ஐககிய நாடுகள் சிறுவர் நிதியம் (Unicef) அமைத்துள்ள புதுமைக்கான நிதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சிறுவர்களுக்கு திறந்த மூல மென்பொருள் தயாரிக்கும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நிதியின் குறிக்கோள். பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க இந்த நிதி உதவுகிறது. தொகுப்புத் தொடர் பேரேடு (blockchain), தானியங்கி வானூர்தி (UAV), தோற்ற மெய்மை மற்றும் மிகை மெய்மை (virtual and augmented reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing), பொருட்களின் இணையம் (Internet of Things), இயந்திரக் கற்றல் (machine learning), துளிம கணிப்பீடு (quantum computing), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), நுண் உபகோள்கள் (nano-satellites), மரபு வழி பொறியியல் (genetic engineering), மனித இயக்கவியல் (human dynamics) ஆகிய முற்போக்கு தொழில்நுட்பங்களில் தொடங்கும் நிறுவனங்களே இந்த நிதியின் இலக்குகளாகும். இந்த நிதி சுமார் 70 கோடி ரூபாயை சேகரித்திருக்கிறது. இது முக்கியமாக மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது. இவை இளைஞர்களுக்கான தயாரிப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் நிகழ்நேர தகவல்.
துணிகர முதலீடு பயன்படுத்தும் வழிமுறைகளை இந்த நிதி கடைப்பிடிக்கிறது. பெரும்பான்மையானவர்களுக்குப் பலனளிக்கும் திறந்த மூல திட்டங்களுக்குத்தான் இந்த நிதி வழங்கப்படும். இந்த திறந்த மூலத் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம் இந்த தொடக்கநிலை நிறுவனத்துக்கு ஆற்றல் இருக்கிறது ஆனால் நிதி கிடைத்தால் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று தெரியவரும். நிறுவனத்தின் வேலைகளை துரிதப்படுத்த ரூபாய் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும்.