கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம்.
ஒளியியல் வழி ஊடுருவும் காட்சி (Optical see through)
படத்தில் நடுவில் கண்ணாடி வழியாக வெளியுலகம் தெரியும். கண்ணாடியின்மேல் நாம் மெய்நிகர் படம் விழுமாறு செய்தால் இது மிகை மெய்ம்மை (AR) மற்றும் கலந்த மெய்ம்மை (MR) இரண்டுக்குமே பயன்படும்.
காணொளி வழி ஊடுருவும் காட்சி (Video see through)
படத்தில் வலதுபுறம் காணொளி வழியாக வெளியுலகம் தெரியும். காணொளியில் நாம் மெய்நிகர் படம் சேர்த்துத் திறையில் காண்பித்தால் இது மிகை மெய்ம்மை (AR) மற்றும் கலந்த மெய்ம்மை (MR) இரண்டுக்குமே பயன்படும்.
தனித்தியங்கும் (standalone) MR தலையணிகள்
தலையணியிலேயே கணினியையும் வைத்துவிட்டால் தனித்தியங்க இயலும். கம்பிகள் எதுவும் இல்லாததால் தளையற்ற முறையில் நீங்கள் தலையைத் திருப்பவும், நகரவும் முடியும். கணினியும் சேர்ப்பதால் தலையணியின் விலை மற்றும் எடை அதிகமாக இருக்கும். ஆனால் கூடியவரை எடை குறைவான கணினிதான் என்பதால் திறனும் (power) குறைவாக இருக்கலாம். மைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் (Microsoft HoloLens) இந்த வகை.
திறன்பேசி MR தலையணிகள்
ஆக்கிபிட்டல் பிரிட்ஜ் (Occipital Bridge) இந்த வகை. இதிலேயே விலை குறைவாக திறன்பேசியைப் பொருத்தக்கூடிய அட்டைப்பெட்டி போன்ற தலையணிகளும் உள்ளன. இவற்றைப்பற்றி பின்னர் வரும் கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம்.
பார்வைப் புலம் (Field of View)
தலையைத் திருப்பாமல் எந்த நேரத்திலும் நாம் காணக்கூடிய சுற்றுச்சூழலின் அளவே பார்வைப் புலம். மேஜிக் லீப் ஒன்று (Magic Leap One) 40 பாகை முதல் ஆக்கிபிட்டல் பிரிட்ஜ் (Occipital Bridge) 120 பாகை வரை தலையணிகள் உள்ளன. நாம் செய்யும் வேலையைப் பொருத்து பார்வைப் புலம் எவ்வளவு தேவை என்று நாம் கணித்துக் கொள்ளவேண்டும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவி
ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி. ஹோலோகிட் மென்பொருள் உருவாக்கும் கருவித் தொகுதி (HoloKit SDK). அரைசான் AR/MR தலையணி. அரைசான் யூனிடி மென்பொருள் உருவாக்கும் கருவித் தொகுதி (Aryzon Unity SDK). யூனிடி நிகழ்பட ஆட்டப் பொறி (Unity game engine).