அவர்கள் உருவாக்கியிருக்கும் கணினிகளில், உங்கள் தேவைக்கேற்றவொரு கணினியை வாங்கிவரலாம். உங்கள் தேவைக்கும், திறனுக்கும் ஏற்றபடி, இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

அதேபோல, தான் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் பிரத்யேகமான நிரல்வழி இடைமுகங்களை அமேசான் வழங்குகிறது. அவையனைத்தையும் தனித்தனியே பயன்படுத்தி ஒரு சூழலைக் கட்டமைப்பதற்கு அதிக உழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. அல்லது எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக்கைப் பயன்படுத்தி எளிமையாக, ஒரு சூழலுக்கான மேகக்கணினிகளையும், பிற சேவைகளுக்கான வளங்களையும், வரையறுத்துக்கொள்ளலாம். பிறகு, அதனை அடிப்படையாகக்கொண்டு பிற சூழல்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

இச்சூழல்களில் புதிய நிரல்பொதியைப் பதிவேற்றவும், நிறுவவும் தேவையான கட்டளைகளை எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் கொண்டிருக்கிறது. அடுத்த பதிவில் ஓர் எளிய நோடு.ஜேஎஸ் வலைத்தளத்தை எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் மூலமாக பயன்பாட்டிற்கு அனுப்புவது பற்றி அறியலாம்.

%d bloggers like this: