மேலை நாடுகளில் சமீபத்தில் செய்த ஆய்வின்படி மூன்றில் ஒரு நிறுவனத்தில் தான் சரக்கு மேலாண்மை (Inventory Management) மென்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்தது. நம் நாட்டில் குறு, சிறு நிறுவனங்களில் இந்த விழுக்காடு இன்னும் குறைவாகத்தான் இருக்கும். மற்றவர்கள் காகிதப்பதிவேடு அல்லது விரிதாளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இம்முறையில் வேலை மெனக்கெடு அதிகம் மட்டுமல்லாமல் தரவுகள் சரியாக இல்லாததால் பிரச்சினைகள் பல வரக்கூடும். தேவையான பாகங்கள் தட்டுப்பாடாக ஆகிவிடலாம், மாறாக தேவையற்ற பாகங்கள் அதிக அளவில் பண்டகத்தில் வீணாக இருக்கலாம்.
ஆனால் மென்பொருள் பயன்படுத்துவதில் ஒரு முக்கியத் தேவை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பாகத்தின் அடையாள எண்ணை உள்ளிட வேண்டும். பொருட்களின் இணையம் மற்றும் பட்டைக்குறி அல்லது கட்டக்குறி பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். சரக்கு மேலாண்மைக்கு திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்தலாம். நாளது தேதி வரை சரக்கு இருப்பு துல்லியமாகத் தெரிய வரும். மேலும் சரக்கு திருட்டுப் போவது மற்றும் வீணாவதை உடன் கண்டுபிடித்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
பட்டைக் குறியீடு
பட்டைக் குறியீட்டின் வசதிகள்:
- ஒரு முறை பட்டைக்குறியீட்டை அச்சிட்டு ஒட்டி விட்டால் எந்த வரிக்குறியீடு படிப்பியாலும் அதில் உள்ள விவரங்களைப் படிக்க முடியும்.
பட்டைக் குறியீட்டின் குறைபாடுகள்:
- ஒட்டுத்தாள் சேதமானால் அல்லது அழுக்கானால் படிக்க முடியாமல் போகலாம்.
- இவற்றை நேரடியாகப் பார்த்துத்தான் படிக்க முடியும். கோணத்தில் படிக்க முடியாது. ஆகவே ஒரு பணியாளர் கைமுறையாகத்தான் வருட (scan) வேண்டும்.
கட்டக் குறியீடு
பட்டைகளின் அகலத்தை வைத்து ஒரு பரிமாணத்தில் பட்டைக்குறி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறாக கட்டங்களை வைத்து இரு பரிமாணத்தில் கட்டக்குறி வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டைக் குறியீட்டில் நடைமுடையில் சுமார் 20 எண்களை மட்டுமே வைக்க முடியும். ஆனால் கட்டக் குறியீட்டில் 50 க்கும் மேற்பட்ட எழுத்துக்களையும் எண்களையும் வைக்க முடியும்.
குறியீடு உருவாக்கவும், படிக்கவும் திறந்த மூல மென்பொருட்கள்
குறியீடு படிப்பிகள் (Code Reader)
பட்டைக் குறியீடு வருடி (Barcode Scanner by ZXing Team – Android) மற்றும் QR வருடி (QR Scanner – Android): இவற்றை திறந்த மூல செயலிகள் அங்காடி F-Droid இலிருந்து பதிவிறக்கலாம்.
குறியீடு உருவாக்கிகள் (Code Generator)
ஸின்ட் (Zint) மற்றும் ஓகாபி பட்டைக் குறியீடு (OkapiBarcode): இவற்றை பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். அல்லது இந்த இணையதள சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
QR குறியீடு உருவாக்கி (QR Code generator): இந்த நிரல் தொகுப்பு ஜாவா, பைத்தான், ஜாவாஸ்கிரிப்ட், சி++ போன்ற பல மொழிகளில் கிடைக்கின்றது.
கியூரியேட்டர் (Qreator): இது லினக்ஸில் மட்டுமே ஓடும்.
கம்பியில்லா வருடிகள் (scanner)
குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy – BLE) கம்பியில்லா வருடிகளை IoT அமைப்பில் பயன்படுத்தலாம். மேலும் திறன்பேசியையும் வருடியாகப் (scanner) பயன்படுத்தலாம்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: வானலை அடையாளம் (RFID)
வானலை அடையாளத்தில் இரு வகைகள். வானலை அடையாளங்களைப் பயன்படுத்தல். வானலைப் படிப்பிகள்.