எளிய தமிழில் Car Electronics 19. ஓடும்போது பழுது கண்டறிதல்

வண்டியில் ஏதேனும் செயல்பிழை ஏற்பட்டால் பணிமனைக்குக் கொண்டு சென்று பழுது பார்க்கலாம்தானே? ஓடும்போதே பழுது கண்டறிதல் அவசியமா, என்ன – என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. இதற்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, உங்கள் வண்டியிலிருந்து வெளிவரும் உமிழ்வு (emission) தரநிலைக்குள்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்கள் குறியாக இருக்கின்றன. ஆகவே 1988 இல் கலிஃபோர்னியாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா முழுவதும், அதன் பின்னர் ஐரோப்பா, இந்தியா உட்படப் பல உலக நாடுகளும் ஓடும்போது உமிழ்வு கண்காணிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன. இது தவிர பொறி (Engine) அல்லது சுழற்செலுத்தியில் (Transmission) பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக உங்களுக்குத் தெரியவந்தால்  பிரச்சினை பெரியதாகும் முன்பு தவிர்க்கலாம் அல்லவா? ஆகவே ஓடும்போது பிழை ஏற்பட்டால் கட்டுப்பாட்டகத்தில் (dashboard) ஒரு விளக்கு எரியத் தொடங்கும். இதை செயலிழப்புக் காட்டும் விளக்கு (Malfunction Indicator Light – MIL) அல்லது பொறியைச் சரி பார்க்கவும் (Check Engine) விளக்கு என்று கூறுகிறார்கள்.

How OBD link devices work

OBD இணைப்பு சாதனங்கள் செயல்படும் விதம்

சரி, இந்த விளக்கு எரியத் தொடங்குகிறது. இது மிகவும் பொதுவான சமிக்ஞை. குறிப்பாக என்ன பிரச்சினை, எதைச் சரி செய்வது என்று எப்படித் தீர்மானிப்பது? 1990 முதல் அமெரிக்காவில் வாகனப் பொறியாளர்கள் சமூகம் (Society of Automotive Engineers – SAE) மற்றும் ஐரோப்பா மற்றைய உலக நாடுகளில் பன்னாட்டுத் தரநிலை அமைப்பு (International Standards Organisation – ISO) வாகனங்களுக்கான ஓடும்போது பழுது கண்டறிதல் (On-Board Diagnostics – OBD) தரநிலையை வெளியிட்டுள்ளார்கள். 

பழுது கண்டறியும் சாதனங்கள்

இந்தத் தரநிலைகளின்படி ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கண்டறியும் தொடர்பு இணைப்பி (Diagnostic Link Connector – DLC) இருக்க வேண்டும். இந்த இணைப்பி பெரும்பாலும் கட்டுப்பாட்டகத்தின் (dashboard) கீழ் இருக்கும். இதில் செருகக்கூடிய ELM327 OBD 2 தகவி (adapter) ஒன்று தேவை. இதில் விலை குறைந்தது வைஃபை மூலமும் புளூடூத் மூலமும் தரவுகளை வெளியே அனுப்பக்கூடியது. கொஞ்சம் அதிக விலையில் USB மூலம் தரவுகளைக் கணினிக்கு அனுப்பக்கூடிய சாதனமும் கிடைக்கிறது. இந்தச் சாதனத் தயாரிப்பாளர்களே திறன்பேசியிலும் கணினியிலும் ஓடும் சில வணிகச் செயலிகளைப் பரிந்துரை செய்கிறார்கள். இவற்றில் சில எளிய வேலைகளைக் கட்டணமில்லாச் செயலி மூலம் செய்யலாம். வெப்ப ஆற்றி திரவத்தின் வெப்பநிலை (Coolant Temperature), உட்கொள்ளும் இணைகுழல் அழுத்தம் (Intake Manifold Pressure), உட்கொள்ளும் காற்றின் வெப்பநிலை (Intake Air Temperature), காற்றுப் பாய்வு வீதம் (Air Flow Rate) போன்ற பல தரவுகளை மானிகளில் காட்டும். சில மேம்பட்ட வேலைகளுக்கு கட்டணம் கட்டி செயலியின் புரோ (Pro) பதிப்பு வாங்கவேண்டியிருக்கும்.

பழுதுக்குறியீடும் பழுதுப்பதிவும் 

பழுதுக்குறியீட்டின் (Diagnostic Trouble Codes – DTC) முதல் எழுத்து காரின் பகுதியைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, இது P என்றால் திறன் பொறித்தொடர்  (Powertrain). இரண்டாவது இலக்கம் 0 என்றால் தரப்படுத்தப்பட்ட குறியீடு அல்லது 1 என்றால் உற்பத்தி நிறுவனத்தின் தனிப்பட்ட குறியீடு. மூன்றாவது இலக்கம் எந்த அமைப்பில் பிரச்சினை என்று காட்டுகிறது. இது 3 என்றால் எரியூட்ட அமைப்பில் (Ignition system) பிரச்சினை. கடைசி இரண்டு இலக்கங்கள் (00-99) பிழை எண்ணைக் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, P0118 என்றால் பொறியின் வெப்ப ஆற்றி (Engine Coolant) சரியாக வேலை செய்யவில்லை. பழுது ஏற்பட்டால் பழுதுக்குறியீடு உடன் பதிவு செய்யப்படும். பழுது கண்டறியும் சாதனங்கள் மூலம் பழுதுக்குறியீட்டை மீட்டெடுத்துப் பார்த்து சரிசெய்யலாம்.

பழுது கண்டறியத் திறந்தமூல மென்பொருட்கள்

pyOBD என்பது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் ஓடக்கூடியத் திறந்தமூல மென்பொருள். மேற்கூறியவாறு USB மூலம் தரவுகளை அனுப்பக்கூடிய சாதனத்தைக் காரில் செருகி கணினியுடன் இணைக்கவேண்டும். அடுத்து இந்தச் செயலியைப் பயன்படுத்திக் காருடன் இணைக்கலாம். அதன் பின்னர் சோதனைகளைச் செய்து அவற்றின் நிகழ்நிலைகளைக் (status) கண்காணிக்கலாம். உணரிகள் எடுக்கும் அளவீடுகளை உடன் பார்க்க இயலும். பழுதுகள் ஏற்பட்டால் அவற்றின் குறியீடுகளைப் பார்க்க இயலும். பழுதுகளை சரிசெய்துவிட்டால் நினைவகத்திலிருந்து பழுதுக்குறியீடுகளை நீக்கவும் இயலும்.

AndrOBD என்பது ஆன்டிராய்டு திறன்பேசியில் ஓடக்கூடியத் திறந்தமூலச் செயலி. இது கூகிள் நிறுவனம் வழங்கும் Play Store இல் கிடைக்காது. முதலில் உங்கள் ஆன்டிராய்டு திறன்பேசியில் திறந்தமூலச் செயலிகள் கொண்ட F-Droid Store பதிவிறக்கி நிறுவவேண்டும். அதிலிருந்து AndrOBD திறந்தமூல செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவலாம். மேற்கூறியவாறு புளூடூத் மூலம் தரவுகளை அனுப்பக்கூடிய சாதனத்தைக் காரில் செருகி செயலியுடன் இணைக்கலாம். இதுவும் pyOBD போன்ற சில வேலைகளைச் செய்யும்.

 நன்றி

  1. What is OBD: On-board Diagnostics Devices Working Types & Application

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

முழுமையான பழுது கண்டறிதல். UDS எவ்வாறு OBD இலிருந்து மாறுபட்டது. ECU மென்பொருள் புதுப்பிப்பு. UDS தகவல்களின் உள்ளடக்கம் தனியுரிமமாக உள்ளது.

ashokramach@gmail.com

%d bloggers like this: