விக்கிமூலம் மெய்ப்புபார்க்கும் தொடர் நிகழ்வு – 2020 – முதல் அனுபவம்

விக்கிமூலம் – இது ஒரு “பதிப்புரிமையில்லா” விக்கிநூலகத் திட்டமாகும். இதில் நா. வானமாமலை, பண்டிதர் க. அயோத்திதாசர், தொ. மு. சி. ரகுநாதன் உட்பட தமிழின் 91 ஆசிரியர்களின், 2217 நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மின்னூல் வடிவிலும், PDF, Doc வடிவிலும் கிடைக்கும். விக்கிபீடியா-வை போல, விக்கிமூலமும் பல்வேறு மொழிகளிலும் உள்ளது.

மே மாதம் 1ஆம் தேதி முதல், 10ஆம் தேதிவரை இந்திய மொழிகளுக்கான மெய்ப்புபார்க்கும்(Proofread) தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில் அசாமி, பெங்காலி, குஜராதி, தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளிலிருந்து, 193 பேர் பங்கெடுத்து அந்தந்த மொழிகளில் மெய்ப்புபணிகளில் ஈடுபட்டனர்.

 

10நாட்கள் நடைபெற்ற இந்த மெய்ப்புபார்க்கும் பணியின் இறுதியில் மொத்தம் 22,446 பக்கங்கள் மெய்ப்புபார்த்து முடிக்கப்பட்டது.

 

தமிழ் விக்கிமூலத்தில் 30பேர் பங்கெடுத்துக்கொண்டு 5496 பக்கங்களை மெய்ப்புபார்த்து முடித்தனர். இன்னும் 3,55,357 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளன.

இந்திய அளவில் முதல் பத்து இடம் பிடித்தோர் பட்டியல்.

 

இந்தத் தொடர்நிகழ்வில் நானும் பங்கெடுத்துகொண்டு, எஸ்.எம். கமால் அவர்களின் முஸ்லீம்களும் தமிழகமும், மார்க்சீம் கார்க்கியின் தாய் நாவலின் பல பக்கங்களையும் மெய்ப்பு பார்த்து உதவினேன். இதன் மூலம் இந்திய அளவில் 9ஆவது இடமும், தமிழக அளவில் 4ஆவது இடமும் பெற்றேன். இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 4பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் 10 நாட்களில், இரண்டு புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

நன்றி
விக்கிமூலத்தில் நான் தொடர்சியாகப் பங்களிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. டெலிகிராமில் “இந்திய மொழிகளுக்கான விக்கிமூலத்தில்” இந்தப் போட்டிகுறித்த சீனிவாசன் அவர்களின் பதிவுதான், இந்தப் போட்டியில் பங்கெடுக்க வைத்தது. போட்டி துவங்கிய நாளிலிருந்து முஸ்லீம்களும் தமிழகமும் புத்தகத்தை மெய்ப்புபார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். இதில் நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி தொடர்சியாக என்னைப் பங்களிக்க தூண்டியது தோழர். தகவல் உழவனும், தோழர். குரு லெனின்னும் ஆவர்.

%d bloggers like this: