மைக்ரோ சாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியை (technical assistance) ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்தி விட்டது. இது குறித்த அறிவிப்பை ஜனவரியிலேயே மைக்ரேசாப்ட் வெளியிட்டு விட்டது. இதன் காரணமாக, தமிழ்நாட்டு அரசு துறைகளில் உள்ள அனைத்து கணினிகளிலும் திறவூற்று மென்பொருளான (open source software) பாஸ் லினக்ஸை (BOSS Linux) நிறுவ உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
“பாஸ் லினக்ஸை முக்கிய இயங்கு தளமாக நிறுவ பரிசீலியுங்கள்”, என தகவல் தொழில்நுட்ப துறையின் ஓர் அரசாணை தெரிவிக்கிறது. ‘மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம்’ (Centre for Development of Advanced Computing [C-DAC]) வெளியிட்ட மென்பொருள் குறித்த கருத்தில், “பாஸ் லினக்ஸ், திறவூற்று மென்பொருளாக இருப்பதால் அதைத் தேவைக்கேற்ப மாற்றம் செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கிறது.
இந்த மாற்றத்திற்கான முக்கிய பலன் என்னவெனில், இதன் விளைவாக அரசுக்கு அதிக சேமிப்பு கிடைக்கும். “திறவூற்றல்லாத மென்பொருட்களை வாங்குவதற்கான செலவை தவிர்க்கலாம். இதன் மூலமாக அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும்”, என அந்த ஆணை கூறுகிறது.
அரசு முன்னமே நவம்பர் 2011-ல், அனத்து துறைகளுக்கும் பாஸ் லினக்ஸ்-ஐ நிறுவ அனுமதி அளித்திருந்தாலும், பல துறைகள் விண்டோஸ் எக்ஸ்பி-ஐ (Windows XP) பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. தற்போது இந்த மாற்றம் நிகழவிருப்பதன் காரணம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் எக்ஸ்பி-கான பாதுகாப்பு மேம்பாடுகளை (security updates) ஏப்ரல் 8-ம் தேதி முதல் நிறுத்தியது தான்.
“காப்புரிமை பெற்ற மென்பொருளை மேம்படுத்தி பயன்படுத்துவது, மென்பொருளுக்கு (software) மட்டும் அல்லாது வன்பொருளுக்கும் (hardware) அதிகமாக செலவு செய்யும் படி ஆகிவிடும்.”
“பாஸ் லினக்ஸுக்கு மாறுவதால் இது தடுக்கப்படும்”, என அறிவுறுத்துகிறது ஆணை . இந்த திறவூற்று மென்பொருள் இயங்குதளம், அனைத்து இந்திய மொழிகள், உயிரியல் உணர் கருவிகள் (bio-sensing devices) , இயக்க முறை குறியொப்பம் (digital signature) போன்றவற்றை ஆதரிப்பதுடன் நமக்கேற்றாற் போல் அந்த அம்சங்களை மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. ” திறவூற்று மென்பொருள், நச்சு நிரல்களை (virus) செயலற்றதாக்கும். இதனால், தகவல் இழப்பு (loss of information), மென்பொருள் தகவல் திருட்டு (hacking) , பயனர் கணக்கு, கடனட்டை மற்றும் செலவட்டை தகவல் திருட்டு (phishing) போன்றவற்றை தவிர்க்கலாம். நச்சுநிரல்-நாசினி (anti-virus) மென்பொருட்களுக்கு அதிக பணம் செலவிடத் தேவை இல்லை” , என அரசாணை தெரிவிக்கிறது.
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் தன் வலைத்தளத்தில், “கடந்த 12 ஆண்டுகளாக விண்டோஸ் எக்ஸ்பி-க்கு தொழில்நுட்ப உதவி அளிக்கப்பட்டு வந்தது. இனி புதிய தொழில்நுட்பங்ளை கொணர்வதில், பங்குதாரர்களோடு இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது” என் தெரிவித்துள்ளது.
“விண்டோஸ் எக்ஸ்பி-யை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேலை செய்யும், ஆனால் உங்கள் கணினி நச்சு நிரல்களால் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படும்”, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : TN state departments asked to switch over to open source software
எழுத்து: சோபின் பிராண்சல் (Jophine Pranjal)