எளிய தமிழில் Car Electronics 7. நிறுத்தக் கட்டுப்பாடு

சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (Antilock Braking System – ABS) 

Antilock-braking-system

சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு

பழைய கார்களில், அவசர நிலைமையில், பிரேக்கை மிகவும் அழுத்தினால், சக்கரங்கள் சுழலாமல் முற்றிலும் நின்றுவிடும். இதைப் பூட்டுதல் (locking) என்று சொல்கிறோம். சக்கரங்கள் சுழலவில்லை என்றால் வண்டி சறுக்கும். நீங்கள் திருப்பும் பக்கம் போகாது. இதனால் ஊர்தியைத் தடைகளிலிருந்து விலக்கிப் பாதுகாப்பை நோக்கிச் செலுத்த இயலாமல் போய்விடும். ஊர்தியின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து விடுவீர்கள்.

இதைத் தவிர்க்க வண்டியைத் திருப்பும் திறனை இழக்காமல் ஊர்தியை நிறுத்த வேண்டும். எனவே, பிரேக்கைத் தொடர்ந்து அழுத்தாமல் விட்டுவிட்டு அழுத்தச் (pumping) சொல்வது பழைய வண்டிகளுக்கான பரிந்துரை. இதையே கணினி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதுதான் சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (ABS).

ABS அமைப்பில், உங்கள் காரின் சக்கர வேகம் கண்காணிக்கப்படுகிறது. சக்கரம் பூட்டுதல் கண்டறியப்பட்டால், கட்டுப்படுத்தும் கணினிக்கு  உணரி தெரிவிக்கும். ABS அமைப்பு ஒரு நொடிக்கு 20 முறை பிரேக்கை விட்டுவிட்டு அழுத்தும். இது சக்கரம் பூட்டுதலைத் தவிர்க்கிறது. ஆகவே உங்கள் ஊர்தியை அவசர நிலைமையிலும் கட்டுப்பாட்டுடன் ஓட்டவும், இடர்களைத் தவிர்த்து பாதுகாப்பாகத் திருப்பவும், நிறுத்தவும் உதவுகிறது.

இழுவைக் கட்டுப்பாடு (Traction Control System – TCS)

நெடுஞ்சாலையில் மணலோ அல்லது ஏதாவது கசிந்த திரவமோ இருந்தால் சக்கரம் பிடிப்பு இல்லாமல் சுழலக்கூடும். இம்மாதிரி ஒரு பக்க சக்கரம் மட்டுமே சுழன்றால் வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆபத்தான முறையில் திரும்பக்கூடும். இம்மாதிரி முடுக்கி உள்ளீடு, பொறியின் சக்தியும் உந்துசக்தி பரிமாற்றமும் சாலையின் மேற்பரப்பு நிலைகளுடன் பொருந்தாதபோது TCS செயல்படுத்தப்படுகிறது. பிடிப்பு இல்லாமல் சுழலும் சக்கரத்திற்கு பிரேக்குகள் பயன்படுத்தப்படும் அல்லது முறுக்குவிசை நிறுத்தப்பட்டு 4×4 ஊர்திகளில் மற்ற சக்கரங்களுக்கு மாற்றி விடப்படும்.

மேடு ஏறும் கட்டுப்பாடு (Hill-hold control)

வண்டி மேடு ஏறும்போது இடையில் நிறுத்தி திரும்பவும் ஏறவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். பிரேக்கிலிருந்து காலை எடுத்து முடுக்கியில் வைப்பதற்குள் வண்டி பின்னோக்கி நகரக்கூடும். இதைத் தவிர்க்க மேடு ஏறும் கட்டுப்பாடு உதவுகிறது. இது காலை எடுத்த பின்னும் பிரேக்கை இன்னும் சில வினாடிகள் பிடிக்கும்.

வேக உணரிகள் (Speed Sensors)

குறிப்பாக சாலை திருப்பங்களிலும் கரடு முரடான பாதைகளிலும் செல்லும்போது காரின் அனைத்து சக்கரங்களும் வெவ்வேறு வேகத்தில் சுழலக் கூடும். ஆகவே சக்கரங்களின் வேகத்தைக் கண்காணிப்பது அவசியமாகிறது. நவீன இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப கட்டுப்பாடு செய்ய இந்தத் தரவைப் பயன்படுத்துகின்றன. 

ஊர்தி தரிப்பு உணரிகள் (Parking Sensors)

இந்த உணரிகள் ஊர்திக்குப் பின்னால் அல்லது முன்னால் தடைகள் இருப்பதைக் கண்டறிந்து, பீப் சத்தமிடும் எச்சரிக்கைகள் மூலம் ஓட்டுநருக்குத் தெரிவிக்கின்றன. காரிலிருந்து தடையின் தூரம் குறையக்குறைய, மினுக்கும் விளக்கு (flashing indicator) தீவிரமடைகிறது. இதனால் ஓட்டுநர் அவசரத்தை உணர்ந்து பிரேக்கை உடனடியாக அழுத்த முடியும். 

நன்றி

  1. Anti-Lock Braking System: Technical Details Explained 

இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறன் உதவித் திருப்பல்

நீரழுத்த திறன் திருப்பல் (Hydraulic Power Steering – HPS). மின் திறன் திருப்பல் (Electric Power Steering – EPS). போகும் பக்கம் திரும்பும் முகப்பு விளக்குகள் (Corner bending lights).

ashokramach@gmail.com

%d bloggers like this: