பேராலயமும் சந்தையும் 4. பயனர்கள் இருப்பதன் முக்கியத்துவம்

பயனர்களைச் சரியாகப் பண்படுத்தினால் அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம்

இப்படியாக நான் பாப்கிளையன்ட்டைப் பெற்றேன். அதைவிட முக்கியமாக, நான் பாப்கிளையன்ட்டின் பயனர் அடித்தளத்தைப் பெற்றேன். பயனர்கள் நமக்குத் தேவையான அற்புதமான நபர்கள். நாம் ஓர் உண்மையான தேவைக்குச் சேவை செய்கிறோம், எதையோ சரியாகச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் நிரூபிப்பதால் மட்டுமல்ல. சரியாகப் பண்படுத்தினால், அவர்கள் இணை உருவாக்குநர்களாகவும் ஆகலாம்.

யூனிக்ஸ் பாரம்பரியத்தின் மற்றொரு பலம், பல பயனர்கள் கொந்தர்களாகவும் (hackers) உள்ளனர். இதையே லினக்ஸ் நல்ல உச்சநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. மூல நிரல் கிடைப்பதால், அவர்கள் திறனான கொந்தர்களாக இருக்க இயலும். வழுத்திருத்த நேரத்தைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  கொஞ்சம் ஊக்கமளித்தால், உங்கள் பயனர்கள் சிக்கல்களைக் கண்டறிவார்கள், திருத்தங்களைப் பரிந்துரைப்பார்கள் மற்றும் நீங்கள் தனியாகப் போராடுவதைவிட விரைவாக நிரலை மேம்படுத்த உதவுவார்கள்.

மணிமொழி 6. உங்கள் பயனர்களை இணை-நிரலாளர்களாகக் கருதுவது, விரைந்த நிரல் மேம்பாடு மற்றும் திறனான வழுத்திருத்தத்திற்கான பிரச்சினையற்ற வழியாகும்.

இந்த விளைவின் சக்தியை நாம் எளிதாகக் குறைத்து மதிப்பிடக்கூடும்.  உண்மையில், திறந்த மூல உலகில் நாம் அனைவரும், லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) செயல்படுத்திக் காண்பிக்கும் வரை, பயனர்களின் எண்ணிக்கை கூடி, திட்டமும் சிக்கலாகும்போது இது எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறது என்பதைக் கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டோம்.

தோல்வியடைய முடியாத அளவுக்குச் சோம்பேறி!

லினக்ஸ் கருநிரல் மேம்பாட்டுச் செயல்முறை

உண்மையில் லினஸின் சாமர்த்தியமான மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கக் கொந்தல் (hack) லினக்ஸ் கருநிரலின் (kernel) கட்டுமானம் அல்ல. மாறாக அவர் லினக்ஸ் உருவாக்கும் பாணியைக் கண்டுபிடித்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.  ஒருமுறை அவர் முன்னிலையில் இக்கருத்தை நான் தெரிவித்தபோது சிரித்துக்கொண்டே, அவர் அடிக்கடி சொல்வதையே அமைதியாகச் சொன்னார்: “அடிப்படையில் நான் மிகவும் சோம்பேறி. மற்றவர்கள் செய்யும் வேலையை வைத்து நான் நல்ல பெயர் வாங்க விரும்புபவன்.” குள்ளநரியைப் போல சோம்பேறி.  அல்லது, ராபர்ட் ஹெய்ன்லைன் (Robert Heinlein) தனது கதாபாத்திரங்களில் ஒன்றைப் பற்றிப் பிரபலமாக எழுதியது போல, தோல்வியடைய முடியாத அளவுக்குச் சோம்பேறி.

பின்னோக்கிப் பார்த்தால், லினக்ஸின் வழிமுறைகள் மற்றும் வெற்றிக்கான ஒரு முன்னுதாரணத்தை GNU Emacs Lisp நிரலகம் மற்றும் Lisp நிரல் காப்பகங்களின் வளர்ச்சியில் காணலாம்.  Emacs C core மற்றும் பிற குனு கருவிகளின் பேராலயம்-கட்டமைப்பு பாணிக்கு மாறாக, லிஸ்ப் நிரலகத்தின் பரிணாமம் நெகிழ்வானது மற்றும் பயனர்களால் வெகுவாக உந்தப்பட்டது.  யோசனைகள் மற்றும் முன்மாதிரி முறைகள் நிலையான இறுதி வடிவத்தை அடைவதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு முறை திரும்ப எழுதப்பட்டன. மற்றும் லினக்ஸ் போலவே இணையம் மூலம் நெகிழ்வான ஒத்துழைப்புகள் அடிக்கடி இருந்தன.

உண்மையில், ஃபெட்ச்மெயிலுக்கு முந்தைய எனது சொந்த வெற்றிகரமான ஒற்றை முயற்சி அநேகமாக ஈமாக்ஸ் விசி (பதிப்புக் கட்டுப்பாடு) பயன்முறையாக (Emacs VC (version control) mode) இருக்கலாம். இதில் லினக்ஸ் போலவே மூன்று நபர்களுடன் மின்னஞ்சல் மூலம் கூட்டுப்பணியாற்றினேன். இவர்களில் ஒருவரை மட்டுமே (இமாக்ஸ் படைப்பாளரும் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவனருமான ரிச்சர்ட் ஸ்டால்மேன்(Richard Stallman)), நான் இதுநாள்வரை சந்தித்துள்ளேன்.

இது SCCS, RCS மற்றும் பிற்கால CVS ஆகியவற்றிற்கான பயனர் முகப்பாக இருந்தது. இது எளிய பதிப்புக் கட்டுப்பாட்டு செயல்பாடுகளை வழங்கிய Emacs க்குள் இருந்து வந்தது.  இது வேறு யாரோ எழுதிய ஒரு சிறிய, செப்பம் செய்யாத sccs.el பயன்முறையில் இருந்து உருவானது.  மேலும் VC இன் வளர்ச்சி வெற்றியடைந்தது. ஏனெனில், Emacs போல் இல்லாமல், வெளியிடு/சோதனை செய்/மேம்படுத்து சுழற்சிகள் மூலம் மிக விரைவாக Emacs Lisp நிரலின் புதிய பதிப்புகளை வெளியீடு செய்ய முடியும்.

பேராலயம்-பாணி உட்கருவையும் சந்தை-பாணி கருவிப்பெட்டியையும் கொண்ட மென்பொருட்கள்

ஈமாக்ஸ் கதை தனித்துவமானது அல்ல. பேராலயம்-பாணி உட்கருவையும் சந்தை-பாணி கருவிப்பெட்டியையும் இணைக்கும் இரண்டு-நிலைக் கட்டமைப்பு மற்றும் இரண்டு-அடுக்கு பயனர் சமூகம் கொண்ட பிற மென்பொருள் தயாரிப்புகள் உள்ளன. வணிகரீதியான தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் (data-analysis and visualization) கருவியான மேட்லாப் (MATLAB) என்பது அத்தகைய ஒன்றாகும். முக்கிய நடவடிக்கைகள், எழுச்சியும் மாற்றப்போக்கும், புதுப்புனைவு ஆகியவை பெரும்பாலும் கருவியின் திறந்த பகுதியில் நிகழ்கின்றன என மேட்லாப் மற்றும் இதே போன்ற கட்டமைப்பைக் கொண்ட பிற தயாரிப்புகளின் பயனர்கள் கூறுகிறார்கள். அங்கு ஒரு பெரிய பலதரப்பட்ட சமூகம் அக்கருவியை நோண்டிப் பார்க்க (tinker) இயல்கிறது.

மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0

தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com

நன்றி

  1. Linux kernel development process – uploaded by Isabella Ferreira

இத்தொடரில் அடுத்த கட்டுரை: முன்னதாக வெளியிடுக, அடிக்கடி வெளியிடுக

லினஸின் திறந்த வளர்ச்சிக் கொள்கை பேராலயம் பாணிக்கு முற்றிலும் எதிர் மாறானது. “அனேகம் பேர் கவனித்தால் அனைத்து வழுக்களும் எளியவையே” – லினஸின் விதி. பேராலயம்-பாணி மற்றும் சந்தை-பாணியின் அடிப்படை வேறுபாடு லினஸின் விதியில்தான் உள்ளது. லினக்ஸ் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் கூட மறுஇயக்கம் (reboot) செய்யாமல் இயங்க வல்லது. லினஸின் விதியை “வழுத்திருத்தம் இணையாக செய்யக்கூடியது (parallelizable)” என மாற்றிச் சொல்லலாம். பயனர்கள் இணை நிரலாளர்களானால் பிரச்சினையை வெவ்வேறு கோணத்தில் அணுகுகின்றனர்.

%d bloggers like this: