தொ. பரமசிவன் மின்னூல்கள் தளம் வெளியீடு

தொ. பரமசிவன் அவர்களது நூல்களைத் தொகுத்து மின்னூல்களாக, ஒரு தனி வலைத்தளமாக வெளியிடுகிறோம்.

thopa.FreeTamilEbooks.com

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (1950 – திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

தொ. பரமசிவன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்துக்களை மின்னூல்கள் வடிவில் கொண்டுவருவதில் கணியம் அறக்கட்டளை மகிழ்ச்சி அடைகிறது. நாட்டுடமையாக்கப்பட்ட அவரது எல்லா நூல்களும் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த மாத்திரத்தில் ஒளி வருடல் செய்து வழங்கியுள்ளோம். ஆனால் பல நூல்கள் இன்னும் கிடைக்க வில்லை. அவையும் இந்த தளத்தில் கிடைக்க நாம் முயற்சி செய்கிறோம். இதன் மூலம் தொ. பரமசிவன் குறித்த ஒரு தகவல் திரட்டு இந்த தலைமுறைக்கு கிடைக்கும்.

பொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இவை எந்த இலாப நோக்கமும் இல்லாதது. இங்குக் காணப்படாத பதிப்புகள் தங்களுக்குக் கிடைத்தால் அதைத் தாங்கள் archive.org பதிவேற்றிவிட்டு எங்களுக்கு kaniyamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். நாங்கள் அதனை எங்கள் பதிப்புகள் பட்டியலில் சேர்த்துவிடுவோம். அல்லது நேரடியாக எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் போதும், அதை நாங்கள் archive.org பதிவேற்றுவதோடு எங்கள் வலைதளத்திலும் சேர்த்துவிடுவோம். இது தமிழ் ஆய்வாளர்களுக்கான சமூகப்பணி. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு அதன் மூலப் பதிப்புகளைப் படிக்கச் செய்வதன் மூலம் தரமான ஆய்வேடுகளை உருவாக்க முடியும். பெரும்பாலும் ஏழைகளே தமிழ்நாட்டில் தமிழ் ஆய்வுப் படிப்புகளைப் படித்துவருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காக அலையும் நேரத்தை மீதப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய முன்னெடுப்பை செய்கிறோம் என்பதை இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறோம்.

இத்தளத்தோடு தொடர்புடைய பலருக்கு இந்நேரத்தில் நன்றியைக் கூறவேண்டும். தமிழ் நலத்தில் மாறாத பற்றுகொண்டிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தினருக்கும், கணியம் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான அன்வர் அவர்களுக்கும் நன்றியைக் கூறக் கடமைபட்டுள்ளோம்.

அருந்தமிழ் அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கி, அறிவை உலகோர் அனைவரும் எளிதில் பெற உறுதுணை புரிந்து வரும் தமிழ்நாடு அரசுக்கு பல்லாயிரம் நன்றிகள். தமிழிணைய மின்னூலகம் குழுவினருக்கு www.tamildigitallibrary.in நன்றிகள்.

“Scanning is Spinning” என்ற தாரக மந்திரத்தோடு உலகின் அறிவுச் செல்வங்களை எல்லாம் தேடி, உரிமை பெற்று, archive.org தளத்தில் பதிவேற்றி வரும் Carl Malamud, Om Shiv Prakash ஆகியோருக்கும் நன்றிகள்.

கணியம் அறக்கட்டளை, சென்னை. மின்னஞ்சல் : kaniyamfoundation@gmail.com

%d bloggers like this: