எளிய தமிழில் Computer Vision 5. வண்ண மாதிரிகள் (Color models)

வண்ண மாதிரி என்பது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான வண்ணங்களையும் உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாகும். சேர்க்கை வண்ண மாதிரிகள் (additive color models) மற்றும் கழித்தல் வண்ண மாதிரிகள் (subtractive color models) என்று இரண்டு வெவ்வேறு வண்ண மாதிரிகள் உள்ளன. சேர்க்கை மாதிரிகள் கணினித் திரைகளில் வண்ணங்களைக் குறிக்க ஒளியைப் பயன்படுத்துகின்றன. மாறாக கழித்தல் மாதிரிகள் படங்களை காகிதங்களில் அச்சிட மைகளைப் பயன்படுத்துகின்றன.

கணினியில் சிபநீ வண்ண மாதிரி (RGB color model)

சேர்க்கை மாதிரிகளில் முதன்மை வண்ணங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் (RGB). கணினித் திரையில் இந்த வண்ண மாதிரிதான் பயன்படுத்தப்படுகிறது.

சிபநீ வண்ண மாதிரி

சிபநீ வண்ண மாதிரி

கழித்தல் மாதிரிகளில் முதன்மை வண்ணங்கள் பசுநீலம், செவ்வூதா, மஞ்சள் மற்றும் கருமை (Cyan, Magenta, Yellow, Black – CMYK). அச்சடிக்க இந்த வண்ண மாதிரிதான் பயன்படுத்தப்படுகிறது.

பசுநீலம், செவ்வூதா, மஞ்சள் மற்றும் கருமை வண்ண மாதிரி

பசுநீலம், செவ்வூதா, மஞ்சள் மற்றும் கருமை வண்ண மாதிரி

படங்களில் நாம் காணும் மற்ற அனைத்து வண்ணங்களும் இம்மாதிரி முதன்மை வண்ணங்களை கலப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன.

வண்ண வகை, செறிவு நிலை, மதிப்பு (Hue, Saturation and Value – HSV)

எச்.எஸ்.எல் (HSL) மற்றும் எச்.எஸ்.வி (HSV) வண்ண மாதிரிகள்

எச்.எஸ்.எல் (HSL) மற்றும் எச்.எஸ்.வி (HSV) வண்ண மாதிரிகள்

பல நோக்கங்களுக்கு சிபநீ (RGB) நல்லது என்றாலும், மற்ற பல நடைமுறை பயன்பாடுகளுக்கு இது மிகவும் குறைபாடுடையதாகவே இருக்கின்றது. ஆகவே வண்ணத் தகவலிலிருந்து செறிவு நிலைத் தகவலைப் பிரிக்கப் பல்வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். 

ஓவியர்கள் நீண்ட காலமாக மிகவும் ஒளிர்வான வண்ணங்களை கருப்பு மற்றும் வெள்ளையுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துடன் கூடிய கலவைகளை மென்னிறங்கள் (tints) என்றும், கருப்பு நிறத்துடன் கூடிய கலவைகளை வண்ணச் சாயல்கள் (shades) என்றும், இரண்டையும் கொண்ட கலவைகளை தொனிகள் (tones) என்றும் சொல்கிறார்கள். இந்த அடிப்படையில் உருவாக்கியவை தான் எச்.எஸ்.எல் (HSL) மற்றும் எச்.எஸ்.வி (HSV) உருளை வடிவியல் (cylindrical) வண்ண மாதிரிகள்.

எச்.எஸ்.வி வண்ண மாதிரி வெவ்வேறு வண்ணப் பூச்சுகளைக் கலப்பதை மாதிரியாகக் கொண்டுள்ளது. செறிவு பரிமாணம் ஒளிர்வான வண்ணத்தின் பல்வேறு நிறங்களை ஒத்திருக்கிறது, மதிப்பு பரிமாணம் அந்த வண்ணப்பூச்சுகளில் கருப்பு அல்லது வெள்ளைப் பூச்சுகளைக் கலப்பதை ஒத்திருக்கிறது. 

இதற்கு எச்.எஸ்.பி (hue, saturation, brightness – HSB) என்று மற்றொரு பெயருமுண்டு. அதாவது வண்ண வகை, செறிவு நிலை, ஒளிர்வு.

வண்ண வகை, செறிவு நிலை, வெளிர் அளவு (Hue, Saturation and Lightness – HSL)

எச்.எஸ்.எல் வண்ண மாதிரி நம்முடைய இயற்கையான புலனுணர்வை ஒத்தது. ஒரு வட்டத்தைச் சுற்றி முழுமையாக நிறைவுற்ற வண்ணங்களை வெளிர் அளவு 1⁄2 மதிப்பில் வைக்கிறது. வெளிர் அளவு 0 என்பது முழு வெள்ளை மற்றும் வெளிர் அளவு 1 என்பது முழுக் கருப்பு. 

பின்புலத்தின் ஒளிபுகுதன்மை (Transparent background)

சில படங்களில் பின்புலம் முழுமையாக ஒளிபுகுதன்மை கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இவற்றை RGBA வண்ண மாதிரி படங்கள் என்று சொல்கிறோம். ஒரு RGBA படத்தில் 4 தடங்கள் உள்ளன (3 தடங்கள் மட்டுமே உள்ள RGB படத்தைப் போலல்லாமல்). நான்காவது தடம் ஆல்ஃபா (alpha) தடம். ஆல்ஃபா மதிப்பு 255 என்றால் அந்தப் படவலகை முழுமையாக ஒளிபுகாததாக்கும். ஆல்ஃபா மதிப்பு 0 என்றால் அதை முழுமையாக ஒளிபுகுதன்மையாக மாற்றும். இடையில் உள்ள மதிப்புகள் படவலகை ஓரளவு ஒளிபுகுதன்மையாக மாற்றும்.

நன்றி

  1. Color Models – University of California, San Diego
  2. HSL COLOR MODEL DECOMPOSITION IN BLENDER by Miki

இத்தொடரில் அடுத்த கட்டுரை: எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும் (processing)

வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels). செறிவும் (intensity) வண்ண ஆழமும் (colour depth). இடஞ்சார்ந்த வடிகட்டுதல் (spatial filtering or masking) செய்முறை.

ashokramach@gmail.com

%d bloggers like this: