நூல் சுருக்கம்
மென்பொருள் பொறியியல் பற்றிய சில ஆச்சரியமான கோட்பாடுகளை லினக்ஸின் ( Linux) வரலாறு அறிவுறுத்தியது. இவற்றை சோதனை செய்வதற்காகவே நான் நடத்திய வெற்றிகரமான திறந்த மூல திட்டமான ஃபெட்ச்மெயிலைக் (fetchmail) கூறுபடுத்தி ஆய்வு செய்கிறேன். வணிக உலகில் பெரும்பாலும் “பேராலயம்” பாணியில்தான் மென்பொருள் உருவாக்கப்படுகிறது. லினக்ஸ் உலகின் “சந்தை” பாணி இதற்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது. இந்த வேறுபட்ட வளர்ச்சிப் பாணிகளின் கோட்பாடுகளை நான் விவாதிக்கிறேன். இந்தப் பாணிகள் மென்பொருள் வழுநீக்கல் (debugging) பணியின் தன்மையைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட அனுமானங்களிலிருந்து வந்தவை என்பதைக் காட்டுகிறேன். லினக்ஸ் அனுபவத்திலிருந்து நான் ஒரு நிலையான வாதத்தை முன்வைக்கிறேன், “அனேகம் பேர் கவனித்தால் அனைத்து வழுக்களும் எளியவையே (Given enough eyeballs, all bugs are shallow)”. தன்னல முகவர்களின் (selfish agents) தானாகவே திருத்திக் கொள்ளும் அமைப்புகளுடன் (self-correcting systems) ஆக்கவளமுடைய ஒப்புமைகளைப் பரிந்துரைக்கிறேன். மேலும் மென்பொருளின் எதிர்காலத்திற்கான இந்த நுண்ணறிவின் தாக்கங்கள் பற்றிய சில புத்தாய்வுகளுடன் முடிக்கிறேன்.
பேராலயமும் சந்தையும்
லினக்ஸ் புரட்சிகரமானது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு (1991) இணையம் வழியாக மட்டுமே தொடர்பிலிருக்கும் பல ஆயிரம் நிரலாளர்களின் பகுதி நேர வேலையில் ஓர் உலகத் தரம் வாய்ந்த இயங்குதளம் மந்திரம் செய்தது போல ஒன்றுகூடி வரும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்?
நிச்சயமாக நான் அல்ல. 1993 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லினக்ஸ் எனக்குத் தெரிய வந்தபோது, நான் ஏற்கனவே பத்தாண்டுகளாக யூனிக்ஸ் (Unix) மற்றும் திறந்த மூல மேம்பாட்டில் ஈடுபட்டிருந்தேன். 1980களில் குனு (GNU) வின் முதல் பங்களிப்பாளர்களில் நானும் ஒருவன். இன்றும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள பல திறந்த மூல நிரல்களை (nethack, Emacs VC மற்றும் GUD mods, xlife இன்ன பிற) உருவாக்கி அல்லது இணைந்து உருவாக்கி வெளியிட்டிருந்தேன். அதை எப்படிச் செய்வதென்று எனக்குத் தெரியுமென்று நினைத்தேன்.
எனக்குத் தெரியும் என்று நான் நினைத்த பலவற்றை லினக்ஸ் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. நான் பல ஆண்டுகளாக சிறிய கருவிகள், விரைவான முன்மாதிரி மற்றும் பரிணாம நிரலாக்கம் (evolutionary programming) போன்ற யூனிக்ஸ் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்.
சிக்கலான மென்பொருட்களுக்கு பேராலயங்களைப் போல மையக் கட்டுப்பாடு அவசியம் என்று நான் நம்பினேன்
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மிகச்சிக்கலான திட்டங்களுக்கு மையக் கட்டுப்பாட்டிலுள்ள திட்டமிட்ட அணுகுமுறை தேவை என்று நம்பினேன். மிக முக்கியமான மென்பொருட்கள் (இயங்கு தளங்கள் மற்றும் ஈமாக்ஸ் (Emacs) நிரல் தொகுப்பி போன்ற பெரிய கருவிகள்) பேராலயங்களைப் போல உருவாக்கப்பட வேண்டும் என்று நான் நம்பினேன். தேர்ச்சித்திறன் கொண்ட தனி நிபுணர்கள் அல்லது சிறிய குழுக்கள் மூலம் கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்று நம்பினேன். முழுமை அடையாத பீட்டா (beta) நிலையில் மென்பொருளை வெளியிடக் கூடாது என்றும் நினைத்தேன்.
இரைச்சல் மிகுந்த சந்தைக்கடையாக இருந்த லினக்ஸ் சமூகம் மிக நன்றாக வேலை செய்தது ஆச்சரியமாக இருந்தது
லினக்ஸ் உருவாக்குனர் மற்றும் தலைமை நிரலாளர் லினஸ் டோர்வால்ட்ஸின் (Linus Torvalds) வளர்ச்சியின் பாணி— முன்னதாக வெளியிடுதல் அடிக்கடி வெளியிடுதல், முடிந்த அளவு அனைத்துப் பொறுப்புகளையும் பகிர்ந்தளித்தல், முற்றிலுமாகத் திறந்திருத்தல்—ஆச்சரியமாக இருந்தது. இங்கு எவரும் மிக அமைதியாக, பயபக்தியுடன் பேராலயம் கட்டவில்லை. மாறாக, லினக்ஸ் சமூகம் மாறுபட்ட குறிக்கோள்கள் மற்றும் அணுகுமுறைகள் கொண்ட இரைச்சல் மிகுந்த சந்தைக்கடையைப் போல் இருந்தது. எடுத்துக்காட்டாக, லினக்ஸ் காப்பக தளங்களில் எவர் வேண்டுமானாலும் நிரல் சமர்ப்பிக்கலாம். இதிலிருந்து ஓர் ஒத்திசைவான மற்றும் நிலையான மென்பொருள் வெளிவர வேண்டுமென்றால் வரிசையாகப் பல அற்புதங்கள் நிகழ வேண்டும் போலிருந்தது.
இந்த சந்தை பாணி வேலை செய்கிறது, அதுவும் நன்றாக வேலை செய்கிறது என்பது ஓர் அளப்பரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அதில் நுழைந்த போது, அதன் தனிப்பட்ட திட்டங்களில் கடுமையாக வேலை செய்தேன். மேலும் லினக்ஸ் உலகம் ஏன் குழப்பத்தில் பிய்த்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல் பேராலயம் கட்டுபவர்கள் கற்பனை கூட செய்ய முடியாத வேகத்தில் வலிமையிலிருந்து வலிமைக்குச் சென்றது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் கடுமையாக முயற்சித்தேன்.
சந்தை பாணியில் ஒரு திறந்த மூல திட்டத்தை இயக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
1996 நடுவில் நான் ஓரளவு புரிந்து கொள்ளத் தொடங்கினேன். எனது கோட்பாட்டைச் சோதிக்க ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது சந்தை பாணியில் நான் உணர்வுபூர்வமாக இயக்கிப் பார்க்கக்கூடிய ஒரு திறந்த மூல திட்ட வடிவில் வந்தது. அத்திட்டத்தில் என் கோட்பாட்டைச் செயல்படுத்தினேன். அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியானது.
சந்தை பாணியில் நான் இயக்கிய அந்தத் திறந்த மூல திட்டத்தின் கதைதான் இந்நூல்
இதுதான் அத்திட்டத்தின் கதை. திறம்பட்ட திறந்த மூல மென்பொருள் உருவாக்கம் பற்றிய சில மணிமொழிகளை முன்மொழிய இதைப் பயன்படுத்துகிறேன். இவை அனைத்தும் லினக்ஸ் உலகில் நான் முதன்முதலில் கற்றுக்கொண்ட சங்கதிகள் அல்ல. ஆனால் லினக்ஸ் உலகம் இவற்றுக்கு எவ்வாறு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைப் பார்ப்போம். தொடர்ந்து நல்ல மென்பொருள் வழங்கும் ஊற்றாக லினக்ஸ் சமூகத்தை ஆக்குவது எது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள இவை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். ஒருவேளை இவை உங்கள் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவலாம்.
மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0
தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: அஞ்சல் போய்ச் சேர்ந்தாக வேண்டும்
தேவையே கண்டுபிடிப்பின் தாய். தலை சிறந்த நிரலாளர்களின் முக்கியமான பண்பு ஆக்கப்பூர்வமான சோம்பல். யூனிக்ஸ் / லினக்ஸ் உலகின் மூலப் பகிர்வு பாரம்பரியம் எப்போதும் நிரல் மறுபயன்பாட்டிற்கு ஒத்தாசையாகவே இருந்து வருகிறது. முதல் முறை ஒரு தீர்வைச் செயல்படுத்தும் வரை பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் மனப்பாங்கு சரியாக இருந்தால், சுவாரசியமான திட்டங்கள் உங்களைத் தானே தேடி வரும்.