எளிய தமிழில் Robotics 21. டர்டில்பாட் 3 – பர்கர் (Turtlebot 3 – Burger)

இது வரை நாம் பார்த்த எந்திரன் தொகுதிகள் கீழ்க்கண்ட வகையில் மிகவும் பயனுள்ளவை:

  • ஆறு வயது முதல் பல்வேறு வயது வரம்புக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்றுக்கொள்ள எளிதாக நிரல் எழுதும் வகைகள் பல உண்டு.
  • கைமுறையாக செயல்படுத்திப் பார்க்க பல வழிமுறைகள் இருப்பதால் எந்திரனியல் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம்.
  • சிறுவர்கள் விளையாட்டாக தொழில் நுட்பத்தையும், நிரல் எழுதுவதையும் மட்டுமல்லாமல் அறிவியலையும், கணிதத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வழிவகுக்கின்றன.

நாம் இதுவரை பார்த்த பாவனையாக்கியில் செய்யக்கூடிய பயிற்சிகளை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் எந்திரனியல் கல்வி மற்றும் பயிற்சியில் அடுத்தபடி என்ன? அடுத்த சவால் என்ன? எந்திரனியலில் நடைமுறைக்கு பயன்படக்கூடிய ஏதாவது ஒரு திட்டத்தை செயல் படுத்தலாம். இது கல்லூரிப் பயிற்சிக்கு உதவலாம் அல்லது வணிக ரீதியாகவும் இருக்கலாம். இதற்கு உங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய எந்திரனியல் மென்பொருள் தொகுப்பு ஒன்று தேவை. அதுதான் ராஸ்!

ராஸ் (ROS – Robot Operating System) 

ராஸ் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பரவலாக பயன்படுத்தப்படும் திறந்த மூல மென்பொருள் தொகுப்பு. இதில் கீழ்க்கண்ட மென்பொருட்கள் அடங்கியுள்ளன:

  • சந்தையில் பரவலாகக் கிடைக்கக்கூடிய எந்திரனியல் வன்பொருட்களை இயக்கக்கூடிய ஓட்டி மென்பொருட்கள் (hardware drivers).
  • எந்திரனியலில் பயன்படும் வினைச்சரங்களை (algorithms) செயல்படுத்திய மென்பொருள் தொகுப்புகள். அதுவும் மிகவும் மேம்படுத்திய சமீபகால வினைச்சரங்கள்.
  • நிரலாளர்களுக்கு அவசியம் தேவையான சக்தி வாய்ந்த நிரல் கருவிகள் (developer tools).

ராஸ் மென்பொருளை 125 க்கும் மேலான எந்திரன்களில் பயன்படுத்திவருகிறார்கள். இவற்றில் பல வணிக ரீதியானவை. மேலும் இவர்களில் பலர் தங்கள் வேலைக்காக உருவாக்கிய மென்பொருள் தொகுப்புகளையும் (software packages) திறந்த மூலமாகப் பகிர்ந்துள்ளார்கள். எடுத்துக்காட்டுகள்:

  • இடையூறு தவிர்ப்பு (Obstacle Avoidance)
  • வரைபடம் தயாரித்து தன்னிடங்குறித்தல் (Simultaneous Localization And Mapping – SLAM)
  • சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following)
  • தானியங்கியாக வண்டியை செலுத்துதல் (Automated Driving)

மேலும் அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன, எப்படித் தீர்வு கண்டார்கள் என்பதையும் மன்றங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

புரிகிறது, ஆனால் ராஸ் கற்றுக் கொண்டால் தான் வணிக ரீதியாக எதையும் செயல்படுத்த முடியும் போல் தெரிகிறது. ஆனால் எதையாவது செயல்படுத்தினால்தான் ராஸ் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு? அதுதான் டர்டில்பாட் 3 பர்கர்!

டர்டில்பாட் 3 பர்கர்

டர்டில்பாட் 3 - பர்கர்

டர்டில்பாட் 3 – பர்கர்

குறைந்த விலை கணினியில் திறனையும் வசதியையும் மிகவும் குறைக்காமல் ராஸ் மென்பொருளை முழுமையாக நிறுவி வேலை செய்து பார்க்க இது ஒரு நல்ல எந்திரன் தொகுதி. மேலும் நகரும் எந்திரனில் பல விதமான உணரிகளை சோதனை செய்து பார்க்கவும் இது மிகவும் சிறந்தது.

நீங்கள் பொழுதுபோக்குக்காகவோ அல்லது வேடிக்கை விளையாட்டுக்காகவோ ஒரு எந்திரன் வாங்க விரும்பினால் அது இதுவல்ல. மேம்பட்ட எந்திரனியல் (advanced robotics) மற்றும் கணினி அறிவியல் கருத்துக்களைக் (computer science concepts) கற்றுக்கொள்ள விரும்பினால் நீங்கள் வாங்க விரும்பும் எந்திரன் இதுவாகும்.

இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும். நன்றி!

ashokramach@gmail.com

%d bloggers like this: