மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்கு திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும்

மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய குழுக்கள் சொல்கின்றன.

141 அமைப்புகளும் 17005 நபர்களும் இந்த வெளிப்படைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் எழுதப்படும் மென்பொருட்கள் மக்களுக்குத் திறந்த மூலமாகக் கிடைக்க வழி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. ஐரோப்பிய எண்ணிம உரிமை முன்னெடுப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கோர பல நியாயமான காரணங்கள் இருப்பினும் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும் புரிய ஆரம்பிக்கவில்லை. திறந்த மூல மென்பொருளை யாவரும் படிக்கலாம், பயன்படுத்தலாம், பகிரலாம் மற்றும் மேம்படுத்தலாம். அரசாங்கமும் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களும் மக்களின் வரிப் பணத்தில் நடைபெறுகின்றன. மக்களின் வரிப் பணத்தில் எழுதப்படும் நிரல்கள் மக்கள் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தக் காரணத்தால்தான் கீழே கையெத்திட்டுள்ள நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை இவ்வாறு கேட்டுக்கொள்கிறோம்:

“மக்களின் வரிப் பணத்தில் எழுதப்படும் நிரல்களைக் கட்டற்ற திறந்த மூல உரிமத்தில் தான் வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள்.”

மூலக்கட்டுரை இங்கே

பின்குறிப்பு: இது பற்றி மடலாடற்குழுவில் நடைபெற்ற சில கேள்வி பதில்கள்

கேள்வி: மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இஸ்ரோ போன்ற உயர் ஆய்வக அறிக்கையையும் இதுபோல திறமூலமாக விடச்சொல்வது ஏற்புடையதா?

பதில்: இஸ்ரோவில் செய்யப்படும் அனைத்து ஆய்வுகளுமே அதி உன்னத ரகசியங்கள் இல்லை. பொது மக்கள் பயன்பாட்டுக்கான பலவற்றை அவர்கள் உருவாக்கவே செய்வர். அவற்றை பொது வெளியில் விடலாமே.

பாதுகாப்பு துறை தயாரிக்கும் மென்பொருட்களைவிட அதிகம் மறைகாப்பு தேவை இருக்க முடியாது. 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க பாதுகாப்பு நிதி அங்கீகாரச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை பெரும்பாலான மென்பொருள் மூல நிரல்களைத் திறந்த மூல முறைகள்மூலம் நிர்வகித்தல் மற்றும் உரிமம் வழங்குதல் ஜூன் மாதத்துக்குள் தொடங்கியாக வேண்டும் என்பது நிபந்தனை. இவர்கள் ஏற்கெனவே ஒரு திறந்தமூல திட்டத்தைச்  சோதனைக்கு தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

கேள்வி: ஒரு நாட்டின் நிதியில் உருவானதை பொதுவுரிமையில் விடுவதால் பிற நாட்டினர் பொருளாதாரத்தில் முந்திச்செல்ல மாட்டார்களா?

பதில்: அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முயற்சியில் உருவான இணையத்தில் வளர்ச்சியால் தான் உலகின் பல நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இணையத்தின் அனைத்து உட்கூறு கட்டமைப்புகளும், ஆய்வுகளும் திறந்த மூலமாக உள்ளதால்தான் பல்வேறு நாடுகளின் வளர்ச்சியும் சாத்தியமானது.

கேள்வி: திறமூல ஆதரவாளர் என்ற போதும் பொதுநிதியில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் அனைத்தும் பொதுவுரிமையில் வெளியிடுவதை ஏற்பதில் தயக்கமுள்ளது. இடத்திற்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவுமே இதனைத் தீர்மானிக்க வேண்டும் என்பது கருத்து.

பதில்: இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் கட்டற்ற மென்பொருளாக வருவது மிகவும் மிகவும் குறைவாகவே உள்ளது. இடத்திற்கும், தேவைக்கும் ஏற்ப இதை தீர்மானிக்க வேண்டும் தான். ஆனால், அதற்காக எதையுமே வெளியிடாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உதாரணமாக, த இ க, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற தமிழ் சார்ந்த அரசு நிறுவனங்கள் பல கோடிகள் செலவு செய்வதை அறிவோம். ஆனால் அங்கு நடக்கும் ஆய்வுகள், உருவாகும் மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருளாக வெளியிட ப் படுவதில்லை. இதனால் ஒருவர் ஏற்கெனவே உருவாக்கிய மென்பொருளை யே மற்றொருவர் மீண்டும் உருவாக்க வேண்டி வருகிறது. இந்த நிலையை அனைவரும் அறிவோம். மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் கட்டற்ற மென்பொருளாக கிடைக்கும் போது, தொடர் வளர்ச்சி ஏற்படும். அவ்வாறு கேட்கும் உரிமை வரி செலுத்தும் அனைவருக்கும் உண்டு.

%d bloggers like this: