நாம் இதுவரை பார்த்தவை படக்கருவி தனியாகவும் கணினி தனியாகவும் உள்ள இயந்திரப் பார்வை அமைப்புகள். படக்கருவியுடன் கணினியும் சேர்ந்தே வந்தால் இவற்றை திறன்மிகு படக்கருவிகள் என்று சொல்கிறோம். இவை பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றன:
- கம்பிவடம் படக்கருவியிலும் கணினியிலும் சரியாகப் பொருந்துகிறதா, சமிஞ்சை சரியாக வந்துசேர்கிறதா என்று பார்க்கும் பிரச்சினை நமக்குக் கிடையாது.
- அளவும், எடையும் குறைவு. இது எந்திரன் (Robot) போன்ற நகரும் பயன்பாடுகளில் மிகவும் வசதியானது.
- செலவும் குறைவு.
படக்கருவி, கணினி, சட்டகம் கவர்வி (frame grabber), உள்ளீடு/வெளியீடு நீட்டிப்புப் பலகை (I/O extension board) மற்றும் ஒளி அமைப்பு (lighting) ஆகியவற்றை திறன்மிகு படக்கருவிகள் ஒரே அடக்கமான பெட்டியில் ஒருங்கிணைக்கின்றன.
தொழில்துறைக்கான திறன்மிகு படக்கருவிகள் (Industrial smart cameras)
திறன் மிகு படக்கருவிகள் படத்தை எடுப்பது மட்டுமல்லாமல் படங்களிலிருந்து பயன்பாட்டுக்குத் தேவையான தகவல்களையும் பிரித்தெடுக்கும் திறன் கொண்டவை. இதன் விளைவாக நிகழ்வு அறிவித்தல் (event notification) மற்றும் அவ்விடத்திலேயே ஏற்பு அல்லது நிராகரிப்பு முடிவுகளை எடுத்தல் (localized accept/reject decision making) ஆகிய பல வேலைகளை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாகச் செய்ய இயலும்.
பொருத்துதல் (mounting) மற்றும் நேரமைத்தல் (aligning) எளிது
படக்கருவி மற்றும் விளக்குகள் ஒரே சாதனத்துக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றைத் தேவையான இடத்தில் பொருத்த ஒரேயொரு வளைவுதாங்கி (mounting bracket) மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் அச்சு சீரமைப்பு (axis alignment) செய்வதும் தேவையில்லை.
எந்திரன்களில் பொருத்தத் தோதாக கையடக்க அளவு (Compact unit for mounting on robots)
ஒளி அமைப்புத் தொகுதி, படவில்லை மற்றும் கட்டுப்படுத்தி (controller) ஆகியவை கச்சிதமான பெட்டியில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு சிறிய எந்திரனில் பொருத்துவதற்கு இது வசதியானது. இந்த ஒற்றை சாதனத் தீர்வில் படக் கருவிக்கும் பெருக்கிக்கும் (amplifier) இடையில் எந்த இணைப்புகளையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: கணினிப் பார்வையும் இயந்திரக் கற்றலும் (Machine learning)
இயந்திரக் கற்றல் (Machine learning). ஆழ்ந்த கற்றல் (Deep learning). ஆழ்ந்த கற்றல் சட்டகங்கள் (Deep Learning frameworks). ஆன்டிராய்டு சாதனத்தில் ஆழ்ந்த கற்றல் (Deep networks on Android device).