இப்பொழுது நான்காம் தொழிற்புரட்சி வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதில் பொருட்களின் இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? மற்ற மூன்றும் யாவை என்று விவரமாகப் பார்ப்போம்.
முதல் தொழிற்புரட்சி – இயந்திரங்கள்
முதல் தொழிற்புரட்சி, சுமார் 1760 முதல் 1840 வரையிலான காலப்பகுதியில் புதிய உற்பத்தி செயல்முறைகளுக்கு மாற்றியது. கைமுறை வேலைகளுக்குப் பதிலாக ஓடுநீர் சக்தி மற்றும் நீராவி சக்தி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இரண்டாம் தொழிற்புரட்சி – தொழில்நுட்பம்
இரண்டாம் தொழிற்புரட்சியைத் தொழில்நுட்பப் புரட்சி (Technological Revolution) என்றும் சொல்லலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொழிற்சாலை மின்மயமாக்கல், பரிமாற்றக் கூடிய பாகங்கள் (interchangeable parts), ஹென்ரி போர்டு உருவாக்கிய தொகுப்புவரிசை (assembly line) உற்பத்திமுறை ஆகியவை இதில் முக்கியமானவை.
மூன்றாம் தொழிற்புரட்சி – கணினிகள்
மூன்றாம் தொழிற்புரட்சியை எண்ணிமப் புரட்சி (Digital Revolution) என்றும் சொல்லலாம். சுமார் 1950 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் தொழிற்துறையில் எண்ணிம மின்னணுவியல் மற்றும் குறிப்பாகக் கணினிகள் பெரு வளர்ச்சியடைந்தன.
நான்காம் தொழிற்புரட்சி (Industry 4.0)
இணையமும் இயற்பொருளும் ஒருங்கிணைந்து (cyber-physical systems) செயல்படுவதுதான் நான்காம் தொழிற்புரட்சி என்று சொல்லலாம்.
திறன்மிகு தொழிற்சாலை (Smart Factory)
இதில் எங்கு பார்த்தாலும் உணரிகள், யாவற்றையும் இணைக்கவல்ல தொழில்நுட்பங்கள், எந்திரனியல் (Robotics), மேம்பட்ட பகுப்பாய்வு போன்றவை பெரும் பங்கு வகிக்கின்றன. இவை யாவும் ஒருங்கிணைந்து வேலை செய்யும்போது நம் தொழிற்சாலை திறன்மிகு தொழிற்சாலை ஆகிறது.
உற்பத்தியின் வேறுபட்ட பகுதிகள் அனைத்தையும் இணைப்பதில் பொருட்களின் இணையத்துக்கு இன்றியமையாத பங்கு உண்டு. இது உற்பத்தி செயல்முறை முழுவதிலும் நடக்கும் அனைத்தையும் உணர, அளவிட, தொடர்பு கொள்ள மற்றும் கட்டுப்பாடு செய்ய உதவுகிறது.
நம்முடைய தொழிற்சாலைகளில் நாம் ஏற்கனவே நிரல்வழிக் கட்டுப்படுத்தி (PLC – Programmable Logic Controller), மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு (SCADA – Supervisory Control and Data Acquisition) போன்ற கணிப்பு சாதனங்களில் உணரிகள், இயக்கிகளை இணைத்து நிரல் எழுதித் தானியங்கியாகப் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். பொருட்களின் இணையத்தில் என்ன புதுமை என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்டவைதான் பொருட்களின் இணையத்தில் முக்கியமான புதிய வழிமுறைகள்:
- எங்கும் உணரிகள் (Ubiquitous sensing)
- மேம்பட்ட பகுப்பாய்வியல் (Advanced Analytics)
- தகவல் தொழில்நுட்பக் கருவிகளும் செயல்முறைகளும் (IT Tools and Methodologies)
உற்பத்தியில் பொருட்களின் இணையத்தால் பயன்கள்
ஹென்ரி போர்டு உருவாக்கிய தொகுப்புவரிசை (assembly line) உற்பத்திமுறையில் ஒரே ஒரு மாதிரி கார், கருப்பு வண்ணத்தில் மட்டுமே தயார் செய்தார். ஆனால் இக்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு காரிலும் பல மாதிரிகளும் (models), ஒவ்வொரு மாதிரியிலும் பல வண்ணங்களும், அவற்றில் பல மாற்றங்களும் (variants) தேவைப்படுகின்றன. பேரளவு உற்பத்தியும் (mass production) செய்யவேண்டும், அதில் விருப்பமைவும் (customization) செய்ய வழியிருக்கவேண்டும் என்றால் பொருட்களின் இணையம் இன்றியமையாதது. இது தவிர உற்பத்தியில் பொருட்களின் இணையத்தால் கீழ்க்கண்ட பயன்களையும் அடைய முடியும்:
- செலவைக் குறைத்தல்.
- தரத்தை மேம்படுத்தல்.
- தயாரிக்க எடுக்கும் நேரத்தைக் குறைத்தல்.
- தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு.
இக்கட்டுரைத் தொடரில் நாம் தொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், பொருட்களின் இணையம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: உணரிகளும் (Sensors) இயக்கிகளும் (Actuators)
ஆற்றல்மாற்றிகள் (transducers). பலவிதமான உணரிகள். கூட்டு உணரிகள் (Combination sensors). உணர்தல் (sensing) மற்றும் தொடர்பு கொள்ளுதல் (communicating). இயக்கிகள் (Actuators).