இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது

அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை.

2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன தட்டச்சுகளை உருவாக்குகிறது. சித்திரவேலைப்பாடுடைய கையெழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் 15 பேர் கொண்ட இந்த ஏக் டைப் (Ek Type) குழு, தட்டச்சு வடிவமைப்பாளர்கள் கிரிஷ் தல்வி, நூபுர் டாட்டே மற்றும் சாரங் குல்கர்னி ஆகியோரால் நிறுவப்பட்டது. தல்வி மும்பையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்தவர், டாட்டே மற்றும் குல்கர்னி மும்பையில் சர் ஜே. ஜே. செயலாக்கக் கலைக் கழகத்தில் படித்தவர்கள். இதுவரை இவர்கள் ஆறு கட்டற்ற திறந்த மூல ஒருங்குறி எழுத்துருக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை எவரும் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக, பாலு எழுத்துரு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஒரியா போன்ற 10 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இது,  கூகிள் எழுத்துரு புள்ளிவிபரப்படி, உலகம் முழுவதும் 5,000 வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவனகரி மற்றும் லத்தீன் எழுத்துரு முக்தா தலைமை அமைச்சர் அலுவலகம் முதலான தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 45,000 வலைத்தளங்களிலும் இடம்பெற்றுள்ளது.

“… ஒவ்வொரு மொழியும் ஒரு கட்டமைப்பு, இழை நயம், சீர் மற்றும் தனித்துவமான காட்சி இலக்கணத்தை உருவாக்கும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது,” என்று குல்கர்னி விளக்கினார். “… பல நாட்டவர்களும் இந்திய எழுத்துருக்களை உருவாக்குகின்றனர். அவர்கள் வடிவமைப்பிலும் தொழில்நுட்பத்திலும் மிகவும் நன்றாகச் செய்கிறார்கள். ஆனால் எங்களைப் பொருத்தவரை அவர்கள் மொழி இலக்கண முறைப்படி செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. “என்று அவர் கூறினார்.

“எங்கள் எழுத்துருக்களை நாங்கள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிடுவது ஏனென்றால், நாங்கள் துவங்கியபோது இம்மாதிரி எங்களுக்கு எதுவும் தயாராகக் கிடைக்கவில்லை. நாங்கள் நிறைய முயற்சியும் பிழை திருத்தமும் சுழற்சியாகச் செய்ய வேண்டியிருந்தது”, என்று இணை நிறுவனர் நூபுர் டாட்டே விளக்கினார். இப்போது, வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள் தங்கள் சொந்த இந்திய மொழிகளுக்கான தட்டச்சுகளை உருவாக்க ஒரு வழி ஏற்படுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

மரியா தாமஸ் எழுதிய முழுக் கட்டுரை இங்கே

திறந்த மூல தமிழ் எழுத்துரு முக்த மலர் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ் எழுத்துரு முக்த மலரின் மூலக் கோப்புகள் கிட்ஹப்-இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

திறந்த மூல தமிழ் எழுத்துரு பாலு தம்பி இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ் எழுத்துரு பாலு தம்பியின் மூலக் கோப்புகள் கிட்ஹப்-இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

முக்கியக் குறிப்பு: இந்த திறந்த மூல நிரலில் திருத்தங்களைச் செய்ய விண்டோஸ் அல்லது மேக்-ல் மட்டுமே இயங்கக் கூடிய உரிம கட்டணம் செலுத்திய கருவி ஃபான்ட்லேப் ஸ்டுடியோ (Fontlab Studio) தேவைப்படுகிறது.

%d bloggers like this: