பொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)

திறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம்.

பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்) -> Current Drawing Preferences (இப்போதைய வரைபட விருப்பங்கள்) இல் சென்று, Units (அளவைகள்) என்ற தத்தலில் முக்கிய வரைபட அளவையில் (Main Drawing Unit) மிமீ (Millimeter) என்று தேர்ந்தெடுக்கவும். இதே உரையாடல் பெட்டியில் நீங்கள் அச்சிடப் போகும் தாளின்  அளவையும், நீங்கள் வரையப்போகும் படம் வரித்தோற்றமா (orthogonal) அல்லது சம அளவுத் தோற்றமா (isometric) மற்றும் பின்புலக் கட்டங்களின் இடைவெளியையும் தேர்வு செய்யலாம். மேலும் இது கருப்புப் பின்னணியில் வெள்ளைக் கோடுகளாகப் படம் வரையும். வெள்ளைப் பின்னணியில் கருப்புக் கோடுகளாகப் படம் வரைய வேண்டுமென்றால் Options (தேர்வுகள்) > Application Preferences (செயலி விருப்பத் தேர்வுகள்) > Background (பின்னணி) சென்று #FFFFFF என்று மாற்றவும்.

பல வடிவமைப்பாளர்கள் ஒழுங்கமைப்பு வசதிக்காக “கட்டத்துடன் நேர்ப்படுத்து (snap to grid)” என்று தேர்வு செய்வதால், கட்ட இடைவெளியை நிர்ணயிக்கும் முன் உங்கள் வரைபடத்திற்குத் தேவையான துல்லியத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் பிரிதிறன் கட்டம் (higher resolution grid) தேர்ந்தெடுத்தால், நீங்கள் படத்தைப் பெரிதாக்கியபின் (zoom in) தானாகவே மாற்றிக்கொள்ளும். கீழ்க் கருவிப்பட்டையிலிருந்து Snap on Grid (கட்டத்துடன் நேர்ப்படுத்து) என்று தேர்வு செய்யலாம்.

விளிம்புத்தட்டு (flange) வரைதல்

நாம் ஒரு விளிம்புத்தட்டு பாகத்தை வடிவமைத்து அதை இயந்திரப் பணிமனைக்கு அனுப்பவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். செயலியின் இடது பக்கத்தில் பல தேர்வுகள் கொண்ட கருவி பெட்டி ஒன்று உள்ளது. நம்முடைய விளிம்புத்தட்டு வட்டவடிவம். எனவே நாம் வட்டக் குறிப்படத்தை சொடுக்கி அதைத் தேர்வு செய்வோம். நம் வடிவமைப்பின் வகையைப் பொறுத்து, வெவ்வேறு வழிகளில் வட்டங்களை வரையலாம். ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கு, நாம் மையப்புள்ளி வழியையே (Center, Point) தேர்வு செய்வோம். உடன் சுட்டி குறுக்கு இழைகளாக (cross hairs) ஆகிவிடும். வரைபடத்தில் எங்கு வேண்டுமோ அங்கு சொடுக்கினால் அங்கு வட்டத்தின் மையப்புள்ளியை வைக்கும். பின்னர் மையத்திலிருந்து ஆரம் அளவுக்கு இடம் விட்டு நகர்த்தினால் வட்டத்தின் அளவைக்காட்டும். வேறொரு புள்ளியில் சொடுக்கினால் வட்டம் வரைந்து விடும். உள் விட்டத்தைக் காட்ட அதே மையத்தை வைத்துப் பொதுமைய வட்டம் இன்னொன்று வரையவேண்டும். இதற்கு கீழ்க்கண்ட முறையில் கட்டளை வரிப்பெட்டியில் வரைவது வேலையை எளிதாக்கும்.

வட்டம் வரைதல்

வட்டம் வரைதல்

மாற்றாக, நீங்கள் இடைமுகத்தின் கீழே உள்ள கட்டளை வரிப் பெட்டியில் புள்ளிகளின் அச்சுத்தூரங்களைக் கொடுத்தாலும் வட்டம் வரைந்து விடும். எடுத்துக்காட்டாக, நம் மையப்புள்ளி 50,60 இல் உள்ளது. எனவே கட்டளை வரிப் பெட்டியில் இதையே எழுதி உள்ளிட்டால் அங்கு மையப்புள்ளியை வைக்கும். இதேபோல அடுத்து 32 ஆரத்தையும் உள்ளிட்டால் வட்டம் வரைந்து விடும். இதேபோல உள்விட்டத்தைக்காட்ட அதே மையப்புள்ளி உள்ள 16 ஆரம் கொண்ட வட்டத்தையும் வரைவோம்.

துளைகளை வரைதல்

நம்முடைய விளிம்புத்தட்டை சம அளவில் சம தூரத்திலுள்ள எட்டு துளைகளில் மரையாணிகளை வைத்து நாம் பொருத்தப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆகவே நாம் உள்விட்டத்துக்கும் வெளிவிட்டத்துக்கும் நடுவில் சுற்றிலும் எட்டு துளைகளை வரைய வேண்டும். தனியாகக் கணக்கிட்டு அச்சுத் தூரங்களை எழுதிக் கொண்டு மேலே வரைந்தது போல துளைகளை வரையலாம். லிபர்கேட்-இன் திறன்களைப் பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக்குவது மற்றொரு வழி.

  1. முதலில் ஒரு துளையைத் தேவையான இடத்தில் வரைந்து கொள்ளவும்.
  2. பின் கருவி பெட்டியில் சென்று Modify (மாற்று) -> Rotate (சுழற்று) விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அடுத்து எதைச் சுழற்றுவதென்று கேட்கும். நீங்கள் வரைந்த துளையைத் தேர்ந்தெடுத்து உள்ளிடவும்.
  3. அடுத்து எந்தப் புள்ளியை மையமாக வைத்துச் சுழற்றுவதென்று தேர்ந்தெடுக்க வேண்டும். இது 50,60 இல் உள்ள விளிம்புத்தட்டின் மையம்தான். அதைச் சொடுக்கலாம் அல்லது கட்டளை வரியில் 50,60 உள்ளிடலாம்.
  4. அதன் பிறகு, எந்தப் பக்கம் சுழற்றுவது என்று கேட்கும். முதல் துளையின் மையத்தைத் திரும்பவும் சொடுக்கி இரண்டாவது துளையைத் தோராயமாக உள்ளிடலாம்.
  5. அதை வைத்த பின்னர், ஒரு புதிய சாளரம் திறக்கும். இது சுழற்சியைத் துல்லியமாக உள்ளிட வழிதரும். 

    துளைகளை சுழற்றுதல்

    துளைகளை சுழற்றுதல்

  6. இதைப் போலவே நான்கு துளைகள் வரை செய்யவும். பின்னர் “Mirror (கண்ணாடி)” கருவியைப் பயன்படுத்தி இந்த நான்கு துளைகளின் பிம்பம் உருவாக்கலாம்.
  7. மீண்டும் கருவி பெட்டிக்குச் சென்று Modify (மாற்று) -> Mirror (கண்ணாடி) என்பதைத் தேர்ந்தெடுத்து, நான்கு துளைகளையும் தேர்வு செய்து உள்ளிடவும். அடுத்து கண்ணாடியாக வைக்க ஒரு கோடு தேவை. கோட்டின் முதல் புள்ளி விளிம்புத்தட்டின் மையம்தான்.
  8. இரண்டாவது புள்ளியைத் துல்லியமாகத் தேர்வு செய்யக் கட்டம் நெருக்கமாக இல்லையென்றால், மீண்டும் கட்டளை வரி மூலம் சரியான புள்ளியை உள்ளிடுக. 
நான்கு துளைகளின் பிம்பம் உருவாக்குதல்

நான்கு துளைகளின் பிம்பம் உருவாக்குதல்

சுற்றிலும் எட்டு துளைகள் சம தூரத்தில் வந்தால் எல்லாம் சரியாக உள்ளது.

சம தூரத்தில் எட்டு துளைகள்

சம தூரத்தில் எட்டு துளைகள்

அளவு காட்டுதல்

விளிம்புத்தட்டை வரைந்து விட்டோம். இனி இயந்திரப் பணிமனையில் இதைச் செய்யப் போகும் தொழில் வினைஞருக்குத் தேவையான அளவுகள் கொடுக்க வேண்டும். Tools (கருவிகள்) -> Dimension (அளவு) -> Diametric (விட்டம்) வட்டத்தைத் தேர்வு செய்து கோணத்தையும் கொடுத்தால் அக்கோணத்தில் தானே விட்டம் அல்லது ஆரம் வரைந்து அளவும் கொடுத்து விடும்.

விளிம்புத்தட்டின் அளவு காட்டுதல்

விளிம்புத்தட்டின் அளவு காட்டுதல்

மற்றும் தடிப்பைக் காட்ட விளிம்புத்தட்டின் இரண்டு மூலைகளையும் தேர்வு செய்து வெளி விளிம்புக்கு மேல் அளவு காட்டலாம்.

தேவையான வடிவத்தில் சேமித்தல்

உங்கள் வரைபடத்தைத் தேவையான வடிவங்களில் சேமிக்க இரண்டு வழிகள் உண்டு. கோப்பு (File) > எனச் சேமி (Save As) தேர்வு செய்து dxf வடிவத்தில் சேமிக்கலாம். இந்த வடிவம் ஆட்டோகேட் (AutoCAD) கணினி உதவி வடிவமைப்பு செயலியில் திறக்கத் தோதானது. 2000, 2004, 2007, 2012 மற்றும் 2014 ஆட்டோகேட் வெளியீடுகளுக்குத் தோதாகவும் சேமிக்க முடியும். கோப்பு (File) > ஏற்றுமதி (Export) பயன்படுத்தி கணினித் திரையில் பார்க்கவும் அச்சிடுவதற்கும் தோதான jpg, png, tiff, bmp மற்றும் svg வடிவங்களிலும் சேமிக்கலாம்.

பொறியியல் வரைபடங்களின் அடிப்படைகளைக் கற்க கீழ்க்கண்ட கட்டுரைகளைப் பார்க்கவும்:

  1. பொறியியல் வரைபடம் (Engineering Drawing)—பாகம் 1
  2. பொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 2
  3. பொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 3

ashokramach@gmail.com

%d bloggers like this: