எளிய தமிழில் Robotics 15. எந்திரனுக்கு நிரல் எழுதும் வகைகள்

வரைகலை நிரல் இயற்றிகள்

நிரல் என்றால் என்ன? சான்றாக, இன்ன சமிக்ஞை கிடைத்தால் இன்ன வேலையைச் செய் என்று நாம் நிரலாக்க மொழியில் எழுதலாம். இது சிறுவர்களுக்குக் கடினமானது. இதற்குப் பதிலாக சமிஞ்சைக்கு ஒரு படமும் வேலைக்கு மற்றொரு படத்தையும் இழுத்துப் போட்டு அவற்றைத் தேவையானபடி இணைக்க இயலுமென்றால் சிறுவர்களால் செய்ய முடியும். இம்மாதிரி இழுத்துப்போடுவதால் இம்முறையை drag-and-drop நிரலாக்கம் என்றும் சொல்லலாம். திரைக்குப் பின்னால் இந்தப் படங்கள் மற்றும் இணைப்புகளிலிருந்து தேவையான உரைகளைத் தானே இயற்றிக் கொள்ளும். இது ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குக் கற்றுக்கொள்ள எளிதானது. எம்ஐடி (MIT) உருவாக்கிய ஸ்கிராட்ச் (Scratch) என்ற மொழி தான் பரவலாகத் தெரிந்தது. இதைப்போல லெகோ (Lego) நிறுவனம் பூஸ்ட் (Boost) மற்றும் மைண்ட்ஸ்டார்ம்ஸ் (Mindstorms) எந்திரன்களுக்கு இதேபோன்ற வரைகலை நிரல் மொழியை வெளியிட்டுள்ளார்கள். தைமியா 2 போன்ற மற்ற சில எந்திரன்களுக்கும் இம்மாதிரி வரைகலை நிரலாக்க மொழி உண்டு.

வரைகலை நிரல் இயற்றி

வரைகலை நிரல் இயற்றி

எளிதாக்கப்பட்ட உரை நிரலாக்கம்

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் உரை நிரலாக்கம் செய்யமுடியும். ஆனால் ஜாவா, பைதான் போன்ற முழுமையான நிரலாக்க மொழிகளில் பல சிக்கலான அம்சங்கள் இருப்பதால் இவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இம்மாதிரி சிக்கலான அம்சங்களை விலக்கி எளிதாக்கப்பட்ட நிரல் மொழிகளை வெளியிட்டுள்ளார்கள். சான்றாக, தைமியா 2 எந்திரனுக்கு அசேபா (Aseba) என்ற எளிதாக்கப்பட்ட உரை நிரல் மொழியை வெளியிட்டுள்ளார்கள்.

இடைநிலை நிரல் இயற்றிகள்

கூகுள் நிறுவனம் பிளாக்லி (Blockly) என்ற நிரல் மொழியை உருவாக்கியுள்ளனர். இதில் படங்களுக்குப் பதிலாக உரைச் சொற்கள் கொண்ட கட்டைகள் உள்ளன. சிறுவர்கள் இந்தக் கட்டைகளை இழுத்துப் போட்டுத் (drag-and-drop) தேவையானபடி இணைக்கலாம். இது வரைகலை நிரல் இயற்றிகளுக்கும் உரை நிரல் எழுதுவதற்கும் இடைநிலையாகப் பயன்படுகிறது. இது 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குக் கற்றுக்கொள்ள எளிதானது.

இடைநிலை நிரல் இயற்றி

இடைநிலை நிரல் இயற்றி

முழுமையான நிரலாக்க மொழிகள்

உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடியாக முழுமையான நிரலாக்க மொழிகளைக் கற்றுக் கொள்வதே உசிதம். மேற்கண்ட நிரலாக்க வகைகளில் ஓரளவு பயிற்சி இருந்தால் இது மிகவும் எளிதாக இருக்கும். இல்லாவிடினும் மிகவும் கடினமல்ல. முழுமையான நிரலாக்க மொழிகளில் கீழ்கண்ட பயன்கள் உள்ளன:

  • இவற்றில் சக்தி வாய்ந்த நிரல் தொகுப்புகள் உள்ளன. இவற்றை வைத்து உங்கள் எந்திரனை பிரமிக்க வைக்கும் அரிய வேலைகளைச் செய்ய வைக்கலாம்.
  • தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
  • நீங்கள் விளையாட்டாக கற்றுக்கொண்டால் படிப்பை முடித்துவிட்டு எம்மாதிரி வேலைக்குச் சென்றாலும் இந்தப் பயிற்சி உறுதுணையாக இருக்கும்.

மனித உருவ எந்திரன் (humanoid) நெடுந்தொலை நடத்தல் (marathon)

எந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. இது ஒரு ரோபோடிஸ் OP2 என்ற மனித உருவ எந்திரனை அதன் மின்கலம் ஆற்றல் இழக்கும் முன்னர் கூடிய அளவு நெடுந்தொலை நடக்க வைக்கும் சவால்.

மனித உருவ எந்திரன் நெடுந்தொலை நடத்தல்

மனித உருவ எந்திரன் நெடுந்தொலை நடத்தல்

இதில் முக்கிய திறனளவு எந்திரன் பயணம் செய்த தூரம்தான். இது தெருவுக்கு இணையாக இருக்கும் x- அச்சில் எந்திரனின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைக்கு இடையேயான தூரம். எந்திரன் கீழே விழுந்து விட்டால் அல்லது தவழ்ந்து செல்ல முயன்றால் அளவீடு உடனடியாக முடிந்துவிடும்.

ROBOTIS OP2 என்ற பெயர் கொண்ட இந்த எந்திரன் நடக்கும் பாணி மேலாளர் (RobotisOp2GaitManager) என்ற பைதான் நிரலைப் பயன்படுத்துகிறது.

இந்த நடை மேலாளரின் அளவுருக்களை நீங்கள் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கலாம். இதன் மூலம் சிறந்த செயல்திறனை உருவாக்குவதற்கான ஒரு அமைப்பு கண்டுபிடிப்பது சாத்தியமே.

நன்றி தெரிவிப்புகள்

  1. Scratch – block-based visual programming language by MIT Media Labs
  2. Blockly –  block-based visual programming language by Google
  3. RobotBenchmark – Humanoid Marathon

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பார்த்துப் பின்தொடர்தல் (Visual Tracking)

ஒரு குழப்பமான சூழலில் நகரும் பொருளைத் தொடர்ந்து கண்காணித்தல். வெற்றி விகிதத்தை மேம்படுத்துவது எப்படி?

ashokramach@gmail.com

%d bloggers like this: