எளிய தமிழில் Robotics 16. பார்வை மூலம் பின்தொடர்தல் (Visual Tracking)

இந்த இணைப்பில் ஒருவர் ஆன்ட்ராய்டு திறன்பேசியின் புகைப்படக் கருவியை வைத்து ஒரு பொருளை அடையாளம் கண்டு அதைப் பின்தொடர்தல் திட்டத்தை செயல்படுத்தி விவரங்கள் கொடுத்துள்ளார். இதை இயக்கும் நுண்கட்டுப்படுத்தி அர்டுயினோ. அர்டுயினோ மற்றும் திறன் பேசியைத் தவிர மற்ற பாகங்கள் வாங்க செலவு சுமார் ரூபாய் 5000 என்கின்றார். இந்த செயலி ப்ளுடூத் ஊடலை வழியாகக் காணொளியைக் கணினிக்கு அனுப்புகிறது. இந்தக் காணொளியிலிருந்து நமக்குத் தேவையான உருவத்தை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்கு ஓப்பன் சிவி (OpenCV) என்ற திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்துகிறோம்.

ஆன்ட்ராய்டு திறன்பேசியின் நிழல்படக் கருவி மூலம் பார்த்துப் பின்தொடர்தல்

ஆன்ட்ராய்டு திறன்பேசியின் நிழல்படக் கருவி மூலம் பார்த்துப் பின்தொடர்தல்

“கண்காணிக்கும் பொருள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நிழல்படக்கருவி  திரும்பிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய முதல் குறிக்கோள். ஒரு நாய் பந்தைத் துரத்தி ஓடுவது போல கண்காணிக்கும் பொருள் போகுமிடமெல்லாம் என் எந்திரன் பின்னால் ஓட வேண்டும் என்பது என்னுடைய இரண்டாம் குறிக்கோள். எந்திரனின் தலையிலுள்ள நிழல்படக்கருவி திரும்பக்கூடிய அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இதனால் இடமும், வலமும், மேலும், கீழும் தலையைத் திருப்பிப் பார்க்க முடியும்.”

ஒரு குழப்பமான சூழலில் நகரும் பொருளைத் தொடர்ந்து கண்காணித்தல்

எந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. ஒரு அய்போ (Aibo) எந்திரனை பொருட்கள் சிதறிக் கிடக்கும் குழப்பமான சூழலில் நகரும் ஒரு ரப்பர் வாத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

நகரும் ரப்பர் வாத்தைக் கண்காணித்தல்

நகரும் ரப்பர் வாத்தைக் கண்காணித்தல்

நிரலாக்க மொழி பைதான். நிழற்படக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் எந்திரன் மாதிரியானது நாய் உருவம் கொண்ட சோனி ஐபோ ஈஆர்எஸ் -7 (Sony Aibo ERS-7) ஆகும். இதனால் தன் தலையைத் திருப்பி எத்திசையிலும் பார்க்க முடியும். மற்றும் நாம் கண்காணிக்க வேண்டிய இலக்குப் பொருள் ஒரு மஞ்சள் வண்ண ரப்பர் வாத்து ஆகும்.

எந்திரனில் வலது சுட்டியை சொடுக்கி காட்சி சாளரத்தைத் திறக்க முடியும். எந்திரன் பார்க்கும் திசையில் நிழற்படக் கருவிக்குத் தெரியும் காட்சி இந்த சாளரத்தில் தெரியும்.

இந்தத் திறன் அளவிடல் 2 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் நீடிக்கும். ரப்பர் வாத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் விகிதத்தை வைத்து செயல்திறனுக்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அதாவது எத்தனை சதவிகித சட்டகங்களில் நிழல்பட மையத்தில் நாம் கண்காணிக்கும் பொருள் பதிவு செய்யப்பட்டது என்பதுதான் செயல் திறன் அளவு.  

வெற்றி விகிதத்தை மேம்படுத்துவது எப்படி?

முக்கிய இலக்கை இரண்டு தனிப் பணிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் பணி நிழற்படக் கருவியில் இலக்குப் பொருளைத் துல்லியமாகக் கண்டறிதல். இரண்டாவது பணி நிழற்படக் கருவியை அகலவாட்டிலும் உயரவாட்டிலும் திருப்பி இலக்குப் பொருளைப் படத்தின் மையத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்.

நன்றி தெரிவிப்புகள்

  1. Object Tracking Robot – By Nikus – INSTRUCTABLES
  2. RobotBenchmark – Visual Tracking

இத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரன் கட்டுப்படுத்திகள்

ஏன் அர்டுயினோ? ஏன் ராஸ்பெரி பை? குறைந்த செலவில் ஷான்க்பாட் (Shonkbot)

ashokramach@gmail.com

%d bloggers like this: