எளிய தமிழில் Car Electronics 10. இயங்கும் பாதுகாப்பு அமைப்புகள்

ஊர்தியின் வடிவமைப்பில் புவியீர்ப்பு மையம் (center of gravity) தாழ்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது எளிதில் குடைசாயாமல் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஊர்தி விபத்துக்குள்ளாகி மோதினாலும்கூட உள்ளே இருக்கும் பயணிகளைப் பாதுகாக்க அடிச்சட்டமும் (Chassis) உடற்பகுதியும் வலுவாக இருக்கவேண்டும். எரிபொருள் கலன் எளிதில் தீப்பற்றிக் கொள்ளாமல்  வடிவமைக்கப்படவேண்டும். மானிப்பலகையில் (dashboard) இருக்கும் நெகிழி, இருக்கையிலுள்ள துணிகள், நுரை ரப்பர் (foam rubber) ஆகியவை ஒருக்கால் தீப்பிடித்தாலும் பரவாமல் இருக்க வேண்டும். இவை யாவும் பாதுகாப்பு அமைப்புகள்தான்.  இவற்றை இயங்காப் (passive) பாதுகாப்பு அமைப்புகள் என்று சொல்லலாம். மாறாக கீழ்க்கண்டவை இயங்கும் (active) பாதுகாப்பு அமைப்புகள்.

காற்றுப்பைகள் (Airbags)

வண்டி வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது அவசரமாக பிரேக்கை அழுத்தினால் நீங்கள் முன்பக்கம் சாய்வீர்கள். அதிவேகத்தில் நீங்கள் முன்புறம் தள்ளப்பட்டு மோதி அடிபடவும் கூடும். இதைத் தவிர்க்க இருக்கை பெல்ட் பாதுகாப்பாக உதவுகிறது. அதிவேகமாகச் செல்லும் வண்டி மற்றொரு வண்டியின் மீதோ அல்லது தடுப்புச்சுவர் மீதோ நேர்முகமாக மோதினால் (head-on collision) விளைவு இன்னும் மோசமாக இருக்கும். இம்மாதிரி நேரங்களில் முன்னிருக்கையில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் பயணியின் உயிரைக் காப்பதுதான் காற்றுப்பையின் வேலை. இருக்கை பெல்ட் தான் முதல் நிலைப் பாதுகாப்பு. காற்றுப்பை இரண்டாம் நிலைப் பாதுகாப்பாகச் செயல்படுகிறது.

இது எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம். நேர்முக மோதல் ஏற்பட்டவுடன் உணரி கணினிக்குத் தெரிவிக்கிறது.  அது உடன் காற்றுப் பையின் இயக்கியை முடுக்கிவிடும். இது காற்றுப் பையை அதிவிரைவில் உப்பவைக்கும். இதன் விளைவாக ஓட்டுநரும் பயணியும் முன்னால் இருக்கும் திருப்பு வளையம் (steering wheel), மானிப்பலகை (dashboard) ஆகியவற்றில் மோதாமல் தடுத்து இடையில் இருக்கும் உப்பிய காற்றுப்பை மோதலை மென்மையாக்கி விடும்.

டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்புகள் (Tire Pressure Monitoring Systems – TPMS)

உங்கள் ஊர்தியில் உள்ள டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பின் (TPMS) நோக்கம், டயர்களில் காற்றழுத்தம்  குறைவாக இருப்பதால் அப்படியே ஓட்டுவது அபாயகரமானது மேலும் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிப்பதாகும். இது தவிர காற்றழுத்தம்  குறைவாக இருந்தால் எரிபொருளும் வீணாகும், டயர் தேய்மானமும் அதிகரிக்கும். TPMS டயர் குறிகாட்டி ( low tire pressure indicator) என்பது மஞ்சள் நிறச் சின்னமாகும். இது மானிப்பலகையில் (dashboard) டயர் குறுக்குவெட்டு வடிவத்தில் குதிரை லாடத்துக்குள் ஆச்சரியக்குறி போட்டது போல இருக்கும். 

இரண்டு விதமான டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. ஒன்று நேரடி, மற்றொன்று மறைமுகம். நேரடி TPMS ஆனது ஒவ்வொரு டயருக்குள்ளும் அழுத்தம் கண்காணிப்பு உணரிகளைப் பயன்படுத்துகிறது. மறைமுக TPMS சக்கர வேக உணரிகளை நம்பியுள்ளது. இந்த உணரிகள் ஒவ்வொரு சக்கரமும் ஓடும் வேகத்தை அளவிடுகின்றன. ஒரு சக்கரம் எதிர்பார்த்ததை விட வேகமாகச் சுழலத் தொடங்கினால், கணினியானது டயரில் காற்றழுத்தம் குறைவாக இருப்பதாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப ஓட்டுநரை எச்சரிக்கும்.

நிலைத்தன்மை கட்டுப்பாடு (Stability Control)

Electronic-stability-control

மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு

சாலையில் உங்கள் முன்னால் செல்லும் ஊர்தியிலிருந்து திடீரென்று ஒரு பெரிய பெட்டி நழுவிக் கீழே விழுகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் காரின் வேகத்தைக் குறைக்க முதலில் பிரேக் போடுவீர்கள். மேலும் இடையூறைத் தவிர்க்க வண்டியை விரைவாக வெளிநோக்கித் திருப்புவீர்கள். அடுத்து சாலையை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க மறுபடியும் உள்நோக்கித் திருப்புவீர்கள். இவற்றையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் கைமுறையாகச் செய்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கக்கூடும். இதைத் தவிர்க்க ஊர்திகளில் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (Electronic Stability Program – ESP or  Electronic Stability Control – ESC) பிரபலமாகி வருகிறது.

திருப்பு வளையத்திலும் (steering wheel) சக்கரங்களிலும் உணரிகள் பொருத்தப்படும். இவற்றின் மூலம் கார் தொடர்ந்து ஓட்டுநர் செயல்பாடுகளுக்கு உட்பட்டு ஓடுகிறதா என்று ESC கணினி கண்காணித்துக் கொண்டேயிருக்கும். மேற்கண்ட பிரச்சினை ஏற்பட்டால் ESC ஆனது உடன் ABS ஐ ஈடுபடுத்துகிறது, இது ஒருபக்கம் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்தும் தவிரவும் சக்தி வெளியீட்டையும் தேவைக்கேற்ப அளிக்கும். இது ஓட்டுநர் விரைவாகச் செயல்படவும், கிடைக்கும் இழு சக்தியைப் பயன்படுத்திக் காரைக் கட்டுப்படுத்தவும் வழிசெய்கிறது.

நன்றி

  1. Electronic Stability Control (ESC) Simply Explained

இத்தொடரில் அடுத்த கட்டுரை: உமிழ்வு கட்டுப்பாடு (Emission control)

நைட்ரஜன் ஆக்சைடுகள் உணரி (NOx Sensor). இரண்டு வழி வினையூக்கி மாற்றிகள். மூன்று வழி வினையூக்கி மாற்றிகள். உமிழ்வு வாயு மறுசுழற்சி (Exhaust Gas Recirculation – EGR). உமிழ்வு கட்டுப்பாடு சரியாக வேலை செய்யாவிட்டால் ஓட்டுநருக்கு எப்படித் தெரியவரும்?

ashokramach@gmail.com

%d bloggers like this: