சொத்துக்களின் பயன்படுத்துதல் (utilization) விழுக்காடு
பல நேரங்களில் நிறுவனத்தின் பணியாளர்கள் மரமேடைத்தூக்கி வண்டி (pallet truck) மற்ற உற்பத்தி இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவன உரிமையாளரின் முன்வைப்பார்கள். கைவசம் இருக்கும் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க இந்த இயந்திரம் அவசியம் தேவைப்படுகின்றது என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தெரிந்து கொள்ளாமல் எப்படி மேலும் வாங்குவது?
கைக்கருவிகளை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது?
நாம் சரக்கு மேலாண்மையில் பார்த்ததுபோல பல குறு, சிறு நிறுவனங்கள் இதற்கும் காகிதப்பதிவேடு அல்லது விரிதாள் பயன்படுத்துகிறார்கள். இம்முறையில் வேலை மெனக்கெடு அதிகம் மட்டுமல்லாமல் தரவுகள் சரியாக இல்லாததால் பிரச்சினைகள் பல வரக்கூடும். கைக்கருவிகள் போன்றவற்றை யாருக்குக் கொடுத்தோம், எங்கே இருக்கிறது என்று அவசர வேலைக்கு உடன் தெரியவராது. ஆகவே வேலைக்குத் தடங்கல் ஏற்படும்.
ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் உள்ளீடு செய்ய வேண்டும்
சரக்கு மேலாண்மை போலவே இதற்கும் மென்பொருள் பயன்படுத்த வேண்டும். பட்டை அல்லது கட்டக் குறியீடு (bar or QR code) அல்லது வானலை அடையாளம் (RFID) பயன்படுத்தி உள்ளீடு செய்யும் வேலையை எளிதாக்க வேண்டும். ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் கவைத்தூக்கி வண்டி (forklift truck), கொக்கித்தூக்கி வண்டி (mobile crane) போன்றவற்றை ப்ளூடூத் அடையாளக் குறி (Bluetooth beacon) அல்லது GPS உணரிகள் பயன்படுத்தித் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
திறந்த மூல சொத்து கண்காணிக்கும் மென்பொருட்கள்
நல்ல சொத்து கண்காணிக்கும் மென்பொருட்கள் சொத்துக்களின் மாறிய நிலைப்பாடுகள் (changed asset statuses) மற்றும் கெடு முடிந்த விவரங்கள் (expiring deadlines) பற்றி உங்களுக்கு அறிவிப்புகள் தர முடியும். மேலும் ஒரு சொத்துக்கு உங்கள் நிறுவனத்தில் யார் பொறுப்பு என்றும் நீங்கள் குறிப்பிடலாம்.
ஓடூ (Odoo), இஆர்பி நெக்ஸ்ட் (ERPNext) போன்ற எல்லாத் திறந்த மூல ERP மென்பொருட்களிலும் சொத்து மேலாண்மைக்கு ஒரு நிரல்கூறு (module) அனேகமாக உண்டு. ஓபன்மெயின்ட் (OpenMaint) போன்ற மற்ற மென்பொருட்கள் சொத்து பராமரிப்பு மேலாண்மை (maintenance management) மற்றும் தேய்மானம் (depreciation) கணக்கிடல் ஆகியவற்றுடன் சேர்ந்தே வருகின்றன. ஸ்னைப்-ஐடி (Snipe-IT) பெரும்பாலான பட்டை மற்றும் கட்டக் குறியீடு வருடிகளுடன் வேலை செய்கிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பழுதடைவதை முன்னறிந்து பராமரிப்பு (Predictive maintenance)
பழுதடைந்தவுடன் பராமரிப்பு (Breakdown Maintenance). பழுதடைவதைத் தவிர்க்கப் பராமரிப்பு (Preventive Maintenance). பழுதடையக்கூடுமென முன்னறிந்து அதைத் தடுக்கப் பராமரிப்பு (Predictive Maintenance).