எளிய தமிழில் CAD/CAM/CAE 2. கணினி வழி வடிவமைப்பு (CAD)

எந்திரவியல் பொறியியலே நம் குவியம்  

தொழில்முறை கட்டடக்கலை (architecture), பொறியியல் (engineering), அசைவூட்டம் (animation) மற்றும் வரைபட வடிவமைப்பு (graphic design) ஆகியவற்றிற்கு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் ஒரு முக்கியமான கருவியாகும். எனினும் இக்கட்டுரைத் தொடரில் நம் குவியம் எந்திரவியல் பொறியியலில் தானிருக்கும் என்பதை நீங்கள் ஒருவாறாக யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் கயெக கடைசல் எந்திரம் (CNC Lathe) அல்லது செங்குத்து துருவல் மையம் (VMC – Vertical Machining Centre) இவற்றில் தயாரிக்கக்கூடிய பாகங்களாக இருக்கும்.

உருவரைவும் வடிவமைப்பும் (Drafting and Design)

கணினிகள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு பொறிஞர்கள் (engineers) பளு (load), தகைவு (stress), தொய்வு (deflection) போன்ற கணிப்புகளைச் செய்து அடிப்படை வடிவமைப்பு (design) செய்வார்கள். ஆனால் பணிமனையில் பாகங்கள் செய்யவும், சந்தையில் ஆயத்த பாகங்கள் வாங்கவும் விவரமான வரைபடங்கள், பாகங்கள் பட்டியல், தேவைக் குறிப்புகள் (specifications) முதலியன தேவை. மேற்கண்ட வடிவமைப்புபடி வரைவாளர்கள் (draftsmen) உருவரைவு (drafting) செய்து மற்ற தேவையான விவரங்கள் அனைத்தையும் இட்டு நிரப்புவார்கள். கையால் வரைபடம் வரையும் அடிப்படைச் செயல்முறைகளை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் இங்கே படிக்கலாம். 

2D கணினி வழி உருவரைவு (Drafting) மென்பொருள்

மேற்கண்ட வேலைகள் அனைத்தையும் திறந்த மூல லிபர்கேட் (LibreCAD) 2D கணினி வழி வடிவமைப்பு மென்பொருளால் செய்ய முடியும். உருவரைவை அப்படியே அச்சடித்து பணிமனையில் கொடுத்து பாகங்கள் செய்து வாங்கவும் தோதானது.

லிபர்கேட் இலச்சினை

லிபர்கேட் இலச்சினை

லிபர்கேட் பொதுவான 2D வரைதல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதன் பயனர் இடைமுகம் அடைசலில்லாமல் இருப்பதால் தொடக்கநிலைப் பயிற்சிக்கும் ஏற்றது. இதில் செங்குத்து வீழல் என்ற வரித்தோற்றம் (orthographic view) தவிர சம அளவுத்தோற்றங்களையும் (isometric views) வரைய முடியும்.

3D கணினி வழி மாதிரி வடிவமைப்பு (Modeling) மென்பொருட்கள்

திறந்த மூல சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) எளிதாக நிறுவி பயன்படுத்தக் கூடியது. புதிதாக நீங்கள் 3D வடிவமைப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்த மென்பொருளில் தொடங்குங்கள். உங்கள் நிறுவனத்துக்கு மிகச் சிக்கலான வடிவமைப்புகளைத் தயார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இதில் பாகங்களை தொகுத்துப் (assembly) பார்ப்பதும் எளிது. ஆனால் விளிம்பு மழுக்கல் (chamfer) ஓரப்பட்டி கட்டல் (fillet) போன்ற சில வேலைகள் செய்ய முடியாது. 

ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு எந்த சிக்கலான 3D வடிவமைப்பையும் செய்யக்கூடிய, முழு அம்சங்களையும் கொண்ட மென்பொருள்தான் வேண்டுமென்றால்  திறந்த மூல ஃப்ரீகேட் (FreeCAD) பயன்படுத்துங்கள். தொகுத்துப் (assembly) பார்க்க, அசைவூட்டம் செய்து (motion simulation) பார்க்க, புகைப்படம் போன்ற தோற்ற அமைப்பை உருவாக்க (photo-realistic rendering) போன்ற பல வேலைகளுக்கு வேலைமேசை (workbench) என்ற துணைக்கருவிகள் தனியாக உள்ளன. உங்கள் வேலைக்குத் தகுந்தவாறு வேலைமேசைகளை நிறுவிக்கொள்ளலாம்.

ஃப்ரீகேட் இலச்சினை

ஃப்ரீகேட் இலச்சினை

உயர்நிலை 3D கணினி வழி மாதிரி வடிவமைப்பு (Modeling) மென்பொருள்

ஓபன்ஸ்கேட் இலச்சினை

ஓபன்ஸ்கேட் இலச்சினை

திறந்த மூல ஓபன்ஸ்கேட் (OpenSCAD) 3D மென்பொருளில் வழக்கமான ஊடாடும் (interactive) முறையில் வரைபடம் தயாரிக்க முடியாது. மாறாக வரைபடத்தின் விவரங்களை நிரலாக எழுத வேண்டும். நிரலை ஓட்டி, வரைந்த பாகங்களின் முன்னோட்டத்தைப் (preview) பார்க்கலாம். ஆனால் அந்த 3D தோற்றத்தில் சுட்டி மூலம் ஊடாடும் வகையில் அம்சங்களைத் தேர்ந்தெடுக்கவோ மாற்றவோ முடியாது. 

எந்திரன் வடிவமைக்க சிறப்பு 3D CAD மென்பொருள்

பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio) ஒரு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் மட்டுமல்ல. இது ஒரு எந்திரன் வடிவமைக்கத் தேவையான பல கருவிகள் உள்ளடக்கிய முழுத்தொகுப்பு. எனினும் நீங்கள் வடிவமைக்க விரும்பும் தயாரிப்பு ஒரு எந்திரன் என்றால் இதிலுள்ள கணினி வழி வடிவமைப்பு செயலியைப் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட கணினி வழி வடிவமைப்பு மென்பொருட்கள் அனைத்தையும் பற்றி பின்வரும் கட்டுரைகளில் விவரமாகப் பார்க்கலாம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. LibreCAD
  2. FreeCAD 
  3. OpenSCAD

இத்தொடரில் அடுத்த கட்டுரை: லிபர்கேட் (LibreCAD) 2D

வரித்தோற்றம் (orthogonal) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view). துணைத் தொகுப்புகள் (Blocks). அடுக்குகள் (Layers). DWG கோப்பு வகைகளையும் திறக்க முடியும். ODA கோப்பு மாற்றி (File Converter).

ashokramach@gmail.com

%d bloggers like this: