வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03 ~தமிழினியன்

 

இந்தக் கட்டுரையில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகள், வேர்ட்பிரசை நிறுவிய பிறகு, வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

முதலில் வேர்ட்பிரசை உங்கள் வழங்கியில் நிறுவ குறைந்தபட்சமாக சில கட்டாயத் தேவைகள் இருக்க வேண்டும். அவை

 

  • PHP 5.2.4 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு
  • MySQL 5.0 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு

உங்கள் வழங்கியில் இந்த குறிப்பிட்ட பதிப்புகள் இல்லாவிட்டால், வேர்ட்பிரசு 3.2க்கு மேலானவற்றை நிறுவ முடியாது.

* PHP 4.3 *MySQL 4.1.2

இவை இருந்தால் நீங்கள் வேர்ட்பிரசு3.1 நிறுவிக்கொள்ளலாம். இப்போதிருக்கும் வேர்ட்பிரசின் புதிய பதிப்பு 3.4. இன்னும் சில மாதங்களில் (இந்த வருட இறுதிக்குள்) வேர்ட்பிரசின் புதிய பதிப்பு 3.5 வரப்போகிறது. இதுவும் இல்லையென்றால் நீங்கள் வேறு வழங்கிக்கு மாறிக்கொள்வதே சிறந்தது. வேர்ட்பிரசு + PHP + MySQL இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் புரிந்து கொள்ள, மேலே உள்ள படம் உதவும்.

 

வேர்ட்பிரசை நிறுவுவதற்கு எக்கச்சக்க வழிமுறைகள் இருக்கின்றன. வேர்ட்பிரசு மென்பொருளை wordpress.org/download/ இங்கிருந்து தரவிறக்கி, உங்கள் வழங்கியில் நிறுவும் முறையும், fantastico, one click install, quick install போன்ற முறைகளும் புகழ் பெற்றவை.

சிபேணல் (Cpanel) சேவையை வழங்கிச் சேவையாளர்கள் உங்களுக்கு வழங்கியிருந்தால், நீங்கள்

cpanel->fantastico/quick install

இவற்றில் எதாவது ஒன்றைப் பயன்படுத்தி இலகுவாக வேர்ட்பிரசை நிறுவிக்கொள்ளலாம். தரவுத்தளம் (Database) உருவாக்குதல், wp-config.php போன்ற கோப்புகளை திருத்த வேண்டிய வேலையெல்லாம் உங்களுக்கு இல்லை. துவக்க நிலை பயனாளர்களுக்கு இது ஆகச்சிறந்த வழிமுறை.

[பின்வரும் முறை துவக்க நிலைப் பயனாளர்களுக்கு உகந்தது அல்ல, உங்கள் வழங்கிச்சேவையில் மேற்கூறிய நிறுவல் கருவிகள் இல்லாதபட்சத்தில் இம்முறையை உபயோகித்துப் பாருங்கள்.

இம்முறையிலேயே உங்கள் கணினியில் நீங்கள் லோக்கலாகவும் வேர்ட்பிரசை நிறுவ இவ்வழிமுறைகளைப் பின்பற்றலாம்.]

ஐந்து நிமிட நிறுவல் முறை: (ஆமாம், நன்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு இந்தமுறையில் வேர்ட்பிரசை நிறுவ ஐந்து நிமிடங்களுக்குள்தான் ஆகும்)

 

  • முதலில் இங்கிருந்து புதிய மேம்படுத்தப்பட்ட wordpress.org/download/ வேர்ட்பிரசைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.நீங்கள் முழுக்க முழுக்க தமிழ் இடைமுகப்பைக் கொண்ட வேர்ட்பிரசை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம் ta-lk.wordpress.org/

  • அடுத்ததாக MySQL தரவுத்தளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்தத் தரவுத்தளத்தின் பெயர், இந்தத் தரவுத்தளத்திற்கான பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை குறித்து வைத்திருங்கள், அடுத்தது உங்களுக்கு இது தேவைப்படும்.

  • நீங்கள் தரவிறக்கிய வேர்ட்பிரசின் கோப்பில் உள்ள Wp-config-sample.php என்ற கோப்பின் பெயரை wp-config.php என்று பெயர் மாற்றம் செய்துவிட்டு, அந்த கோப்பை சாதாரண உரைத் திருத்தியைக் கொண்டு திறந்து கொள்ளுங்கள், அந்தக் கோப்பினுள் பின்வருமாறு இருக்கும் இடத்தில் தரவுத் தளத்தின் பெயர், பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை பின்வருமாறு உள்ளிட்டு சேமிக்கவும்

    MySQL settings – you can get this info from your web host

    /* The name of the database for wordpress*/ define(‘DB_NAME’,’உங்கள் தரவுதளத்தின் பெயர்’)

    /*MySQL database username */ define(‘DB_USER’,’தரவு தளத்தின் பயணர் பெயர்’)

    /*MySQL database password */ define(‘DB_PASSWORD’,’ கடவுச்சொல்’)

  • சேமித்த இந்த கோப்பினைக்கொண்ட வேர்ட்பிரசின் மொத்த அடைவுகளையும், உங்கள் வழங்கியில், எங்கு வேர்ட்பிரசை நிறுவ வேண்டுமோ அங்கு சேர்த்து விடுங்கள்.

  • நீங்கள் வேர்ட்பிரசின் அடைவுகளை /public_html அடைவினுள் சேர்த்திருந்தால், உங்கள் உலாவியில் yourdomainname.com/wp-admin/install.php இந்த இடத்திற்குச் செல்லுங்கள்.

  • பக்கத்தில் உள்ள படத்தில் உள்ளது போன்ற இணைய பக்கம் உங்களுக்கு கிடைக்கும், அதில் உங்கள் தளத்தின் பெயர், உங்கள் தளத்திற்கான பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிடுங்கள். பொதுவாக பயனர் பெயரை admin என்று வைக்காமல், உங்கள் விருப்பப்படி அமைக்கவும். பயனர் பெயரை அட்மின் என்று வைக்கும் போது hackerகளுக்கு நீங்கள் அவர்களின் வேலையில் பாதியை மிச்சப்படுத்துகிறீர்கள் என்று பொருள்.

  • இந்த நிலையைக் கடந்த பிறகு நீங்கள் வேர்ட்பிரசை பயன்படுத்துவதற்கு இன்னும் ஒரே நிலைதான் மிச்சமுள்ளது. அது உங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் நுழைவதற்கு புகுபதிகை செய்யவேண்டியது மட்டுமே. இனி வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவுதலைப் பார்ப்போம்.

  • வேர்ட்பிரசின் இலவச வார்ப்புருக்கள் wordpress.com/extend/themes இந்த இடத்தில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

  • இதுபோக நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டகத்திலிருந்து (Dashboard) Appearance themes Install themes சென்று, உங்களுக்குத் தேவையான வார்ப்புருவைத் தேடி நிறுவிக்கொள்ளலாம்.

  • கட்டண வார்ப்புருக்கள் அல்லது நீங்களே உருவாக்கிய வார்ப்புருக்கள் அல்லது அங்கு பட்டியலிடப்படாத பிற வார்ப்புருக்களை Appearance themes Install themesupload சென்று நீங்கள் நிறுவிக்கொள்ளலாம்.

  • அல்லது ftp வழியாகச் சென்று ____/wp-content/themes இந்த அடைவினுள் வார்ப்புரு கோப்பினை விரித்து இட்ட பிறகு. Appearance → themes சென்று உங்களுடைய வார்ப்புருவை செயற்படுத்த வேண்டும்.

  • நீட்சிகளையும் மேற்கூறிய வழிமுறையிலே நிறுவிக்கொள்ளலாம். இலவச நீட்சிகள் wordpress.com/extend/plugins இங்கு பட்டியிலடப்பட்டிருக்கின்றன. அல்லது உங்கள் கட்டுப்பாட்டகத்திலிருந்தே Plugins என்ற பக்கப்பட்டியை சொடுக்கி, விருப்பப்பட்ட நீட்சியைத் தேடி நிறுவிக்கொள்ளலாம். அல்லது, இந்த இடத்திலிருந்தே நீட்சிகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.

  • ftp வழியாகச் சென்று ____/wp-content/plugins என்ற அடைவினுள் வார்ப்புரு கோப்பினை விரித்து இட்ட பிறகு. உங்களுடைய கட்டுப்பாட்டகத்திலிருந்து நீட்சியை செயற்படுத்த வேண்டும்.

    தொடரும்—>

%d bloggers like this: