எளிய தமிழில் VR/AR/MR 15. விடுநிலைகள் (Degrees of freedom – DoF)

மூழ்கவைக்கும் அனுபவமும் விடுநிலைகளும்

மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய பார்வைப் புலம் (Field of View – FoV) என்ற கருத்துருவை முன்னர் பார்த்தோம். நாம் நகர்ந்தாலும், திரும்பினாலும் நாம் பார்க்கும் காட்சி அதற்கேற்றாற்போல் நகரவேண்டும் மற்றும் திரும்பவேண்டும். அதாவது பெயர்ச்சிக்கான (translation) இடநிலை பின்தொடர்தல் (positional tracking) மற்றும் சுழற்சிக்கான (rotation) நோக்குநிலை பின்தொடர்தல் (orientation tracking) இரண்டுமே மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய அவசியம் தேவை. இவற்றைப் புரிந்துகொள்ள நாம் விடுநிலைகள் என்ற கருத்துருவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுநிலைகள் என்றால் என்ன?

ஒரு முப்பரிமாண வெளியில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு பொருள் ஆறு விதங்களில் இயங்க முடியும். அதாவது மூன்று பெயர்ச்சி இயக்கங்கள் (translational movements) மற்றும் மூன்று சுழற்சி இயக்கங்கள் (rotational movements). இதைப் புரிந்துகொள்ள படத்தில் காட்டியதுபோல அதிகம் கட்டுப்பாடு இல்லாத வானூர்தி மற்றும் படகு நல்ல எடுத்துக்காட்டுகள்.

வேறுவிதமாகச் சொல்லப்போனால் தனித்தனியாகச் சார்பின்றி மாறக்கூடிய (independently variable) இயக்கங்களை விடு நிலைகள் என்று கூறலாம்.

விடுநிலைகளுக்கு வானூர்தி மற்றும் படகு எடுத்துக்காட்டுகள்

விடுநிலைகளுக்கு வானூர்தி மற்றும் படகு எடுத்துக்காட்டுகள்

பெயர்ச்சி இயக்கங்கள் (translational movements)

படத்தில் காட்டியதுபோல நெடுக்கு அச்சில் (longitudinal axis) முன்பின் நகர்வு (surge), குறுக்கு அச்சில் (lateral axis) இடவலம் நகர்வு (sway), செங்குத்து அச்சில் (vertical axis) மேல்கீழ் நகர்வு (heave) ஆகிய மூன்றும் பெயர்ச்சி இயக்கங்கள்.

இவற்றை பெரும்பாலான தலையணிகள் வெளியேயுள்ள படக்கருவி அல்லது மற்ற உணரிகள் மூலம் பின்தொடர்கின்றன. ஒருசில தலையணிகள் மட்டுமே உள் உணரிகள் மூலம் பெயர்ச்சி இயக்கங்களைப் பின்தொடர்கின்றன.

சுழற்சி இயக்கங்கள் (rotational movements)

படத்தில் காட்டியதுபோல நெடுக்கு அச்சைச் சுற்றிச் சுழல்வதை நெட்டச்சு சுழற்சி (roll) என்றும், குறுக்கு அச்சைச் சுற்றிச் சுழல்வதை குறுக்கச்சு சுழற்சி (pitch) என்றும், செங்குத்து அச்சைச் சுற்றிச் சுழல்வதை குத்தச்சு சுழற்சி (yaw) என்றும் சொல்கிறோம். நீங்கள் உங்கள் தலையைச் சாய்த்து அல்லது திருப்பும்போது, உங்கள் தலையணி அந்த இயக்கங்களை உணர்ந்து அதற்கேற்ப அதன் காட்சியை மாற்றுகிறது. 

முடுக்கமானி (accelerometer), சுழல் காட்டி (gyroscope) மற்றும் காந்தமானி (magnetometer) ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிலைம அளவீட்டுக் கருவி (Inertial Measurement Unit – IMU) சுழற்சி இயக்கங்களைப் பின்தொடர்கிறது.

நன்றி

  1. Modeling and Optimal Control of Nonlinear Underactuated Mechanical Systems – a Survey

இத்தொடரில் அடுத்த கட்டுரை: AR உருவாக்கும் திறந்தமூலக் கருவிகள்

பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் (viewpoint tracking). AR.js ஸ்டுடியோ. AR கருவித்தொகுதி (ARtoolkit). ஏஆர் கோர் (ARCore). AR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்.

ashokramach@gmail.com

%d bloggers like this: