எளிய தமிழில் Car Electronics 9. சீர்வேகக் கட்டுப்பாடு

சீர்வேகக் கட்டுப்பாடு (Cruise control) என்பது நீங்கள் நெடுஞ்சாலையில் நிலையான வேகத்தில் ஓட்டும்போது உதவும் ஒரு  அம்சமாகும். இது உங்கள் காரை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நிலையாக அமைக்க அனுமதிக்கிறது. இவ்வாறு அமைத்தபின் உங்கள் கால்களை முடுக்கி மிதியிலிருந்து (accelerator pedal) எடுத்துவிடலாம். எனவே, இது நீண்ட பயணத்தில் கால் சோர்வையும் வலியையும் குறைக்கும்.

நிலையான வேகத்தில் ஊர்தி ஓடும்போது, எரிபொருளை சீராகப் பயன்படுத்துவதால்  எரிபொருளைச் சேமிக்கும். சீர்வேகக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, முடுக்கியை மிதித்து காரை இன்னும் வேகமாக ஓட்டலாம். ஆனால் மிதியிலிருந்து காலை எடுத்தவுடன் கார் வேகம் குறைந்து முன்பு அமைத்த வேகத்தை அடையும். நிறுத்தியை அழுத்தியவுடன் நாம் அமைத்த சீர்வேகக் கட்டுப்பாட்டைத் தானாகவே நீக்கிவிடும்.

பழைய சீர்வேகக் கட்டுப்பாடு இயங்குமுறை

நீங்கள் காலால் முடுக்கியை அழுத்தினால் என்ன வேலை நடக்கிறதோ அதை வெற்றிடத்தால் இயக்கப்படும் பணிப்பு இயக்ககம் (vacuum-driven servo drive) அல்லது வரிச்சுருள் (solenoid) செய்கிறது. அதாவது முடுக்கியின் கம்பியைத் தேவையான அளவு இழுக்கிறது. இதன் மூலம் ஊர்தி நீங்கள் அமைத்த வேகத்தில் சென்று கொண்டேயிருக்கும்.

முழு மின்னணு (fully electronic) சீர்வேகக் கட்டுப்பாடு

நவீன தொழில்நுட்பம் கொண்ட ஊர்திகளில் அதில் கட்டமைக்கப்பட்ட மின்னணு அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சீர்வேகக் கட்டுப்பாடு வேலை செய்கிறது. அதாவது நீங்கள் வைத்த வேகத்தில் வண்டி தொடர்ந்து செல்லுமாறு கணினி கட்டுப்படுத்துகிறது.

தகவமைச் சீர்வேகக் கட்டுப்பாடு (Adaptive Cruise Control – ACC)

Adaptive-cruise-control

தகவமைச் சீர்வேகக் கட்டுப்பாடு – வேகமும் தூரமும்

வழக்கமான சீர்வேகக் கட்டுப்பாட்டில் நீங்கள் அமைக்கும் ஒரு நிலையான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும். தகவமைச் சீர்வேகக் கட்டுப்பாடு இதை மேம்படுத்துவதாகும். உங்களுக்கு முன்னால் செல்லும் கார் வேகம் குறைந்தால், ACC தானாகவே வேகத்தைக் குறைக்கும். முன்னால் செல்லும் கார் உங்கள் பாதையை விட்டு வெளியேறியதும் அல்லது உங்கள் காரில் அமைத்த வேகத்தைத் தாண்டி வேகமாகச் சென்றதும், உங்கள் கார் நீங்கள் அமைத்த வேகத்திற்குத் திரும்ப வந்து விடும். உங்கள் வேகத்தை அமைப்பதைத் தவிர, உங்களுக்கு விருப்பமான பின்தொடரும் தூரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நன்றி

  1. Adaptive Cruise Control in Electric Vehicles with Field-Oriented Control

இத்தொடரில் அடுத்த கட்டுரை: இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்

காற்றுப்பைகள் (Airbags). டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்புகள் (Tire Pressure Monitoring Systems – TPMS). நிலைத்தன்மை கட்டுப்பாடு (Stability Control).

ashokramach@gmail.com

%d bloggers like this: