எளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்

ஓபன்சிவி (OpenCV) 

C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது.  சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும். 

இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே என்றில்லாமல் தொழில்துறையில் உற்பத்திக்கும் (production) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஓபன்சிவி பைதான் (OpenCV Python)

இது  ஓபன்சிவியை பைதான் நிரலிலிருந்து பயன்படுத்தத் தோதாக அமைக்கப்பட்ட நிரலகம். நம்-பை (Numpy), சை-பை (SciPy) மற்றும் மேட்பிளாட்லிப் (Matplotlib) போன்ற பைதான் நிரலகங்களுடன்  சேர்ந்து இயங்கும். கற்றுக் கொள்வதற்கும் நிரல் எழுதுவதற்கும் பைதான் மொழி எளிதானது. மேலும் பிழைத்திருத்தம் (debugging) செய்வதும் எளிது. ஓபன்சிவி பைதான் ஓடும்போது உள்ளுக்குள் இருமமாக்கிய (compiled) C/C++ செயல்முறைகளையே பயன்படுத்துகிறது. ஆகவே ஓடும் வேகம் மிகக் குறைவதில்லை.

வரைகலை செயலக இடைமுகம் (GPU interface)

வரைகலை செயலகம் (Graphics Processing Unit – GPU) என்பதை நீங்கள் காணொளி விளையாட்டிற்கென்றே தயாரித்த கணினிகளில் பார்த்திருக்கக்கூடும். இது கணினியில் விளையாட்டை வேகப்படுத்தக்கூடிய சில்லு (chip). நீங்கள் செய்யும் கணினிப் பார்வை வேலையைப் பொறுத்து எந்திரக் கற்றலுக்கு பல ஆயிரக்கணக்கான படங்களில் ஒவ்வொன்றிலும் பல மில்லியன் படவலகுகளை செயல்படுத்த வேண்டியிருக்கலாம். இம்மாதிரி வேலைகள் செய்யும் பொழுது வரைகலை செயலகம் இருந்தால் அதைப் பயன்படுத்தி வேலையைத் துரிதமாகச் செய்ய முடியும். ஓபன்சிவி வரைகலை செயலகத்தை பயன்படுத்த வல்லது.

ஆன்டிராய்டு திறன்பேசியில் ஓபன்சிவி (OpenCV on Android)

ஆன்டிராய்டு திறன்பேசியில் பொருளைக் கண்டறிந்து அடையாளமிடுதல்

ஆன்டிராய்டு திறன்பேசியில் பொருளைக் கண்டறிந்து அடையாளமிடுதல்

உங்கள் திறன்பேசியில் கணினிப் பார்வை வேலைகளைச் செய்ய வேண்டுமா? இதற்கு ஓபன்சிவி ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்கம் கருவி தொகுப்பு (OpenCv4Android Software Development Kit – SDK) உள்ளது. செய்முறைக்கு ஆவணங்களும் மாதிரி நிரல்களும் கிடைக்கின்றன.

நன்றி

  1. How detect object in opencv in android – Stackoverflow

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)

விளிம்பு கண்டறிதல் (Edge detection). வண்ணப் படங்களை சாம்பல் அளவீட்டுப் படமாக்குதல். மூலைகளைக் கண்டறிதல் (Finding corners). இரைச்சலை வடிகட்டுதல் (Noise filtering).

ashokramach@gmail.com

%d bloggers like this: