திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 5. ஏன் திறந்த மூல நிரலாளர்களுக்கு வேலை கிடைப்பது எளிது?

2012 இல் நான் முதல் திறந்த மூல மாநாட்டுக்கு சென்றதிலிருந்து எனக்கு தொழில்நுட்பம் மிகவும் பிடித்துவிட்டது.

ஆட்சேர்ப்பு செய்வதில் பல ஆண்டுகள் அனுபவத்துடன் பெருந்தரவு (big data) தனித்துறையாக உள்ள கிரேதார்ன் (Greythorn) நிறுவனத்தில் வேலையில் சேர முடிவு செய்தேன். நான் ஆஸ்கான் (OSCON) மாநாட்டுக்கு முன் சில மாதங்களாகவே பெருந்தரவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மாநாட்டுக்கு சென்றவுடன் அது அதிவேகமாக நடந்தது. அங்கு பல நிபுணர்கள் ஒரே இடத்தில் இருந்தனர், அது மட்டுமல்லாமல் அனைவரும் அவர்களுக்குத் தெரிந்ததை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்கவில்லை. அது அவர்கள் எனக்கு எதையும் விற்க விரும்பியதனால் அல்ல, அவர்கள் பணியாற்றும் துறையில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததால்.

திறந்த மூலம் மற்றும் பெருந்தரவை ஒரு தொழில்துறை என்று சொல்வதைவிட ஒரு சமூகம் என்றே உணரவேண்டும் என்பது எனக்குப் படிப்படியாக புலனாயிற்று. அதனால் தான் இப்பொழுதெல்லாம் திறந்த மூலம் பற்றி நான் கற்றுக்கொண்டதை தங்கள் வேலைவாழ்க்கையை தொடங்குபவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

நிறுவனங்கள் ஏன் திறந்த மூல பங்களிப்பாளர்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றன

தேர்வர்கள் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களாக இருந்தால் மட்டும் போதாது அவர்களுக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருக்கவும் வேண்டும் என்று என்னுடைய பல வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். உங்களுக்கு ஒன்றைப்பற்றி அதீத ஆர்வம் இருக்குமானால் நீங்கள் வேலையில் இல்லாதபோது கூட அதைப்பற்றித்தானே நினைத்துக்கொண்டிருப்பீர்கள்.

“அவர்களது ஓய்வு நேரத்திலும் நிரல் எழுதுகிறார்களா?” “நான் அவர்கள் செய்த வேலையை எங்கே பார்க்க முடியும்?” “உண்மையில் அவர்களுக்கு என்ன செய்யப் பிடிக்கும்?” என்று என் வாடிக்கையாளர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். திறந்த மூல பங்களிப்பாளர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வுப் பெட்டிகளையெல்லாம் ஆம் என்று  குறியீடு செய்ய முடியும். அவர்களுடைய திட்டங்களும் அவர்களுடைய நிரலாக்கத் திறமையின் ஆதாரங்களும் திறந்த வெளியிலேயே உள்ளன.

தேர்வாளர்கள் ஏன் வேலைக்கு எடுக்க திறந்த மூல பங்களிப்பாளர்களை தேடுகின்றனர்

கைதேர்ந்த தொழில்நுட்ப தேர்வாளர்களுக்கு அந்த தொழில்நுட்பங்களும் அதில் அவர்கள் தேர்வு செய்யும் வேலையின் பங்கும் நன்கு புரிந்திருக்கும். அவர்கள் அதன்படியே உங்கள் திறமையை மதிப்பிடுவார்கள். ஆனால் எங்களில் பலருக்குத் தெரிய வந்தது என்னவென்றால் சிறந்த தேர்வர்கள் திறந்த மூலத்தில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள்.  ஆகவே பெரும்பாலும் நாங்கள் அங்கேயே எங்கள் தேடலைத் தொடங்குகிறோம். அற்புதமான ஒரு தயாரிப்பை உருவாக்கும் குழுவில் வேலை செய்யத் தகுந்த ஆர்வமுள்ள தேர்வர்களைக் கண்டுபிடிப்பதுதான் தேர்வாளர்களின் வேலை. இதன் மூலமாகத்தான் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பயனுள்ள சேவை செய்ய முடியும்.

அன்றாட வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு நன்றாக வேலை செய்யக்கூடிய தயாரிப்பை உருவாக்கும் குழுவில், நல்ல புத்தி கூர்மையான நபர்களை, கூட்டு முயற்சியாக வேலை செய்யச் சொன்னால் அது அவர்களை போதைப் பொருள் போன்று கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் என்ன? இது எனக்கு நன்றாகவே புரிகிறது.

திறந்த மூல பங்களிப்பாளர்கள் ஒரு சிறப்பான வேலைவாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிவகைகள் என்ன

நீங்கள் செய்யும் திறந்த மூல பங்களிப்பை ஆதாரமாக வைத்து உங்கள் வேலை வாழ்க்கையை வலுவாகக் கட்டியெழுப்ப நீங்கள் செய்யக்கூடிய பரவலாக அறியப்பட்ட செயல்கள் இவை: கிட்ஹப்பில் (GitHub) உங்கள் நிரல்களைப் பகிர்ந்து கொள்வது, திறந்த மூல திட்டங்களில் சேர்வது, மாநாடுகள் சென்று குழுக்கள் மற்றும் பட்டறைகளில் பங்கேற்பது முதலியன பயனுள்ளவைதான். ஆனால் இவற்றையெல்லாம் விட மிக முக்கியம் உங்களுக்கு எம்மாதிரி வேலையில் மன நிறைவு கிடைக்கும் என்று உணர்ந்து கொள்வதுதான்.

இம்மாதிரி கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்…

  • திறந்த மூல மென்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்றிக் கடனைத் தீர்க்க அதே சமூகத்திற்கு திருப்பி அளிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது உங்களுக்கு மிக முக்கியமா? நான் சந்திக்கும் சிறந்த தேர்வர்கள் சிலர் இதை வலியுறுத்துகின்றனர். இது அவர்களின் வேலை திருப்திகரமாக அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
  • நீங்கள் திறந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இந்த சூழலில் பெரும்பாலும் கலாச்சாரம் வேறாக உள்ளது. இங்கு உங்களுக்கு ஒத்து வரும் என்று தோன்றினால் இதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
  • நீங்கள் குறிப்பாக யாருடனாவது வேலை செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் அந்த திட்டங்களில் சேர முயற்சி செய்யலாம். எனினும், அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால்  நீங்கள் மெச்சும் ஒருவரிடமிருந்து கற்பது எளிதாகத்தானே இருக்கும்.

உங்கள் வேலைவாழ்க்கையின் முன்னுரிமைகள் தெரிய வந்தால், எந்த வேலை அந்த இலக்கை நோக்கி நெருக்கமாக செல்ல வழி செய்யவில்லை என்று வடிகட்ட எளிதாக இருக்கும். உங்கள் தேர்வாளரால் அதற்குத் தகுந்த நிறுவனத்தையும் அணியையும் பரிந்துரை செய்யவும் இயலும்.

நான் நிரல் பங்களிப்பு செய்வதில்லை என்றாலும், திறந்த மூலத்தில் தங்கள் வேலை வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களைப் பற்றி நான் கற்றதை எப்போதும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த சமூகம் புத்தி கூர்மையுடன் ஆதரவாகவும் இருப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நான் இதில் ஒரு சிறிய பகுதியாகவாவது இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Lindsey-Thorne

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிலிண்ட்ஸே தார்ன் (Lindsey Thorne) மனித வளம் மற்றும் ஆட்சேர்ப்புத் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக  வேலை செய்துவருகிறார். 2012 ல் திறந்த மூலம் மற்றும் தரவு அறிவியல் துறை ஆட்சேர்ப்பில் தனித்துறை வல்லுநரானபின் இத்துறையில் உள்விவரம் தெரிந்தவர் என்றும் புகழடைந்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஆஸ்டின் அதற்கு அப்பாலும் நிறுவனங்களையும் நல்ல தேர்வர்களையும் லிண்ட்ஸே இணைத்துள்ளார்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: