நாம் சோதனைகள் செய்து பார்க்கவும் பயிற்சிகள் செய்யவும் குறைந்த விலையில் சில இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards) சந்தையில் கிடைக்கின்றன. இந்த வன்பொருட்களின் வடிவமைப்பும் (hardware design) திறந்த மூலமாகக் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் தயாரித்து விற்கிறார்கள். பலர் இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தாங்கள் எழுதிய நிரல் தொகுப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றில் சிலவற்றைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்.
ஓபன்எம்வி கேம் (OpenMV Cam)
நகர்வு மங்கல் (motion blur) இல்லாத உயர் தரமான சாம்பல் அளவீட்டுப்படங்களை (greyscale) இது எடுக்கிறது. பைத்தானில் நிரல் எழுதலாம். நல்ல ஒருங்கிணைந்த நிரலாக்கச் சூழல் (IDE) உண்டு. குறிப்பிட்ட வேலைகளுக்கு அப்படியே கோர்த்துக் கொள்ளும் பாகங்களும் (shields) கிடைக்கின்றன. வெளிப்புற நிகழ்வுகளைப் பொறுத்து படங்களையும் வீடியோக்களையும் எடுக்க சமிக்ஞை அனுப்பலாம். தொழில்முறை இயந்திரப் பார்வை பயன்பாடுகளுக்கு நீங்கள் முழு சார்த்தி (global shutter) படக்கருவித் தொகுதியை வாங்கலாம். கூடுதல் சிறப்பு படக்கருவி வில்லைகள் பயன்படுத்த விரும்பினால், அவற்றை எளிதாக வாங்கி இணைக்கலாம்.
ஹஸ்கி லென்ஸ் (HuskyLens)
ஹஸ்கி லென்ஸ் எளிதில் பயன்படுத்தக்கூடிய இயந்திரப் பார்வை உணரி ஆகும். இது மனித முகம் அடையாளம் காணல் (face recognition), பொருள் கண்காணிப்பு, பொருள் சுவடுதொடரல் (object tracking), கோட்டின் மீது செலுத்தல், வண்ண அடையாளம் காணல் (color recognition) மற்றும் QR குறியீடு அடையாளம் காணல் போன்ற பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அர்டுயினோ (Arduino) நுண்செயலி, ராஸ்பை (Raspberry Pi) கையடக்கத் கணினி போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.
ஹஸ்கிலென்ஸ் பயன்படுத்த மிகவும் எளிதானது. செயல்பாட்டு பொத்தானை அழுத்துவதன் மூலம் வினைச்சரங்களை (algorithms) மாற்றலாம். கற்றல் பொத்தானை அழுத்துவதன் மூலம், ஹஸ்கி லென்ஸ் புதிய பொருட்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும். அதன் பிறகு, ஹஸ்கி லென்ஸ் அவற்றை அடையாளம் காண முடிகிறது.
ஜெவாய்ஸ் (JeVois)
பொருட்களின் இணையம் (IoT), கணினிப் பார்வை, திறன்மிகு வீடு (smart home) மற்றும் எந்திரனியல் (robotics) ஆகியவற்றிற்கான ஆழ்ந்த கற்றல் திறன்மிகு படக்கருவி. அர்டுயினோ (Arduino) போன்ற நுண்செயலிகளுடன் இணைக்கலாம்.
பிக்ஸி 2 (Pixy 2)
அர்டுயினோ (Arduino) நுண்செயலி மற்றும் ராஸ்பை (Raspberry Pi) கையடக்கத் கணினியுடன் நேரடியாக இணைக்கலாம். ஆனால் இதில் நாம் நிரல் எழுத முடியாது. அவர்கள் கொடுத்துள்ள செயலிகளைப் பயன்படுத்தலாம்.
அர்டு கேம் (ArduCAM)
அர்டுயினோ (Arduino), ராஸ்பை (Raspberry pi) போன்ற கையடக்க நுண்செயலிகள் மற்றும் கணினிகளுடன் இணைந்து இயங்கவல்லது. ஆனால் இதில் பைதான் நிரல் வேலை செய்யாது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: காணொளியை செயல்படுத்தல் (Video processing)
சட்டகம் கவர்வி (Frame grabber). நூறு சட்டகங்களுக்கு ஒன்றைப் பிடித்தல். நிகழ்நேரத்தில் பொருட்களை அடையாளம் கண்டுபிடித்தல் (Real-time object detection).