எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation)

தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம் படத்தில் கண்டவாறு வெட்டுளி ஆரத்தை ஈடு செய்ய வேண்டும். 

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல்

வழக்கமான துருவல் என்றால் G42 நிரல் பயன்படுத்த வேண்டும். ஏறு துருவல் என்றால் G41 நிரல் பயன்படுத்த வேண்டும். 

வழக்கமான துருவலும் (Conventional milling) ஏறு துருவலும் (Climb milling) பற்றிய அடிப்படைகளை என்னுடைய முந்தைய கட்டுரையில் காணலாம். வெட்டுளி ஆரத்தை ஈடு செய்வதை நீக்க G40 நிரல் பயன்படுத்த வேண்டும்.

வழக்கமான துருவலும் ஏறு துருவலும்

வழக்கமான துருவலும் ஏறு துருவலும்

உடைக்கும் ஒட்டு (Breaks) அல்லது பிடிப்பு ஒட்டு (Holding Tab)

பாகத்தைப் பிடித்து வேலை செய்ய உதவ சில மெல்லிய பகுதிகளை வெட்டாமல் விட்டுவிடுவதை உடைக்கும் ஒட்டு அல்லது பிடிப்பு ஒட்டு என்று சொல்கிறார்கள். வெட்டு வேலை முடிந்த பின் பாகத்தைக் கழட்டி எடுத்து, பின்னர் இவற்றை உடைத்து விட்டு ராவி (filing) சமன் செய்ய வேண்டும்.

இழுவை கத்திகள் (Drag Knives)

வழக்கமான கத்தியால் நீங்கள் வெட்டக்கூடிய எதையும் இழுவை கத்தி பயன்படுத்தி வெட்டலாம். ஆனால் சிஎன்சி உளி குடாய்தல் அல்லது துருவல் எந்திரத்தின் வேகம் மற்றும் துல்லியத்துடன். எடுத்துக்காட்டாக தோல் அல்லது செயற்கைத்தோல் விரிப்புகளிலிருந்து பெண்களின் கைப்பை போன்ற பொருட்களைத் தயாரிக்கத் தேவையான வடிவங்களில் துல்லியமாகவும் விரைவாகவும் வெட்ட முடியும்.

சால்வ்ஸ்பேஸ் CNC நிரல் இயற்றல்

எளிய 2D பாகங்களுக்கு G நிரலை சால்வ்ஸ்பேஸ் இயல்பாகவே உருவாக்க முடியும். உள்ளமைவுத் திரையில் “ஏற்றுமதி செய்த G நிரல் அளவுருக்களைப்” பாருங்கள். இதில் வெட்டுளி ஆரத்தை ஈடு செய்யவும் முடியும். 

டிஎக்ஸ்எஃப் இலிருந்து G நிரல் (Dxf2Gcode) இயற்றல்

இந்தத் திறந்த மூல மென்பொருள் DXF, PDF மற்றும் PS போன்ற கோப்பு வடிவங்களில் உள்ள வரைபடங்களில் தொடங்கி CNC இயந்திர உளி வெட்டுப்பாதைக்கான G  நிரல் இயற்றக் கூடியது. இது கடைசல் எந்திரத்திற்கும் (Lathe) நிரல் இயற்றக் கூடியது. இதற்கான பிற்செயலாக்கம் (postprocessing) செய்ய அமைப்புவடிவாக்கம் (configuration) மாதிரிக் கோப்பு இங்கே.

இதன் முக்கிய அம்சங்கள்:

  • இது லினக்ஸ் விண்டோஸ் மற்றும் மாக் கணினிகளிலும் ஓடும்.
  • இது EMC2 (LinuxCNC) சிஎன்சி எந்திரக் கட்டுப்படுத்தியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • செவ்வகச்சாவி (splines) வெட்டும்போது நேர்கோடுகளாகவும் வட்டப் பகுதிகளாகவும் (arcs) பிரித்துச் செய்வதால் துல்லியம் அதிகம்.
  • துருவல் அளவுருக்களை (parameter) அடுக்குகளாகப் (layers) பிரித்துக் கொடுக்க முடியும்.
  • மேற்கண்டவாறு உடைக்கும் ஒட்டு (Breaks) அல்லது பிடிப்பு ஒட்டு (Holding Tab) செய்ய முடியும்.
  • மேற்கண்டவாறு இழுவை கத்திக்கான G நிரல் இயற்ற முடியும்.
  • வெட்டுளியை விரைவாக நகர்த்த நாம் G0 நிரல் எழுதினால் அதற்கு மிகச் சுருக்கமான பாதையைக் கண்டுபிடிக்கும்.
  • G நிரல் இயற்றியபின் வெட்டுப் பாதைகளை 3D பாவனையாக்கல் செய்து சரி பார்க்க முடியும்.

டிஎக்ஸ்எஃப் இலிருந்து G நிரல் (Dxf2Gcode) செய்ய இயலாத வேலைகள்

இதில் 3D துருவலுக்கு நிரல் இயற்ற முடியாது. 

நன்றி தெரிவிப்புகள்

  1. BASIC PROGRAMMING OF CNC MILLING MACHINE – Mahesh Namdev
  2. Outside Profile, Cutter Radius Offset Compensation – Eldar Gerfanov

இத்தொடரில் அடுத்த கட்டுரை: 3D CNC நிரல் இயற்றல்

CNC கட்டுப்படுத்தி – EMC2 (LinuxCNC). பிற்செயலாக்கம் (postprocessor). ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடை.

ashokramach@gmail.com

%d bloggers like this: