VR என்பது அனைத்து மூழ்கவைக்கும் மெய்நிகர் அனுபவங்களையும் உள்ளடக்கியது. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் போன்ற 360 பாகை முற்றிலும் மெய்யுலகக் காணொளியாகவும் (360 video) இருக்கலாம். அல்லது முற்றிலும் செயற்கையாக கணினியில் உருவாக்கிய 3D அசைவூட்டமாகவும் (animation) இருக்கலாம். அல்லது இவை இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம்.
மூழ்கவைக்கும் அனுபவம் (immersive experience)
மூழ்கவைக்கும் அனுபவம் என்றால் என்ன? பார்வையாளர்களுக்கு விளக்கக்காட்சியால் சித்தரிக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும். இதுதான் மூழ்கவைக்கும் அனுபவத்தின் சாராம்சம். இதற்கு நாம் பார்வைப் புலம் (Field of View – FoV) என்ற கருத்துருவைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பார்வைப் புலம்
தலையைத் திருப்பாமல் எந்த நேரத்திலும் நாம் காணக்கூடிய சுற்றுச்சூழலின் அளவே பார்வைப் புலம். மொத்தம் 360 பாகைகளில் கிடை மட்டத்தில் சுமார் 210 பாகை அளவும் செங்குத்தில் சுமார் 150 பாகை அளவும் நம்மால் பார்க்க முடியும். சில பறவைகள் தலையைத் திருப்பாமல் கிட்டத்தட்ட முழு 360 பாகைகளும் பார்க்க முடியும்.
முப்பரிமாண ஐமாக்ஸ் (IMAX) திரையரங்குகளை “உலகின் மிக அதிகமான மூழ்கவைக்கும் அனுபவம்” என்று சொல்கிறார்கள். ஏனெனில் இதன் திரை உங்கள் பார்வைப்புலத்தைவிட அகலமாகவும் உயரமாகவும் இருக்கிறது. திரை எங்கு முடிகிறது என்பது உங்கள் கண்களுக்குத் தெரியாததால் திரையில் நடக்கும் காட்சியின் நடுவிலேயே நீங்கள் இருப்பது போல உணர்வீர்கள்.
வானூர்தி பாவனையாக்கி (flight simulator) என்பது விமானி பயிற்சிக்காக வானூர்தியின் பறக்கும் சூழலைச் செயற்கையாக உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். வானூர்தியிலுள்ள சாளரங்களைப் போலவே முன்புறமும், இரு பக்கங்களிலும் கணினித் திரைகளை அமைத்திருப்பார்கள். விமானியின் இருக்கையில் அமர்ந்து விசைகளை இயக்கும்போது வெளிக்காட்சி அதற்கேற்றாற்போல மாறும். வானூர்தியில் பறப்பது போலவே உணர்வீர்கள்.
தலையணியில் பொருத்திய காட்சித்திரை (Head-Mounted Display – HMD)
இவை யாவற்றையும்விட முழுமையான மூழ்கவைக்கும் அனுபவம் பெற காட்சித்திரை பொருத்திய VR தலையணி தேவை. இது வெளியுலகை முழுவதும் மறைத்துவிட்டு VR காட்சியை மட்டுமே காட்டும். மேலும் நீங்கள் தலையை இடமும் வலமும், மேலும் கீழும், முன்னும் பின்னும் எவ்வளவு வேண்டுமானாலும் திருப்பிப் பார்க்கலாம். வெளிப்புறப் பார்வையாளராக இல்லாமல் நீங்களும் காட்சிச் சூழலின் ஒரு அங்கமாகவே உணர்வீர்கள்.
அட்டைப்பெட்டியைப் பயன்படுத்தி திறன்பேசியிலேயே VR பார்க்கலாம்
அதிகம் செலவுசெய்து VR தலையணி கூட வாங்கவேண்டியதில்லை. குறைந்த செலவில் உங்கள் திறன்பேசியைப் பொருத்தக்கூடிய அட்டைப்பெட்டி தலையணி (படத்தில் காண்பதுபோல) கிடைக்கிறது. திறன்பேசியில் VR செயலியை நிறுவி, அட்டைப்பெட்டியில் செருகி VR காட்சிகளை முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: இணைய உலாவியிலேயே ஊடாடும் (interactive) 3D காட்சிகள்
தலையணி (headset) இல்லாமலும் ஊடாடும் 3D காட்சிகள் பார்க்க இயலும். இணைய உலாவியில் WebGL தொழில்நுட்பம். WebGL காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நிரலகம் three.js. VR காட்சி உருவாக்க WebAR/WebXR தொழில்நுட்பங்கள். WebXR காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் சட்டகம் A-Frame.