எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV)

இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான மின்னூர்திகள் (All-Electric Vehicles – AEV) என்றும் சொல்கிறார்கள்.

Types-of-electric-vehicles

மின்னூர்தி வகைகள்

கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV)

இவற்றில் பெட்ரோல் எஞ்சினும் உண்டு, மின்கலத்தின் திறனில் ஓடும் மோட்டாரும் உண்டு. ஆகவேதான் இவற்றைக் கலப்பின மின்னூர்திகள் என்று சொல்கிறோம். பெட்ரோல் எஞ்சினுக்கான சுழற்செலுத்தி (transmission), உமிழ்வு அமைப்புகள் (exhaust system) யாவும் இருக்கும். இழுவை மின்கலத்தில் திறன் இருக்கும்வரை மோட்டாரும் எஞ்சினுடன் சேர்ந்து வண்டியை ஓட்டும். இதன் விளைவாக பெட்ரோல் பயன்பாடு ஓரளவு குறையும். ஒவ்வொரு முறை நீங்கள் பிரேக்கை அழுத்தும்போதும் மீளாக்க நிறுத்தம் (regenerative braking) வழியாக இழுவை மின்கலத்தில் மின்சாரம் ஏறும். மீளாக்க நிறுத்தம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பின்னர் வரும் கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம். இவற்றை வலுவான அல்லது முழு கலப்பின ஊர்தி என்று சொல்கிறார்கள். இவற்றை எஞ்சின் மட்டுமே, அல்லது மின் மோட்டார் மட்டுமே அல்லது இரண்டும் ஒருங்கிணைந்தும் இயக்க முடியும்.

மென் கலப்பின மின்னூர்திகள் (Mild Hybrid Electric Vehicles – MHEV)

இது பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஊர்தியைக் குறிக்கிறது. இதில் ஏற்கெனவே உள்ள எஞ்சினை ஓட்டத் தொடக்கும் மின் மோட்டார் / மின்னியற்றியையே (starter motor / generator) மீளாக்க நிறுத்தத்துக்கும் பயன்படுத்துகிறோம். அதற்கான ஒரு தனி மின்கலம் உண்டு. இந்த மோட்டார் மின்னியற்றியாக (generator) வேலை செய்து மீளாக்க நிறுத்தம் மூலம் அந்தத் தனிமின்கலத்தில் மின்னேற்றம் செய்யும். இந்த சக்தியின் மூலம் வண்டி வேகம் எடுக்க எஞ்சினுக்கு மின் மோட்டார் உதவி செய்து எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். ஆனால் மென் கலப்பின மின்னூர்தியில் உள்ள மோட்டாரும், மின்கலமும் சிறியவை. ஆகவே இவற்றுக்கு வண்டியை முழுவதும் ஓட்டும் அளவுக்குத் திறன் கிடையாது.

செருகு கலப்பின மின்னூர்திகள் (Plug-in Hybrid Electric Vehicle – PHEV)

மேற்கண்ட கலப்பின மின்னூர்திகளுக்கு அவ்வளவு பெரிய மின்கலம் தேவையில்லை. ஏனெனில் மீளாக்க நிறுத்தம் வழியாக ஓரளவுதான் மின்னேற்றம் நடக்கும். மாறாக மின்கல மின்னூர்திகளைப் போன்றே பெரிய இழுவை மின்கலம் பொருத்தி தினம் இரவில் வீட்டில் மின்னேற்றம் செய்து ஓட்டுபவைதான் செருகு கலப்பின மின்னூர்திகள். இழுவை மின்கலம் முழுமையாக வடிந்துவிட்டால் இவற்றைப் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தித் தொடர்ந்து ஓட்டலாம். 

வேதி மின்னூர்திகள் (Fuel Cell Electric Vehicles – FCEV) 

இவை ஹைட்ரஜன் (Hydrogen) வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. எரிபொருளின் இரசாயன ஆற்றல் நேரடியாக மின்சார ஆற்றலாக மாற்றப்பட்டு மோட்டாரை இயக்குகிறது. காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் வேதிவினை (chemical reaction) மூலம் ஹைட்ரஜன் கலந்து நீராவி (H2O) மட்டுமே உமிழ்வாக வெளி வரும். ஆகவே இவை சுழியம் உமிழ்வு (zero emission) வாகனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பெட்ரோல் டீசல் மின்னூர்திகள் போலவே நாம் பயணம் செல்லும் வழியில் ஹைட்ரஜன் நிரப்பிக்கொண்டு தொடர்ந்து பயணிக்க இயலும். மாநிலங்களுக்கு இடையேயான நெடுந்தூரப் பேருந்துகளுக்கும் சரக்குந்துகளுக்கும் இந்தத் தொழில்நுட்பமே மிகவும் உசிதமானது.

இனி வரும் கட்டுரைகளில் மின்கல மின்னூர்திகளைப் பற்றியே விவரமாகப் பார்ப்போம்.

நன்றி

  1. Types of Electric Vehicles – Intellipaat

இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறன் பொறித்தொடர்

பெட்ரோல் டீசல் ஊர்திகளின் திறன் பொறித்தொடர். மின்னூர்திகளின் திறன் பொறித்தொடர். இழுசக்தி (torque). ஒற்றை குறைவேகப் பல்லிணை (single-speed gear reduction).

ashokramach@gmail.com

%d bloggers like this: